×

பக்கத்துணை இருப்பாள் பத்ரேஸ்வரி அம்மன்

கொல்லங்கோடு, குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கிராமத்தில் வீற்றிருக்கிறாள் பத்ரேஸ்வரி அம்மன்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த வில்லுமங்கலம் என்று துறவி, குமரி முனை சென்று அன்னை பகவதியை வணங்கி வர யாத்ரீகம் மேற்கொண்டார். நடை பயணமாக வரும்போது கொல்லங்கோடு வந்ததும் பயணத்தின் காரணமாக ஏற்பட்ட அசதியால் சற்று ஓய்வெடுக்க விரும்பினார். அப்பகுதியிலிருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

தனது நிலையை எடுத்துக்கூறி ஓய்வு எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டினார். அந்த இல்லத்தில் வாசம் செய்தவர்கள் சுவாமி, தாங்கள் தாராளமாக ஓய்வெடுத்துச் செல்லலாம் என கூறினர். மேலும் நீரும், மோரும், பல வகை பழங்களும் கொடுத்து உபசரித்தனர். துறவி, உண்டு களித்து, உறங்கி விழித்து புறப்பட்டு போகும் தருவாயில்,‘‘நிண்ட வீடு, நல்ல காற்றுண்டு. இந்நல ஞான் நன்னாட்டு உறங்கி.’’(உங்கள் வீடு காற்றோட்டமாக இருந்தது. அதனால் நேற்று இரவு நன்றாக தூங்கினேன்)என்று கூறியவாறு புன்னகைத்தார்.

அப்போது வீட்டிலுள்ள ஆண்களும், பெண்களும்
மரியாதையோடு எழுந்து நின்று வணங்கினர்.
அப்போது வீட்டிலிருந்த மூதாட்டி
‘‘சாமி, இ வீட்ல கிடந்தா அழுக்க சொப்பனம் வரும். அதுண்டு உறங்காம் பற்றுல்லா, பின்ன செவ்வாச்சயும் வெள்ளியாச்சயும் எந்தங்கிலும் அசுவம் வந்து வலிய குத்திமுட்டுதன்னு.’’

(சுவாமி, இந்த வீட்டுல படுத்தா, கெட்ட கனவுகள் வருது. அதுமட்டுமல்ல செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டுல யாருக்காவது நோய் வந்து எங்களை கவலைக்குள்ளாக்குது.) என்று கூற, உடனே துறவி தனது பையில் வைத்திருந்த உயர்தர வகையிலான கல். பார்த்தால் இரண்டு கற்கள். ஆனால் ஒருங்கே இணைந்திருக்கும் அந்த வகை கல்லை கொடுத்து‘‘அம்மச்சி, இத வச்சுள்ளே, செவ்வாச்சயும், வெள்ளியாச்சயும் பூஜிச்சா மதி, பச்ச மற்றொரு காரியம் ஆம்பிள்ளரு தன்னே பூஜிக்கணும். பின்னே வரும் தோஷங்களில் ரெண்டு ஆச்சேக்கு நிங்கள கொண்டு பூஜிக்க பற்றில்லங்கில் நிங்கள் இதன கிணத்தில் இடனும். அங்கின இட்டுல்லங்கில் இது நினுக்கு தெய்வ சாபமா மாறும்.’’

(அம்மா, இத வச்சு பூஜை செய்யுங்க. எல்லாம் மாறும். ஆண்கள்தான் பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் பூஜை செய்யாத நிலை ஏற்பட்டால் அது தெய்வக் குற்றமாகும். எனவே அதற்கு இடம் கொடுக்காமல் ஆண்கள் வெளியூர் சென்றாலோ அல்லது பூஜை செய்ய முடியாத அளவுக்கு வீட்டில் அசௌகரியம் நிகழ்ந்தாலோ இந்த கல்லை கிணற்றில் போட்டு விடுங்கள்) என்று கூறினார்.

அதை ஏற்றுக்கொண்டு கல்லை வாங்கிய அந்த வீட்டு ஆண்கள் அதை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தனர். வீட்டில் பில்லி, சூனியம், நோய் இவைகளின் தொல்லைகள் அகன்றது. வேண்டாத கனவு தொல்லைகள் விலகியது. பின்னர் சில மாதங்கள் கடந்த நிலையில் ஆண்கள் வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த கல்லை அங்கேயுள்ள புறக்கால்வீடு என்னும் இடத்திலுள்ள கிணற்றில் கொண்டு போட்டனர். இந்த கிணற்றின்
அருகில் பொன்னிரும்பு விளை, அனந்தவிளை என இரண்டு இடங்கள் இருந்தன. இங்கு கொல்லர் சமூகத்தினர் வசித்து வந்தனர்.

ஆண்டுகள் சில கடந்த நிலையில் துறவறம் பூண்ட பிரம்மச்சாரியான அந்தணர் ஒருவர் அவ்வழியாக வந்தார். நள்ளிரவு நேரம், இருள் சூழ்ந்திருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. இதற்கு மேலும் நடப்பது சரியல்ல என முடிவு செய்த அவர் இரவு பொழுது மட்டும் தங்கி செல்ல, அருகே ஏதேனும் வீடு உள்ளதா என்று பார்க்கிறார். அப்போது அவர் கண்ணில் அப்பகுதியிலுள்ள இரண்டு வீடுகள் தென்பட்டது.

முதல் வீட்டு வாசல் கதவை தட்டுகிறார். கதவை திறந்த பொன்னி என்ற பெண். ஆண்கள் இல்லாத வீடு இங்கே தங்க முடியாது என்று மறுத்து விடுகிறாள். அடுத்த வீடான அனந்தி வீட்டை தட்டுகிறார். (பொன்னியும், அனந்தியும் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளான அக்கா தங்கைகள்) அந்த வீட்டிலிருந்த அனந்தியின் பாட்டியிடம், அந்தணர்
‘‘இவிட கொறச்சி உறங்கா பற்றுமா?’’
என்று கேட்க, அனந்தியின் பாட்டி‘‘வீட்டிண்ட அகத்து உறங்கா பற்றில்ல, கெட்டி கொடுக்கானுள்ள பெண்ணுண்டு பச்ச, நிங்களு புறத்து கிடந்து வேணுமங்கில் உறங்கி கொள்ளே.’’

(வீட்டுக்குள்ள அனுமதிக்க முடியாது. கன்னிப்பொண்ணு இருக்கா, வேணும்ன்னா வெளியே திண்ணையில படுத்துறங்கும்) என்று கூறினாள். வீட்டு வெளித்திண்ணையில் படுத்த அந்த பிரம்மச்சாரி துறவியான அந்தணர், வானத்தில் கூடியிருந்த நட்சத்திரங்களை கணக்கிட்டு பார்க்கிறார். பின்னர் சற்று நேரத்தில் துள்ளிக்குதிக்கிறார். அவரின் சத்தம் கேட்டு வீட்டு ஜன்னல் வழியாக அனந்தி எட்டிப்பார்க்கிறாள்.

அதை அவரும் பார்த்துவிடுகிறார். பின்னர் மனமிரங்கிய அனந்தி, வீட்டுக்கு பின் நெல்குத்தும் அறையில் தங்க அனுமதிக்கிறாள். அனந்தி அவருக்கு உபசரணை செய்கிறாள். பொழுது விடிந்தும் விடியாத வேளையில் புறப்பட தயாரான துறவியிடம்
‘‘எனக்கு எந்தையங்கிலும் மறுபடி பறஞ்சிட்டு போணும்.’’
(தனக்கு ஒருவழி சொல்லிவிட்டு
செல்லுங்கள்) என்று கூற,
‘‘நினக்கு ஒரு ஆண் கொச்சு சனிக்கும். அது தெய்வப்பிறவியானு, இந்நாட்டில வலிய பிரசித்து பெற்றவனா காணும். ஆட்காரெல்லாம் அவன தேடி போகும். ஞான் பின்ன இவிட வரும்.’’

(உனக்கு அழகான ஆண் மகன் பிறப்பான். அவன் தெய்வாம்சம் கொண்டிருப்பான். அனைத்து திறமைகளும் அவனிடம் இருக்கும். இது கிராந்தம் (ஏடு) அவன் வாலிப பருவம் அடையும் போது இதை அவனிடத்தில் கொடு) என்றுரைத்து ஏடு ஒன்றை கொடுத்துச்சென்றார்.அதன்படியே அனந்திக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவனுக்கு மார்த்தாண்டன் என பெயரிட்டு அழைத்து வந்தனர். மார்த்தாண்டன் கிரந்தங்கள் (நூல்கள், ஏடுகள்) பல படித்தான். கலைகள் பல கற்றான். அவனுக்கு பதிமூன்று வயது நடக்கும்போது திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்விமான்களுக்கு விவாத மேடை ஒன்றை அமைத்தார். அதில் மார்த்தாண்டனும் கலந்து கொண்டான்.

ஒரு வார்த்தைக்கு அவையில் இருந்த அனைவரும் ஒரு கருத்தை சொல்லி மகாராஜாவுக்கு எடுத்துக்கூறினர். அப்போது குறுக்கிட்ட மார்த்தாண்டன் இது தவறு என்று சுட்டிக்காட்டி அதற்கான விளக்கத்தையும் அளித்தான். மனம் மகிழ்ந்து மகாராஜா பாராட்டி வெள்ளிப்பணம் பரிசு அறிவித்து அதை மாலையில் நடைபெறும் விழாவில் பெற்றுச்செல்லுமாறு கூறி சபையை கலைத்தார்.

சபையை விட்டு வௌியே வந்ததும் அவையில் இருந்த மற்ற கல்விமான்கள் குண்டர்களை ஏவி மார்த்தாண்டனை கொலை செய்ய கூறினர். அவர்கள் துரத்த, மார்த்தாண்டன் கரமனை ஆற்றங்கரை வந்து அங்கிருந்து மறுகரையான அவன் ஊருக்கு வருவதற்கு பச்சை வாழைமரத் தட்டையை எடுத்து ஆற்றில் போட்டு மந்திரம் சொல்ல அது அவனை கரை சேர்த்தது. அன்றிலிருந்து அவன் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. அதன்பின்னர் மாகி மார்த்தாண்டன் என்று அழைக்கப்பட்டான். (மாகி என்றால் மந்திரம் கற்றவன் என்று பொருள்).

அன்று புறக்கால்வீட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்தாள் அனந்தி. அப்போது தண்ணீரோடு அந்த கல் கிடைக்கிறது. இதை பாக்கு என்றும் கூறுகின்றனர். அந்த கல்லை இரண்டாக உளி கொண்டு உடைத்தான் மாகிமார்த்தாண்டன். அப்போது கல்லில் ரத்தம் கொட்டியது. அந்த நேரம் அசரீரி கேட்டது. என்னை வணங்கி வாருங்கள் நினைத்தது நடக்கும் என்று கூறியது. அப்போது மாகி மார்த்தாண்டன் கண்ணுக்கு பத்து கரத்துடன் தேவி ஆதிபராசக்தி பத்துகரகாளியாக(பத்திரகாளி) காட்சியளித்தாள். அதுவே பத்ரேஸ்வரி அம்மன்.

மூலவர் இரண்டு கல்லாக உள்ளது. இதை முடிப்புரை என்கின்றனர். ஒரு அம்மன் சாந்த சொரூபிணியாகவும், மற்றொரு அம்மன் ஆங்கார ரூபிணியாகவும் உள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னை வணங்கும் பக்தர்களை பாதுகாக்கிறாள் பத்ரேஸ்வரி அம்மன். இக்கோயிலில் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தூக்கத்திருவிழா நடைபெறுகிறது.இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து 42 கி.மீ தொலைவில் கொல்லங்கோடு கிராமத்தில் உள்ளது. கொல்லங்கோடு பஸ்சில் வந்து கண்ணநாகம் ஜங்சனில் இறங்கி வலது பக்கம் 1 கி.மீ தொலைவு சென்றால் கோயிலை அடையலாம்.

படங்கள்: நித்திரவிளை ஜெ.ராஜன்

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags : Bhadreswari Amman ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி