×

சூரியன் வழிபடும் வரதராஜ பெருமாள்

நாமக்கல் நைனாமலையில் அருள்பாலிக்கிறார்

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் இருக்கிறது பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில். பார்ப்பதற்கு சாய்வாகத் தோன்றும் நைனா மலையில் குவலய வல்லித்தாயார் சமேதராய் அருள்பாலிக்கிறார் வரதராஜப் பெருமாள். இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே பெருமாள் எழுந்தருளிய முதன்மை திருத்தலம் இது. பிரம்ம புராணத்தின் 16வது அத்தியாயத்தில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர் வைணவம் சார்ந்த ஆன்மீக ஆய்வாளர்கள்.
மெல்லிய சிற்பங்கள், எழிலூட்டும் கல்தூண்கள், ஏராளமான பாழிகள் கொண்ட நைனாமலையில் மிகவும் குறுகலான 3,700 படிகள் உள்ளது. இந்த படிகளை கடந்து சென்றால் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமாளை, மெல்லிய காற்று நம்மை தழுவும் நிலையில் கண்குளிர வழிபடலாம். மற்றொரு சிறப்பம்சமாக மலையின் முகட்டில் உச்சி முழுவதையும் உள்ளடக்கி கோயில் கட்டப்பட்டுள்ளது.

மலை மீது மகாமண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணன், வெண்ணைதாழ் கிருஷ்ணன், நரசிம்மர், வீரஆஞ்சநேயர், மன்மதன், ரதி, அய்யப்பன், தசாவதார தெய்வங்களையும் தரிசிக்கலாம். மலையடிவாரத்தில் காளான் என்னும் காவல் தெய்வத்தையும், படிகள் தொடங்கும் இடத்தில் வீர ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்திரன் இடியாய் இந்த மலையில் இறங்கி பெருமாளை தரிசிப்பதாகவும் நம்பப்படுகிறது. மலை முகட்டில் திருத்தலமானது இந்திரஜாலம், பத்மஜாலம், யாதவஜாலம், நைனாஜாலம் ஆகிய பெயர்களுடன் திகழ்கிறது. இந்த மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன. இவை காலப்போக்கில் பராமரிப்பின்றி மறைந்து போனது. ஆனாலும் தற்போதும் எப்போதும் வற்றாத 3 தீர்த்தங்கள் இருப்பது வியப்பு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலில் ஆனி முதல் நாளில் இருந்து ஆடி 30ம் தேதி வரை, சூரியஒளி சுவாமி மீது விழுந்து கொண்டே இருப்பது வேறு எங்கும் காண முடியாத வியப்பு. நாயக்கர்கள் நாமக்கல்லை ஆண்டு வந்த காலக்கட்டத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நைனா என்ற தெலுங்கு சொல்லுக்கு தமிழில் தந்தை என்று பொருள். இதனால் நாயக்கர்கள் பெருமாளை தனது தந்தையாக வழிபட்ட இந்தமலை, நைனாமலை என்று அழைக்கப்படுவதாக பெயர்க்காரணம் கூறுகிறது. அதேபோல் கன்மநயின மகரிஷி தங்கியிருந்து வழிபட்ட மலை என்பதால் நயினமலை என்பது காலப்போக்கில் நைனாமலை ஆனது என்றும் கூறப்படுகிறது.

மலைமேல் நின்ற கோலத்தில் சேவை சாதித்து நினைத்தவர்களுக்கு நினைத்த மாத்திரத்தில் அருள்பாலிப்பவர் திருப்பதி திருவேங்டமுடையான். அவரைப்போலவே நைனாமலையிலும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் வரதராஜப்பெருமாள். எனவே, இங்கு வந்து பெருமாளை தரிசித்தால் திருப்பதிக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் இங்கு வந்து வழிபட்டால் பலன்கள் மேலும் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால் ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ விழா, இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அப்போது வழிபாடுகளும், அலங்காரங்களும் களைகட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதேபோல் மாசியில் 13 நாட்கள் பிரம்மோற்சவ விழா, விமரிசையாக நடக்கும். சனிக்கிழமைகளில் விசேஷ ஆராதனை, அஷ்டலட்சுமி ஹோமம், 180 திருவிளக்கு பூஜைகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற நாட்களில் கோயில்களில் திருமஞ்சன தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் தென்படும்.

Tags : Varadaraja Perumal ,
× RELATED பட்டப்பகலில் வீடு புகுந்து செல்போன்கள் திருட்டு