×

கர்த்தரிடம் உன் பாரத்தை வைத்துவிடு

ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பறைக்குள் கண்ணாடி டம்ளர் ஒன்றுடன் வந்தார். அதைக்கண்ட மாணவர்கள், ஆசிரியர் ஏன் கண்ணாடி டம்ளருடன் வகுப்பறைக்குள் வருகிறார்? என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தனர். ஆசிரியர் அந்த டம்ளரை கையில் உயர்த்திப்பிடித்து இந்த டம்ளர்  எவ்வளவு எடை இருக்கும்? என்று கேட்டார். மாணாக்கர் விடை தெரியாமல்  மௌனம் காக்க, ஆசிரியர் தொடர்ந்து பேசினார். இது மிகவும் எடை குறைந்த ஒரு பொருள்தான். ஆனால், ஒரு மணிநேரம் இதை என் கையில் வைத்திருந்தால் என் கை வலிக்கும். சுமார் பத்து மணி நேரங்கள் என் கையில் வைத்திருந்தால் என் கை மரத்துப்போகும். ஆகவே, இந்த கண்ணாடி டம்ளர் எவ்வளவு எடையுள்ளது என்பது முக்கியமல்ல. மாறாக அதை எவ்வளவு நேரம் கையில் வைத்திருக்கிறோம் என்பதே முக்கியம்.

அதுபோன்றே நமது வாழ்வில் நாம் சந்திக்கின்ற துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை மனதிலிருந்து உடனே இறக்கி வைத்துவிட்டால், அது ஒரு பெரிய சுமையாகத் தெரியாது. மாறாக அவற்றை நமது மனதில் வைத்து நினைத்துக்கொண்டேயிருந்தால்,  நமது மனதின் பாரத்தை இறக்கி வைக்கவில்லையெனில், கண்ணாடி பாரம் கையை மரத்துப் போகச்செய்வதுபோல, மனதின் பாரம் நமது வாழ்வை செயலிழக்கச் செய்யும். ஆகவே நமது மனதின் பாரங்களை நாம் உடனடியாக இறக்கி வைத்துவிட வேண்டும். இறக்கி வைக்க வேண்டிய இடம் எதுவெனில், இறைவனின் திருப்பாதமே ஆகும். ஆம்! கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். - (சங்கீதம் 55: 22) என்று திருமறை கூறுவதற்கிணங்க நமது மன பாரங்களையெல்லாம்
கர்த்தரின் திருப்பாதத்தில் இறக்கி வைத்துவிட்டால், மனதின் பாரங்கள் பறந்துவிடும். உள்ளம் இலகுவாக மாறிவிடும்.

திருமறையில் அன்னாள் என்ற ஒரு பெண்மணியைக் குறித்து கூறப்பட்டுள்ளது. அப்பெண் குழந்தைச்செல்வம் இல்லாத காரணத்தால் மிகுந்த மனவேதனையோடு வாழ்ந்து வந்தாள். அவளது மனவேதனையை அதிகரிக்கும் வண்ணம் சிலர் அவளை நிந்தித்து மனமடிவாக்கினர். ஆகவே, தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை நினைத்து அப்பெண் அடிக்கடி அழுதுகொண்டேயிருந்தாள்.ஒருநாள், தேவாலயத்திற்குச்சென்ற அவள் மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணினாள். - (1 சாமு1:10) மேலும், கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் - (1 சாமு 1:11) என்று தனது மனதின் பாரங்களை எல்லாம் கர்த்தருடைய பாதத்தில் இறக்கி வைத்தாள்.

என்ன ஆச்சரியம்! அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. - (1சாமு 1: 19) என்று திருமறை கூறுவதற்கேற்ப அவளது கவலைகளெல்லாம் கரைந்தது. பாரங்களெல்லாம் பறந்தது. மேலும், அவள் விண்ணப்பம் செய்தபடி, கர்த்தர் அவளுக்கு சாமுவேல் என்ற ஆண் மகனைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.
அன்று அன்னாளின் துயர் துடைத்த கர்த்தர், இந்நாளில், நம்மையும் பார்த்து, வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். - (மத்தேயு 11: 28) என்று அன்போடு அழைக்கிறார். ஆகவே, அன்பார்ந்தோரே! உங்களது பிரச்னைகளை நினைத்து பயப்படாதீர்கள்; உங்கள் கவலைகளை நினைத்து கலங்காதீர்கள்.

நமது துன்பமான நேரங்களில், நம் உடனிருந்து, நம்மை விசாரிக்கவும், நமக்கு ஆறுதல் கூறவும், தைரியப்படுத்தவும் அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.-(பேதுரு 5:7) என்ற திருமறை வசனத்திற்கேற்ப அவர் பாதம் சேருங்கள். உங்கள் மனதின் பாரங்களைக் கூறுங்கள். அவர் உங்கள் மனதின் அழுத்தங்களை அகற்றி, ஆறுதலையும், தேறுதலையும் தந்து உங்களை வழிநடத்துவார்.

கர்த்தரிடத்தில் வாருங்கள்!
கவலைகளைத் தீருங்கள்!!

தொகுப்பு: Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம்,
பேராயர், தூத்துக்குடி
நாசரேத் திருமண்டலம்.

Tags : Lord ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்