×

யானைக் கடவுள் - காங்கி தென் வழிபாடு

தமிழ்நாட்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டிற்கு சீனா வழியாக யானைமுகக் கடவுள் வழிபாடு பயணப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் நமக்கு தெரிவிக்கின்றன. தமிழகத்தில் செழிப்புடன்  காணப்பட்ட பௌத்த சமயம்  முதலாம்  மகேந்திர பல்லவன் காலத்தில் தெய்வ உருவங்களைப் புடைப்பு சிற்பங்களாகப் பதிவு செய்தது.  இம்மன்னன் காலத்தில் தமிழகத்தில் முதன்முதலாக குகைக் கோயில்கள் உருவாக்கப்பட்டு அதற்குள் புடைப்புச் சிற்பங்களாக தெய்வ உருவங்கள் செதுக்கப்பட்டு உருவ வழிபாடு தமிழ்நாட்டில் ஆரம்பமாயிற்று.

வட நாட்டில் பெரிய புத்த சிலைகளைச் செய்தது போல அடுத்து  வந்த  ராஜசிம்மனின் காலத்தில் பௌத்தர்கள் தமிழ்நாட்டில் குகைக் கோவில்களில்  பெரிய கடவுளர் உருவங்களைப் பாறைகளில் செதுக்கினர். புத்தர் மற்றும் அவலோகதீஸ்வரரை அதிக வலிமைமிக்கவர்கள்  எனப்போற்றும் வகையில் பெரிய யானை முகத்துடன் மனித உடலுடன் செதுக்கினர்.

தமிழகத்தில் மிகப்பழைய பிள்ளையார் உருவம் எனக் கருதப்படும் பிள்ளையார் பட்டியில் இருக்கும் பிள்ளையார் சிலை ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அதில் காணப்படும் கல் எழுத்துக்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. சிலர் ஏழாம் நூற்றாண்டு என்றும் கருதுகின்றனர். எவ்வாறாயினும் இச்சிற்பமே தமிழகத்தின் மிகப் பழைய யானைமுகக் கடவுள் சிலையாகும்.

பௌத்த சமயத்தைச் சேர்ந்த அவலோகிதேஸ்வரரையும் யானைமுகக் கடவுளாகக் கருதி வழிபடும் போக்கு பௌத்த சமயத்தில் இருந்து வந்ததால் இது அவலோகதீஸ்வரரின் சிலையாகவும் இருக்க வாய்ப்புண்டு   என்று    அறிஞர்கள் கருதுகின்றனர். அவலோகதீஸ்வரர் என்பவர் அனைத்து புத்தர்களின் அன்பு வடிவமாகப் போற்றப்படுகிறார். எனவே பௌத்த சமயம் செல்வாக்குடன் இருந்த போது அவருக்குப் பெரிய சிலைகள் வைக்கப்பட்டன.  லகுலீஸ்வரர் சிலையும் சில இடங்களில் சேர்ந்தே இடம்பெற்றது.

யானையைத் தெரிவு செய்ததற்கான காரணம்

ஆண் வர்க்கத்தின் வலிமைக்கு அடையாளமாக யானையைக்  காட்டும் போக்கு எகிப்து போன்ற கீழைநாடுகளிலும் இருப்பதைக் காண்கின்றோம். எகிப்தில் யானை முகமும் மனித உடலும் கொண்ட வலிமை மிகுந்த ஒரு தெய்வத்தை கோடேஷ் என்ற எபிரேயச்  சொல்லால் அழைப்பர்.                    
தமிழகத்தில் பல்லவ மன்னர்கள் குகைகளைக் கோயில்களாக மாற்றியபோது அந்த குகைகளின் சுவர்களில் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்ட யானைமுகக் கடவுளின்  உருவங்கள் திருமலைப்புரம், தேவர்மலை, அரிட்டாபட்டி, திருப்பரங்குன்றம், கோகர்ணம் போன்ற இடங்களில் இருக்கும் மலைக் குகைகளில் இடம் பெற்றன. சிராப்பள்ளி மாவட்டத்தில் திருப்பட்டூர் கைலாசநாதர் கோயிலிலும் செங்கல்பட்டு அருகே வல்லம் கந்தசேனர் குடைவரை கோயிலிலும் யானைமுகக் கடவுளின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

ஜப்பானில்  விநாயகர் வழிபாடும் வகைகளும்

கிபி  806 ஆம் ஆண்டில் சீனா வழியாக பௌத்தர்கள் ஜப்பானுக்கு யானை முகக் கடவுளைக் கொண்டு சென்றனர். ஜப்பானிலும் தெய்வம் என்ற தமிழ்ச் சொல்லே தென் என்று  சிறிய மாற்றத்துடன் பயன்படுகிறது. தென் என்ற சொல் ஆண் கடவுளையும் தெய்யோ என்ற சொல் பெண் கடவுளையும் குறிக்கின்றது. ஜப்பானில் யானைமுகக் கடவுளை பினாயக் தென் என்பர். பௌத்தம் செல்வாக்குடன் திகழ்ந்த ஒடியா, கலிங்கா மற்றும் வங்காள மாநிலங்களில் என ஒலிக்கப்படும் அங்கு விநாயக் பினாயக் ஆனார். அதே ஒலிப்பு முறையில் ஜப்பானிலும் பிநாயக் தென் என்று அழைக்கின்றனர்.

விநாயகரை ஜப்பானில் தாயி ஷோ தென் என்று மிகப் பெரிய கடவுள் என்ற பொருளிலும் அழைக்கின்றனர். தாயி என்றால் ஜப்பானில் பெரிய என்பது பொருள். விநாயகக் கடவுள் ஜப்பானில் இளைஞர்களுக்குக் காதலரைச்  சேர்த்து வைக்கும் தெய்வமாகவும் மூத்தவர்களுக்குத் தொழிலில் நல்ல லாபம் பெற்றுத் தரும் தெய்வமாகவும் விளங்குகிறார்.  திபெத் நாட்டில் மகாகாலன் முக்கியத் தெய்வமாக வணங்கப்படுவதால் அங்கு மகாகாலனின் அடியில் விநாயகர் காணப்படுகிறார். விநாயகர் ஜப்பானில் முப்பதுக்கும் மேற்பட்ட வடிவங்களில் பல உருவங்களில் வணங்கப்படுகிறார்.

ஜப்பானில் விநாயகர்

விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று துவி விநாயகர் எனப்படும் இரு முக விநாயகர் ஆகும். இரண்டுமே யானை முகமாக உள்ளன. இவரை janus  of india  என்று அழைக்கின்றனர். ஜேனஸ் என்ற தேவதை இரண்டு முகங்களை கொண்டது. கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் அந்த முகங்கள் குறிக்கின்றன. இந்தத் தெய்வத்தின் பெயரால் ஆங்கில ஆண்டின் ஜனவரி என்ற முதல் மாதம் அழைக்கப்படுகின்றது. அதுபோல இரட்டை முகக் கணபதி கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான இணைப்பாக விளங்குகிறார். தமிழகத்தில் பஞ்சமுக கணபதி உண்டு.

பிள்ளையார்பட்டியின் தனித்துவம்

வேட்டை சமூகம் வேளாண்மைச் சமூகமாக மாறிய காலத்தில் குழந்தைப் பேறு வாய்க்கப்பெற்ற பெண் மட்டுமே சமூகத்தில் பெண் என்ற மதிப்பை பெற்றாள். இதனால் கருவுற்ற பெண்ணுக்கு மட்டுமே ஊருக்குள் இடம் கிடைத்தது. அப்போது இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாக குகைகளில் கூடி வாழும் முறை காணப்பட்டது. அங்கிருந்த சில மாதங்களில் பெண் கருவுற்ற பின்பு ஊருக்குள் அழைத்து வரப்பட்டு அவள் சமூகத்தின் மதிப்புமிகு அங்கத்தினராக ஏற்றுக் கொள்ளப்படுவாள். அவள் தான் விடுப்பு ஆணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டாள்.

இத்தகைய குகைகளை மக்கள்  சோபனத்துக்காகவே பயன்படுத்தினர். இவை இன்றும் குழந்தைப் பேற்றுடன் தொடர்புடைய கதைகளைக் கொண்ட குகைகளாக உள்ளன. திண்டிவனம் அருகே உள்ள முக்கல் என்ற குகை சீதை வந்து இருந்து பிள்ளை பெற்ற குகை என்ற கதையைக் கொண்டுள்ளது. இதனால் திரு முக்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆதியில் குகைகளில் யானை உருவங்கள் செதுக்கப்பட்டன. அவற்றை  பௌத்தர்கள் தம்முடையவையாக ஆக்கிக்கொண்டனர். வெளி
நாடுகளுக்கு இங்கிருந்து பவுத்தம் பரவிய போது காதல் கடவுளாக யானை முகம் கொண்ட கடவுளும் பயணப்பட்டார். இளைஞரின் காதலுடன் தொடர்புடைய யானை முகக் கடவுள் ஜப்பானுக்குச் சென்ற காலம் அதுவென்பதால் அங்கு அவர் காதல் கடவுளாகவும் விளங்குகிறார்.

பிள்ளையார் பட்டியில் காணப்படும் பிள்ளையார் உருவம் அதன் முன்னால் உள்ள சோபன மண்டபம்,  அங்குப் பின்னர் எழுப்பப்பட்ட மருதீஸ்வரர் கோயில் மருதீஸ்வரரின் தலவிருட்சமாக இருக்கும் மருதமரம் [அர்ஜுனா மரம்] ஆகியவையும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. சீனாவில் விநாயகருக்கு மகா பைணி என்று பெயர். சீனாவில் விநாயகர்  வடிவங்களில் ஆணின் வலிமையை கூடுதலாகக் குறிக்க யானை முகத்தோடு புலி உருவமும் சேர்க்கப்பட்டுள்ளது.  இங்கு புலித் தோலை  உடுத்தி முத்துமாலையும் கிரீடமும் தரித்த யானை முகத்தவராக  விநாயகர் காணப்படுகிறார்.

மற்ற பௌத்த நாடுகளில் விநாயகர் உருவங்கள்

கி.பி. 513ல் சீனாவில் செய்யப்பட பழைய விநாயகர்  சிலை டுங்குரங் என்ற  ஊரில் காணப்படுகிறது. திபெத் நாட்டில் விநாயகர் பெண் வடிவில் கணேசினியாக வணங்கப்படுகிறார். இந்த பெண் வடிவ விநாயகருக்கு நெற்றியில் பிறைச் சந்திரன் திலகம் போல வரையப்பட்டுள்ளது. புத்தர் சிலையருகே காணப்படும் இச்சிலையும்  காணப்படுகிறது.

அங்கு மகா காலன் வலிமையான ஆண் தெய்வமாக போற்றப்படுகின்றான். விநாயகரை இங்கு பல கோயில்களில் முன் வாசல்களில் காவல் தெய்வமாக வைத்துள்ளனர். இப்பழக்கம் தமிழகத்திலும் காணப்படுகிறது. சப்த மாதர் கோயில்களில் பைரவரும் பிள்ளையாரும் காவல் தெய்வங்கள் ஆவர்.   அவர் கையில் கமண்டலம், மோதகம், கோடரி, திரிசூலம் ஆகியவை உள்ளன. கம்போடியா நாட்டில் ஒற்றைத் தந்தத்துடன், மூன்று கண்களும் கொண்டு கமண்டலம், திருவோடு ஆகியவைகளோடு ப்ராஹ்கணேஷ் என்ற பெயரில் யானை முகக் கடவுளை அங்கு வழிபடுகின்றனர்.

ஜாவா தீவுகளில் யானை முகக் கடவுளைக் கல்விக்  கடவுளாகக் கருதி மொட்டைத் தலையும், உடையாத தந்தமும் கொண்டு ஆற்றங்கரையில் சுயம்பு மூர்த்தியாக உருவாகி இருப்பதாகவும் நம்பி வழிபடுகின்றனர். மண்டையோடும், எலும்பு மாலையும் அணிந்து கோடாரியும், கரண்டியும் கொண்ட உருவத்தில் அவர் வழிபடப்படுகின்றார்.

எகிப்து நாட்டில் போர் மற்றும் அமைதியின் கடவுளாக சொர்க்கத்திற்கான வாயில் கதவைத் திறக்கும் சாவியை கையில் வைத்திருப்பவராக யானைமுகக் கடவுள் வழிபடப்படுகிறார்.

பினாயகன் தென்- ஜப்பானின் விநாயகர்

ஜப்பானில் யானை முகக் கடவுள் பினாயகன்தென் அல்லது காங்கி தென்  என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இவர் திசைகளின் காவலராகக் காவல் தெய்வமாக கிபி ஆறாம் நூற்றாண்டு முதல் வழிபடப்பட்டு வருகிறார். அஷ்ட திக் கஜங்கள் எட்டுத் திசையின் காவலராக இருப்பதும் இக்கருத்தின்பாற்பட்டதேயாகும்நேபாளத்தில்  விநாயகருக்கு இரண்டு மூஞ்சூறு வாகனங்கள் உள்ளன. இங்கு புத்தர் தன் சீடரான ஆனந்தனுக்கு கணபதி ஹ்ருதயம் என்ற மந்திரத்தை அருளினார் என்ற நம்பிக்கையும் வழங்குகிறது.

எனவே இம் மந்திரத்தைச் சொல்லிய பிறகே நேபாளிகள் அனைத்துச் செயல்களையும் செய்யத் தொடங்குகின்றனர். இம்மந்திரத்தைச் சொல்லிய பிறகு இவர்கள் தங்களுடைய அறுவடையைத் தொடங்குவர். நேபாளத்தின்  தலைநகரான  காத்மாண்டுவில் நாகம் குடை பிடித்துக் கொண்டிருக்க ஆறு கைகளைக் கொண்ட விநாயகர் காணப்படுகிறார்.பத்தாம் நுற்றாண்டு வரை தமிழகத்தில் புத்தர் சிலைகள் பல இடங்களில் இருந்து வந்தன. பின்னர் சைவம் தலையெடுத்தபோது ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரத்தடி, ஆலமரத்தடி என்று அங்கிங்ககெனாதபடி எங்கும் நிறைந்திருப்பார்.

விநாயகருக்குரிய பல பெயர்களில் ஜேஷ்டப் புத்திரன் என்பதும் ஒன்றாகும். ஜேஷ்ட என்றால் மூத்த என்பது பொருள். இன்றைக்கும் மலையாளத்தில் ஜேஷ்டன் என்பதை சேட்டன்  எனத்  திரிந்து   மூத்தவன் என்ற பொருளில் அண்ணன், கணவர் போன்ற மூத்தவர்களைக் குறிக்கிற சொல்லாக பயன்படுத்துகின்றனர். பௌத்த சமயத்தில் வலிமையின் சின்னமாக கருதப்பட்ட யானை முகமும், மனித உடலும் கொண்ட கடவுள் உருவம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்து இங்கிருந்து பௌத்தத் துறவிகள் மூலமாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளை அடைந்தது. அங்கு வலிமை, செல்வம், வெற்றி ஆகியவற்றிற்கு அடையாளமாக இன்றும்  போற்றப்படுகிறது.

Tags : Elephant God ,
× RELATED யானைக் கடவுள் - காங்கி தென் வழிபாடு