×

சாபத்திற்குரிய செயல்!

பெருநகரங்களின் சுவர்களில் கட்டாயம் நீங்கள் ஒரு வாசகத்தைப் பார்க்கலாம். “இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்.” சிலர் அந்த வாசகத்தை நிறுத்தி நிதானமாகப் படித்துவிட்டு அங்கேயே சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார்கள். அதில் ஒரு திருப்தி அவர்களுக்கு.சாலையோரங்களில் மட்டுமல்ல, மக்கள் நிழலுக்காக ஒதுங்கும் மரங்கள், நீர்நிலைகளிலும்கூட சிலர் மலஜலம் கழித்து வைப்பார்கள். சென்னை கடற்கரையோரம் செல்பவர்கள் இந்த அருவருப்பான காட்சிகளைப் பார்க்கலாம்.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இத்தகைய செயல்புரிவோரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். அவர்கள் ஒருமுறை கூறினார்கள்:“சாபத்திற்குரிய மூன்று செயல்களில் இருந்து விலகி இருங்கள். அவை- நீர்க்கரைகளிலும், சாலைகளிலும், நிழல்தரும் இடங்களிலும் மலம் கழித்தல்.”(அபூதாவூத்)இந்த நபிமொழிக்கு மார்க்க அறிஞர் மௌலானா முஹம்மது பாரூக் கான் அவர்கள் தரும் விளக்கம் வருமாறு:‘நீர்க்கரைகளாகட்டும், சாலைகளாகட்டும், நிழல் தரும் மரங்களாகட்டும் மூன்றுமே பொதுவாக மக்கள் புழங்குகிற, மக்கள் நடமாடுகின்ற இடங்கள் ஆகும்.

இந்த இடங்களில் சிறுநீர் கழித்தும் மலம் கழித்தும் நாறடிப்பதால் பொதுமக்களுக்கு எத்தகைய இடையூறுகளும் நலக்கேடுகளும் ஏற்படுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.இறைவனின் படைப்புகளுக்கும் சகமனிதர்களுக்கும் தொல்லை தருவதும் சிரமம் அளிப்பதும் கடைந்தெடுத்த ஈனச் செயல் ஆகும். அது மட்டுமல்ல, இந்தப் பொது இடங்களில் இவ்வாறு செயல்படுவது, மக்கள் நலன் குறித்த அக்கறை கிஞ்சிற்றும் இல்லாத, மக்கள் நடமாட்டம் இருக்கின்ற இடமாயிற்றே என்கிற உணர்வு கொஞ்சம் கூட இல்லாத வெட்கக்கேடானதும் வடிகட்டிய சுயநலமும் ஆகும். பொது இடங்களில் அரங்கேறும் இந்த அவலங்கள் தூய்மை விரும்பிகளுக்கு இதயத்தைச் சம்மட்டியால் அடித்துவிடுவதைப் போல் வேதனை தரும். அருவருப்பால் அவர்களின் வயிற்றைக் கலங்கடிக்கிற செயல்கள் இவை. பொது இடங்களில் இத்தகைய காரியங்களில் ஈடுபடுவது சாபத்துக்குரிய செயல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறைவனின் பார்வையில் இந்தச் செயல் மிகமிக வெறுப்புக்குரியதும் மிக இழிவான செயலும் ஆகும். இவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருத்தல் வேண்டும். (அண்ணல் நபியின் அமுத வாக்குகள்) சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய வாழ்வியல் கற்றுத்தரும் இனிய பாடமாகும். அந்தத் தூய்மை இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் நமக்கு இறைவனின் அருட்பேறுகளை வாரி வழங்கும். தூய்மையைப் பேணுவோம். தூய இறையின் அருளைப் பெறுவோம்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் மீது...