×

கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்

செங்காளிபாளையம், கோவை

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்காளிபாளையம் ஊரில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் கோமாளிரங்கன். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு செங்காளிபாளையம் ஊரில் வசித்து வந்த அரங்கன் பசுமாடுகள் சில வளர்த்து வந்தார். தனது மாடுகள் மட்டுமன்றி ஊரில் சிலரது வீட்டுப் பசுமாடுகளையும் அப்பகுதியிலுள்ள வனத்திற்கு இவர் மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்வார். காலையில் செல்லும் இவர் மாலை வேளையில் மாடுகளுடன் வீடு திரும்புவார்.
கண்ணபிரானை வணங்கிவந்த அரங்கன். தன்னை கண்ணனின் அம்சமாக பாவித்து அதன்படியே நடந்துகொள்வார். எல்லோரிடமும் குறும்பாகவே பேசுவார். கேலியும், கிண்டலுமாக பேசுவதில் கை தேர்ந்தவர். அதனால் இவரை எல்லோரும் கோமாளி மாதிரி பேசாதே என்று சொல்லி, சொல்லியே இவர் இல்லாத நேரத்தில் அரங்கனை கோமாளி நாயக்கர் என்றே சொல்வதுண்டு. பட்டப்பெயராக இருந்தது.

பின்னர் அப்பெயரே நிலைபெற்று விட்டது. அரங்கன் புல்லாங்குழலை எப்போதும் கையில் வைத்திருப்பார். பால் கறக்க ஒத்துழைக்காத மாடுகள் முன் போய் நின்று புல்லாங்குழலை அரங்கன் வாசித்தால் அந்த மாடு உடனே பால் கொடுக்கும், அந்தளவிற்கு அரங்கனின் புல்லாங்குழல் இசைக்கு வலிமை உண்டு.
இப்படி பல்வேறு விதமான நற்குணங்கள் கொண்ட அரங்கனுக்கு மாடுகளுக்கு வரும் அனைத்து நோய்களுக்கான வைத்தியம் பார்க்கவும் தெரியும். அந்த பச்சிலை வைத்தியம் பார்க்கும் கலையையும் கற்றிருந்தார். இதனால் அக்கம் பக்கத்து கிராமங்களிலெல்லாம் கோமாளி நாயக்கரிடம் மாட்டை ஓட்டிச்சென்றால் உடனே மாடுகளுக்கு வந்த நோய் மாறிவிடும் என்பார்கள். அந்தளவிற்கு கோமாளி அரங்கன் நற்பெயர் பெற்றிருந்தார் மாடுகளுக்கான சித்த மருத்துவத்தில்.
ஒரு நாள் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த அரங்கன் இடிதாக்கி இறந்து போனார்.

அவர் இறந்த இடத்திலேயே அவரது உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்தனர். அரங்கன் இறந்து ஓராண்டு முடிந்த நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மேல் ஒரு பீடம் கட்டி அதன் மேல் நடுகல் வைத்தனர். அப்பகுதியைச் சேர்ந்த வெங்கய்யா என்பவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று வாமநோய் வந்து அவதிப்பட்டது. பல வைத்தியர்கள் மூலம் வெவ்வேறு விதமான வைத்தியம் பார்த்தும் அந்த மாட்டிற்கு வந்த வாமநோய் மாறவில்லை. அந்த பசுமாடு சரியாக புல், வைக்கோல் எதுவும் உண்ணமுடியாமல் மெலிந்து போனது. இறக்கும் தருவாயில் அந்த பசுமாட்டை பத்திக்கொண்டு, வெங்கய்யா, கோமாளி அரங்கனை அடக்கம் செய்த இடத்திற்கு வந்தார். நடுகல் முன்னே பசுமாட்டை நிற்க வைத்து அந்த நடுகல்லுக்கு கற்பூரம் காட்டி விட்டு அங்கே நின்று கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்தார்.

பின்னர் வீட்டிற்கு பசுமாட்டை பத்திக்கொண்டு வந்தார். அன்றிரவு முதல் வைக்கோல் தின்னத் தொடங்கியது மாடு. பெரும் மகிழ்ச்சி அடைந்த வெங்கய்யன், அக்கம் பக்கம் இந்த தகவலைக்கூறி பெருமைகொண்டார். இதுபோல ஊரில் பலரும் கோமாளி அரங்கனால் தங்களது கால்நடைகளின் பிணியைப் போக்கிக் கொண்டனர். இந்த தகவல் அக்கம் பக்கம் கிராமங்கள் மட்டுமல்ல அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. ஈரோடு, நாமக்கல் மாவட்ட மக்களுக்கும் கோமாளி அரங்கனின் மகத்துவம் புரிந்தது.உடனே செங்காளிபாளையம் ஊர்மக்கள் மாண்டுபோன கோமாளி அரங்கன் ஆண்டவனாக நின்று நம்மைக் காக்கிறான் எனக் கருதி அவருக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். கோயிலில் சப்தகன்னியர், விநாயகர், கருப்பராயன் ஆகிய சந்நதிகள் உள்ளன.  கோமாளி அரங்கன் கண்ணனின் அம்சமாகவே வாழ்ந்ததால் விஷ்ணு சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

மாடு, ஆடுகளுக்கு உண்டாகும் நோய்களை குணப்படுத்த வேண்டி வரும் பக்தர்கள் கோமாளி அரங்கனுக்கு பாலாபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். பின்னர் அந்த பாலாபிஷேக தீர்த்தத்தை மாடு, ஆடு மீது தெளிக்கின்றனர். ஓரிரு நாளில் குணமாகிவிடுகிறது. இந்த அற்புதத்தை நிகழ்த்துகிறார் கோமாளி அரங்கன். கோயிலின் தலவிருட்சமாக விளங்கும் வேப்பமரத்தின் பட்டையை அரைத்து பசுவின் மடியில் தடவிய பின் பால் கறந்தால் அதிகமாக பால் சுரக்கிறது. இந்தக் கோயில் கோயம்புத்தூர் மாவட்டம் குப்பேபாளையம் அருகேயுள்ள செங்காளிபாளையத்தில் அமைந்துள்ளது.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags : Rangan ,
× RELATED அனைத்து தேர்தல்களிலும் 3 சதவீத உள்...