×

இல்லந் தோறும் தெய்வீகம் மஞ்சள் மகிமை

அஸ்மின் ஹரித்ரா பிம்பே  
விக்னேஸ்வரம் த்யாயாமி
ஸ்ரீமஹாகணபதிம் ஆவாஹயாமி

என்று சொல்லி, மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும். புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும் என்றுதான் முதலில் பூஜையை தொடங்குகின்றோம். இதில் ஹரித்ரா என்பதே மஞ்சளாகும். இல்லம் என்பதை ஆலயமாகவே முன்னோர்கள் கருதினர். ஊருக்கு ஒரு கோயில் இருப்பதுபோல ஒவ்வொரு இல்லத்திற்கும் கோயிலாக பூஜையறையை நிறுவினர். எப்போதும் தெய்வத்தின் சாந்நித்தியம் அங்கு நிலவி நிலையான நிம்மதி பெருகவே மஞ்சள், குங்குமம், சந்தனம் என வாசனை திரவியத்தோடு தெய்வத்தை வணங்கினர். பூரண மங்களம் வீட்டிற்குள் நிலைத்திருக்க தெய்வீகமாக பொருட்களை உபயோகித்தனர். இதனால் இல்லந்தோறும் தெய்வீகம் பொங்கித் ததும்பியது. மங்களம் பெருகியது. அப்பேற்பட்ட தெய்வீக சாந்நித்தியத்தையும் திருமகளின் பேரருளையும் நிறைக்கும் ஒவ்வொரு விஷயத்தின் மகிமையையும் இந்த இல்லந்தோறும் தெய்வீகம் தொடரில் பார்க்கப் போகிறோம்.   

வட இந்தியாவில் மஞ்சள் ஹல்டி என அழைக்கப்படுகிறது, இது ஹரித்ரா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, மற்றும் தென் இந்தியாவில் அவை மஞ்சள் என்று அழைக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் மஞ்சளை  பஹுலா, ஹீரிதா, பத்ரா, கந்த்ளாளாஷிகா, பேட்வால்வா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றார்கள். மாதாமாதம் வீட்டில் எழுதப்படும் மளிகைப் பட்டியலில் முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான். பிறந்த குழந்தைக்கு செய்யப்படும் சடங்கு முதல் திருமணம் வரை அனைத்து விசேஷங்களிலும் முதலிடம் பிடிப்பது மஞ்சள்தான். எனவே, இந்தியர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக இருப்பது மஞ்சளேயாகும். மங்கலத்தின் அடையாளமாகவும் தூய்மையின் சின்னமாகவும் நம் தேசத்தில் கொண்டாடப்படும் மஞ்சள் உடலை உரமாக்கும் அற்புத மூலிகையாகும்.

அதனால் இதன் மகத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் மஞ்சளை நம் வாழ்வியல் முறையோடு இணைத்தனர். மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள், மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு உண்டு. முனை முறியாத அரிசியால், அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத்தான் தயாரிப்பார்கள். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவது நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது, அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம்தான். திருமாங்கல்யம் மஞ்சள் பிள்ளையார் மஞ்சள் காப்பு மஞ்சள் நீராட்டு மஞ்சள் நீர் தெளித்தல் என மஞ்சள் நம் சமூகத்தில் உயர்ந்த நிலையைப் பெற்றுள்ளது.  

அம்மை கண்டவர்களுக்கு மாரியம்மன் கோயிலில் இருந்து மஞ்சள் தீர்த்தம் வாங்கி வந்து கொடுப்பதற்கு காரணம் மஞ்சளுக்கு அம்மை நோய்க் கிருமியை அழிக்கும் வல்லமை உள்ளது என்பதே. திருவிழாக்களின்போது மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவது அந்தப் பருவகாலத்தில் வரும் நோய் தொற்றுக்களை எதிர்த்து காக்கும் கவசமாக மஞ்சள் இருப்பதினால்தான்.  பூப்பெய்திய பெண்களுக்கு மஞ்சள்  நீராட்டுவிழா நடத்துவது  நோய்க்கிருமிகள் தாக்காமல் அப்பெண்ணைக் காப்பதற்கும்  உடலில் ஏற்பட்ட புலால் நாற்றம் நீங்கி நறுமணம் வீசுவதற்காகவும் தான்.  பெண்கள் அன்றாடம் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் சிவப்பழகு கூடுவதுடன் வியர்வை நாற்றம் மற்றும் வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது.  

இந்திய மற்றும் ஆசியா சமையலில் மஞ்சள் அதனுடைய நிறம் மற்றும் மணத்திற்காகப் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் அன்றாடம் மஞ்சளை உணவு மூலமாக நாம் எடுத்துக்கொண்டால் நோய்கள் பலவற்றிற்கும் அது மருந்தாகவும் பயன்படுகிறது.  குறிப்பாக அசைவ உணவுகளைச் சுத்தப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவதின் காரணம் அவற்றிலுள்ள நோய்க்கிருமிகளை நீக்கி புலாலின் நாற்றம் மறைவதற்காகவும் தான்.  மஞ்சள் ZINGIBERACEA என்னும் இஞ்சி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.  

இது இந்தியாவில் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படும் தாவரமாகும்.  மஞ்சள் செடியின் கிழங்கை நாம் உணவுக்காகவும் மருந்திற்காகவும் பயன்படுத்துகிறோம். CURCUMA LONGA என்பது மஞ்சளின் தாவரவியல் பெயர். CURCUMIN என்கின்ற மஞ்சள் நிறமி TURMERONE போன்று ஆவியாக கூடிய எண்ணெய் பொருட்கள், புரதச்சத்து, மாவுச்சத்து  ,வைட்டமின் ஏ டி, கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற உப்பு சத்தும் மஞ்சளில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்களில் பிரதான இடத்தில் இருக்கிறது மஞ்சள் தூள். வைரஸ் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவைகளை எதிர்க்கும் சக்தி மஞ்சள் தூளுக்கு உள்ளதால் ஜலதோஷம், தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்னை
களுக்கு தீர்வு அளிக்கக் கூடிய அரு மருந்தாக மஞ்சள் திகழ்கிறது.

உலக நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்பு உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்ப காரணம் இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும், உணவு முறையும் தான். இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் மஞ்சள் தூளின் நன்மையும், மருத்துவ குணமும் வெளிநாட்டினருக்கு பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. மஞ்சள் விலை கிடுகிடு வென உயர்ந்தது. இதனிடையே இந்தியாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்க தேசம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி தூள் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தின் ஈரோடு மஞ்சள் சந்தையும், தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மஞ்சள் சந்தையும் பெயர் பெற்ற ஒன்றாக திகழ்கின்றன.

வீட்டு மருந்தில் தமிழகத்தை பொறுத்தவரை மஞ்சளை மாமருந்தாக மக்கள் கருதுகிறார்கள். சளி பிடித்தாலோ அல்லது சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ மஞ்சள் தூள் போட்ட பால் அருந்தி நோயின் வீரியத்தை விரட்டி அடிப்பார்கள். அதேபோல், கிராமப்புறங்களில் சிறுவர்கள் யாராவது கீழே விழுந்து கை கால்களில் சிராய்ப்பு உள்ளிட்ட லேசான காயங்கள் ஏற்பட்டால் மக்களின் முதல் மருத்துவ உதவி காயம்பட்ட இடங்களில் மஞ்சள் தூள் வைப்பதாக தான் இருக்கும். இப்படி மருத்துவ நன்மைகள் நிறைந்த மஞ்சளின் மகிமையை உலக நாடுகள் அறிந்துகொள்ள கொரோனா காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  மங்கலப் பொருட்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள், மகிமை மிக்கது.  

இப்படி மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் ‘மஞ்சள் கீறுதல்’ என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கைக் கீறி, சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்