×

கோடப்பமந்து பகுதியில் நிலச்சரிவை தடுக்கும் ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பம் ஆய்வு

ஊட்டி : ஊட்டி காந்தல் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம், அறிவுசார் மையம் மற்றும் கோடப்பமந்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்த்து நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் அறிவை வளர்த்து கொள்ளும் வகையிலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று போக்குவரத்துறை சிறப்பு செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். அப்போது அறிவுசார் மைய கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நவீன வசதிகளுடன் கட்டப்படும் இந்த அறிவுசார் மையத்தின் மூலம் இளைய தலைமுறையினருக்கு பயிற்சி வகுப்புகள், மின் கற்றல் தளங்கள் உள்ளிட்ட வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும். ஒரே இடத்தில் போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், வினா வங்கிகள், நாளிதழ்கள் போன்றவற்றை படிக்கலாம். இளைஞர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமான பணிகளை அவசர கதியில் மேற்கொள்ளாமல் தரமாகவும் குறித்த நேரத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊட்டி – கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அதனை தடுக்கும் நோக்கில் சோதனை முயற்சியாக மண்ணில் ஆணி பொருத்தி ஜியோ கிரிட் மூலம் சணல் வலை அமைத்து ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்த்து நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் ஆய்வு செய்து தொழில்நுட்பம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், பொறியாளர் இளங்கோவன், ஊட்டி ஆர்டிஓ துரைசாமி, ெநடுஞ்சாலைத்துறை ஊட்டி கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்….

The post கோடப்பமந்து பகுதியில் நிலச்சரிவை தடுக்கும் ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பம் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kodapamandu ,Feedi ,Library ,Intellectual Centre ,Oodi Kanthal ,Gotamanth ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி