×

சொந்த வீடு அமையும்!

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?என் மகன் எம்.டெக்., படிப்பு முடித்துள்ளான். அவனுக்கு வேலை கிடைக்குமா? மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்பில் சேரலாமா? ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அது நடக்குமா? என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் உள்ளோம். ஜாதக ரீதியாக நல்ல ஆலோசனை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- பாலசுகந்தி, விருதுநகர்.


நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் உள்ள பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றைக் கொண்டு துல்லியமாகக் கணிதம் செய்து பார்த்ததில் ஜாதகத்தை தவறாக கணித்து வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியவருகிறது. உங்கள் மகன் கன்னி லக்னத்தில் பிறந்திருக்கிறார். ஆனால் நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் துலாம் லக்னம் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்சா லக்னமும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. முதலில் நல்ல ஜோதிடராகப் பார்த்து ஜாதகத்தை சரியான வகையில் கணித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாதம் கும்ப ராசியில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகக் கணக்கின்படி தற்போது குரு தசையில் சனி புக்தியின் காலம் நடந்துவருகிறது. இந்த நேரம் மேற்படிப்பிற்கு உகந்த நேரம் அல்ல. அவரது ஜாதகப்படி ஆராய்ச்சி படிப்பிற்கு செல்வதை விட உத்யோகம் பார்ப்பதே நல்லது. ஆறாம் பாவகம் என்பது மிகவும் வலிமை பெற்றிருக்கிறது. நிச்சயமாக உங்கள் மகனால் யுபிஎஸ்சி தேர்வினில் தேர்ச்சி பெற இயலும். தற்போதைய சூழலில் உங்கள் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளில் தற்காலிகமாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ளச் சொல்லுங்கள். அவரது செலவுகளை சமாளித்துக் கொள்ளும் வகையிலான வேலை என்பது கிடைத்துவிடும்.

வேலை பார்த்துக்கொண்டே யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகச் சொல்லுங்கள். பகுதி நேரமாக பயிற்சி வகுப்பிற்குச் செல்ல இயலும். 09.04.2021 முதல் நல்ல நேரம் என்பது துவங்குகிறது. அதன் பிறகு எழுதும் தேர்வுகளில் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவரது ஜாதக அமைப்பின்படி ஐஏஎஸ் போன்ற உயர்பதவியை நிச்சயமாக அலங்கரிப்பார். குழப்பம் ஏதுமின்றி தெளிவாக முடிவெடுங்கள். இத்தனை காலம் சிரமப்பட்டாகிவிட்டது. இனிமேலும் அந்த சிரமம் நிச்சயமாகத் தொடராது என்ற நம்பிக்கையை உங்கள் மகனுக்கு ஊட்டுங்கள். அவர் வேலை பார்த்துக்கொண்டே ஐஏஎஸ் தேர்விற்கு தயாராகட்டும். 15.07.2023ற்குள் அவரது வாழ்வினில் உயர்ந்த பதவியுடன் கூடிய அரசு தரப்பு உத்யோகம் என்பது கிடைத்துவிடும் என்பதையே அவரது ஜாதகம் நமக்கு உணர்த்துகிறது.

?என் ஜாதகப்படி என்னால் பிஎச்டி பட்டம் பெற இயலுமா? எனது ஆயுள் எவ்வாறு உள்ளது? எந்த பாடத்தில் பிஎச்டி செய்ய முடியும் என்பதையும் தெரிவிக்கவும்.
- சாரங்கபாணி, ஆலப்பாக்கம்.


ஜாதகத்தைப் பற்றிய விவாதத்திற்குள் செல்வதற்கு முன்னால் உங்கள் வயதிற்கும் சரஸ்வதி கடாட்சம் நிரம்பியிருக்கும் உங்கள் கல்வியறி விற்கும் அனந்தகோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஐந்து பாடப்பிரிவுகளில் எம்.ஏ., இரண்டு எம்.ஃபில்., எம்.எட்., இவைபோக இன்னும் டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளைப் படித்திருப்பதுடன் தற்போது 84வது வயது நடக்கும் நிலையில் பி.எச்டி., செய்ய வேண்டும் என்ற ஆவலோடு இருக்கும் உங்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். படிப்பிற்கு வயது தடையில்லை என்ற கருத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதக விபரங்களை ஆராய்ந்து பார்த்ததில் தற்போது புதன் தசையில் குருபுக்தி நடந்து வருவதாகத் தெரிகிறது.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியின் தசையில் வித்யா ஸ்தான அதிபதியின் புக்தி நடைபெறுகிறது. அத்தோடு ஆராய்ச்சி படிப்பினைப் பற்றிச் சொல்லும் 11ம் பாவக அதிபதி சந்திரன் ஒன்பதில் உச்சம் பெற்றிருப்பதால் மொழிப்பாடத்தில் உங்களால் பி.எச்டி பட்டத்தைப் பெற இயலும். சந்திரனுடன் இணைந்திருக்கும் கேது சமஸ்கிருத பாடத்தில் பி.எச்.டி செய்ய இயலும் என்பதைத் தெளிவாக்குகிறது.

அடுத்து வர உள்ள சனி புக்தியின் காலம் சற்று தாமதத்தை உண்டாக்கினாலும் கேது தசையின் துவக்கத்தில் நிச்சயமாக பி.எச்டி., முடித்து டாக்டரேட் பட்டத்தை வாங்கிவிடுவீர்கள். கல்வியே உங்கள் மூச்சாக இருப்பதால் ஆயுளைப் பற்றிய கவலை தற்போது வேண்டாம். சமஸ்கிருத மொழிப் பாடத்தில் பி.எச்டி., படிக்க விண்ணப்பம் செய்யுங்கள். உங்கள் ஜாதகத்தில் கிரஹநிலை பக்கபலமாக துணையிருப்பதால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். இறைவன் உங்களுக்கு நல்ல தேக ஆரோக்யத்தையும் தெளிவான மன உறுதியையும் வழங்கட்டும் என்று ஆன்மிகம் பலன் வாசகர்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்கிறோம்.

?என் மகன் பிரபல ஐடி கம்பெனிக்காக ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறான். அவனுடைய வேலை வெளிநாட்டிலா, இந்தியாவிலா? திருமணம் எப்போது முடிவாகும்? திருமணத்திற்குப் பிறகு பெற்றோருடன் இணைந்து இருப்பாரா என்பதையும் தெளிவுபடுத்தவும்.
- ராமமூர்த்தி, சென்னை.


தங்கள் குமாரனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணைகொண்டு கணிதம் செய்து பார்த்ததில் ஜென்ம லக்னத்தில் கேதுவும் களத்திர ஸ்தானம் ஆகிய ஏழாம் பாவகத்தில் சனி-ராகுவின் இணைவும் திருமணத்தை தாமதம் செய்து வருகிறது. பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகக் கணக்கின்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. திருமணத்திற்குப் பிறகு பெற்றோருடன் சேர்ந்து இருப்பாரா என்று கேட்டிருக்கிறீர்கள். திருமணத்திற்குப் பிறகு என்று சொல்வதை விட திருமணத்திற்கு முன்பும் அவர் பெற்றோருடன் சேர்ந்து வாழ்கின்ற அம்சம் குறைவாகவே உள்ளது. தான் பிறந்த ஊரில் இருந்து தொலைதூரத்தில்தான் இவரது உத்யோகம் அமையும்.

உத்யோக ரீதியாக தனது பெற்றோரை விட்டு விலகியிருக்க வேண்டிய சூழல் உள்ளதால் அவர் தங்களோடு இணைந்து வாழும் சூழல் அமையவில்லை. வெளிநாட்டிலேயே அவர் தனது பணியினைத் தொடர இயலும். உள்ளூரில் அவரது திறமைக்கான வாய்ப்பு என்பது அத்தனை சிறப்பாக அமையவில்லை. லக்னாதிபதி புதன், ஜீவனாதிபதி குரு, தனாதிபதி சந்திரன், தனகாரகன் சுக்கிரன் ஆகியோருடன் ஆட்சி பெற்ற சூரியனும் இணைந்து மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொலைதூர உத்யோகமே இவருக்கு நன்மையைச் செய்யும் என்பதை இவரது ஜாதகம் நமக்கு உணர்த்துகிறது. மகனின் எதிர்கால நல்வாழ்வு கருதி அவரை வெளிநாட்டு உத்யோகத்தில் தொடர்வதற்கு ஊக்கம் அளித்து வாருங்கள். அவரது ஜாதக பலத்தின்படி 29.03.2021ற்குப் பிறகு திருமண யோகம் என்பது நன்றாக உள்ளது.

திருமண விஷயத்தில் அவசரப்படாமல் நிதானித்து செயல்படுங்கள். நட்சத்திர பொருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் பெண்ணின் ஜாதக பலத்தினை நன்கு ஆராய்ந்து இவருடைய ஜாதகத்தோடு பொருந்துகிறதா என்பதை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். வரும் வருடத்தில் அவரது திருமணத்தை நடத்திவிட இயலும் என்பதையே அவரது ஜாதகம் தெளிவுபடுத்துகிறது.?என் ஜாதகத்தில் தோஷங்கள் ஏதேனும் உள்ளதா? இவ்வளவு நாளும் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். என் வருங்காலம் எப்படி இருக்கும்? என் ஜாதகத்தில் அதிர்ஷ்ட யோகங்கள் உள்ளதா? அரசியலில் நல்ல நிலைமைக்கு வருவேனா?
- ராஜகணபதி, சென்னை.


நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் யோகங்களும், தோஷங்களும் கலந்த அமைப்பினைப் பெற்றிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே ஆட்சி பெற்ற சூரியன் அமர்ந்திருப்பது நல்ல வலிமையைத் தருகிறது.

பானுபார்கவ யோகம், சௌம்ய மங்கள யோகம் ஆகியவற்றையும் உங்களது ஜாதகம் பெற்றிருக்கிறது. யோகங்கள் இருந்தாலும் குருவும் சனியும் வக்ரம் பெற்றிருப்பது அந்த யோகங்களை அனுபவிக்க விடாமல் தடை செய்து வருகிறது. இருப்பினும் சத்ரு, ரோக, ருண ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் சனி ஆட்சிப் பலத்துடனும், தடைகளைத் தரும் விரய ஸ்தானம் ஆகிய எட்டாம் வீட்டில் குரு ஆட்சிப் பலத்துடனும் அமர்ந்திருக்கிறார்கள். வக்ர கதியில் இருந்தாலும் இருவரும் ஆட்சிப் பலம் பெறுவதால் திடீர் அதிர்ஷ்டம் என்பது அடிக்கும் வாய்ப்பு உண்டு. இதனை விபரீத ராஜ யோகம் என்று குறிப்பிடுவார்கள்.

தற்போது உங்கள் ஜாதகப்படி புதன் தசையில் புதன் புக்தியின் காலம் நடந்து வருகிறது. புதன் வாக்கு ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் உச்ச பலம் பெற்றிருக்கிறார். அத்துடன் சூரியனின் சாரத்தில் அமர்ந்திருப்பதாலும் சூரியன் ஆட்சி பலம் பெறுவதாலும் அரசியலில் நன்றாக ஒளி
வீசுவீர்கள். பேச்சுத்திறமையும், ஆளுமைத்திறனும் பெற்றிருக்கிறீர்கள். தற்போது நடந்து வரும் நேரத்தின்படி எப்போது வேண்டுமானாலும் அதிர்ஷ்ட வாய்ப்பு கதவைத் தட்டலாம். தயாராகக் காத்திருங்கள். வாய்ப்பு கிடைக்கும்போது தாமதிக்காமல் உடனுக்குடன் அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இத்தனை நாள்பட்ட கஷ்டத்திற்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். அதற்கான காலமும் நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் கூடிய விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் என்பதையே உங்களது ஜாதகம் எடுத்துச் சொல்கிறது.

?எனது சகோதரனுக்கு வெகுநாட்களாக திருமணம் தடைப்பட்டு வருகிறது. இவருக்கு திருமண யோகம் உள்ளதா? எப்பொழுது திருமணம் அமையும்? சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா?
- ஜெயலக்ஷ்மி, சேலையூர்.


நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் சகோதரரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவருக்கு கடுமையான களத்திர தோஷம் உண்டாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜென்ம லக்னத்தில் இருந்து வரிசையாக எண்ணி வரும்போது ஏழாம் பாவகமாக வருவது களத்திர ஸ்தானம் என்று பெயர் பெறுகிறது. களத்திர ஸ்தானம் என்பதே திருமணத்தைப் பற்றியும் திருமண வாழ்வினைப் பற்றியும் சொல்லும். உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் சகோதரரின் ஜாதகத்தில் ஏழாம் பாவகத்தில் கேதுவின் இணைவும் ஏழாம் பாவக அதிபதி சந்திரன் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் களத்திரதோஷத்தினை கடுமையாக்கி உள்ளது.

களத்திரகாரகன் சுக்கிரனும் மூன்றில் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பதால் திருமண வாழ்விற்கான அம்சம் என்பது அத்தனை சிறப்பாக இல்லை. 49வது வயதில் இருக்கும் அவருக்கு இதற்கு மேலும் திருமணம் பற்றிய பேச்சினைப் பேசாமல் எதிர்கால வாழ்விற்குத் தேவையானவற்றைப் பற்றி யோசியுங்கள். மூன்றாம் வீடாகிய சகோதர ஸ்தானத்தில் சுக்கிரனின் உச்ச பலமும் சந்திரனின் இணைவும் சகோதரியின் ஆதரவு வாழ்நாள் முழுக்க கிடைக்கும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

நான்கில் உச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் சொந்த வீட்டிற்கான அம்சத்தைத் தந்திருக்கிறார். சொந்தவீடு வாங்கும் யோகம் என்பது நிச்சயம் உண்டு. அவரது சகோதரியான நீங்கள் உதவும் பட்சத்தில் வெகுவிரைவில் அவரால் சொந்தவீட்டினை வாங்க முடியும். அவரது ஜாதக பலன்படி தற்போது நடந்து வரும் சூரிய தசையின் காலம் அதற்குரிய அம்சத்தைத் தருகிறது. 2021ம் ஆண்டின் பிற்பாதியில் அவரால் சொந்த வீடு வாங்க இயலும். திருமண யோகம் கெட்டிருந்தாலும் சொந்தவீடு வாங்கும் யோகம் நன்றாக இருக்கிறது என்பதையே உங்கள் சகோதரரின் ஜாதகம் உணர்த்துகிறது. தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது,
என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004


தொகுப்பு: சுபஸ்ரீ சங்கரன்

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்