×

383-வது சென்னை தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய விழா

சென்னை: ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 383வது சென்னை தினவிழாவை முன்னிட்டு “நம்ம சென்னை, நம்ம பெருமை”என்ற பெயரில், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை  சாலையில் 2 நாள் விழா கொண்டாட்டம், இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து நேற்று தொடங்கியது. இதில், மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 வரை பல பொழுதுபோக்கு  நிகழ்ச்சிகளுடன் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சர்கள்  மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, தமிழச்சி  தங்கபாண்டியன் எம்பி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி  ஆணையர் ககன் தீப் சிங் பேடி, போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் கபில்  குமார்  ஆகியோர் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. விழாவில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவையும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டன. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் கோவிட் தடுப்பூசி முகாம் மற்றும் இயற்கை உர விற்பனைக்கான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அந்த பகுதியை ரசிக்கும் வகையில்    பிரமாண்ட முறையில் வண்ண விளக்குகள் கொண்டு திருவிழாப்போல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். சிறுவர்கள் குடும்பத்துடன் வந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்சசி இன்று வரை (21ம் தேதி) நடைபெறுகிறது. இந்த விழாவில் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்கள் செல்போனில், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் செல்பி பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பள்ளிகளில் ஓவியப் போட்டி, புகைப்பட போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை தினத்தை கொண்டாட பிரத்யேக பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.நிகழ்ச்சி குறித்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறுகையில்,‘‘சென்னை தினத்தை அனைவரும் ஒன்றாக இணைந்து சென்னை வாரமாகவே கொண்டாடி வருகிறோம். சென்னை தினத்தையொட்டி ஓவியம், குறும்படம் என பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்காக நிறைய ஸ்டால்கள் போடப்பட்டுள்ளன. குறிப்பாக விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,’’என்றார்….

The post 383-வது சென்னை தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய விழா appeared first on Dinakaran.

Tags : 383rd Chennai Day weeding ,Chennai ,Chennai Day ,383rd Chennai Day Festival ,383rd Chennai Day Weeding Ceremony ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!