×
Saravana Stores

தொடர்மழையால் சாலை சேதம் கொள்ளிடம் ஆற்றின் கரையை வலுப்படுத்த வேண்டும்-பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல்

சிதம்பரம் : கொள்ளிடம் ஆற்றின் கரைகளை வலுப்படுத்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரை கடலூர் மாவட்டத்தில் உள்ளது. தென்கரை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கரையையொட்டி ஜெயங்கொண்டபட்டினம், மேலபருத்திகுடி, வெள்ளுர், நலன்புத்தூர், கருப்பூர், சின்னகாரமேடு, தீத்துக்குடி, வல்லத்துறை, சி.அரசூர், தில்லைநாயகபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வடகரை கீழணை முதல் சிதம்பரம் அருகே  நீர் கடலில் கலக்கும் பகுதியான சின்னகாரமேடு கிராமம் வரை 60 கி.மீ தூரம் ஆகும்.  இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் கொள்ளிடம் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு ரூ.108 கோடியில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. இதில் மினி பேருந்து வசதி செய்யப்பட்டதால் மக்கள் வரவேற்றனர். இந்நிலையில் கீழணை இருக்கும் அணைக்கரைக்கு விரைவில் செல்லும் வழியாகவும் இந்த சாலை இருந்தது. மேலும் விவசாயிகள் விளை நிலங்களில் விளையும் பொருட்களை விரைவில் நகரங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த சாலை பேருதவியாக இருந்தது. தொடர் மழையால் தார்சாலை சிதிலமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் 60 கி.மீ தூரத்தில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருங்கல் கொட்டப்பட்டு அணையை பலப்படுத்த வேண்டும் எனவும் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சரியில்லாத இடங்களை சரி செய்ய அரசிற்கு ரூ.150 கோடியில் திட்டம் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. தற்காலிகமாக கரையில் சிதிலமடைந்த பகுதிகளை கருங்கற்களை கொட்டி சரிசெய்யும் வகையில் ரூ.16 கோடியில் திட்டம் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதில் எது வந்தாலும் இதற்கான பணிகள் தொடங்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் தென்கரையை வலுபடுத்துவது உள்ளிட்ட பல இடங்களை சீரமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தென்கரை பொதுப்பணித்துறை திருச்சி மண்டலத்திற்கு உட்பட்டது. இந்த பாகுபாடுகளை களைய கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியாக உள்ள காட்டுமன்னார்குடி, சிதம்பரத்தை திருச்சி பொதுப்பணித்துறை மண்டலத்தில் இணைக்க வேண்டும் அப்படி இணைத்தால் தான் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதுகுறித்து தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுஅனுப்பி உள்ளனர்….

The post தொடர்மழையால் சாலை சேதம் கொள்ளிடம் ஆற்றின் கரையை வலுப்படுத்த வேண்டும்-பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Kotam river ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு...