×

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

273. ப்ருஹத்ரூபாய நமஹ (Prbruhadroopaaya namaha)

(‘நைகரூப:’ என்ற 272-வது திருநாமம் தொடங்கி, ‘ப்ரதாபன:’ என்ற 278-வது திருநாமம் வரையில் உள்ள 7 திருநாமங்கள், திருமாலுடைய விஸ்வரூபத்தின் பெருமையைச் சொல்கின்றன)திருமங்கை ஆழ்வாருக்குத் தோள்களில் சங்கு சக்கரப் பொறிகளாகிய வைணவ இலச்சினையை அளித்தவர் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள். ஒரு ஆசாரியரின் (குருவின்) ஸ்தானத்தில் இருந்து தனக்கு வைணவ தீட்சையை அருளிய அந்த ஸ்ரீநிவாசப் பெருமாளை “நறையூர் நின்ற நம்பி!” என்றே அழைத்தார் திருமங்கை ஆழ்வார். (‘நம்பி’ என்பது ஆச்சாரியனைக் [குருவைக்] குறிக்கும் சொல் ஆகும்.)

இறைவன் என்னும் பதவியை விட, ‘ஆச்சாரியன்’ என்னும் பதவியே உயர்ந்தது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால் தான் இறைவனே ஆச்சாரிய ஸ்தானத்தில் அமர விழைகிறார். கிருஷ்ணாவதாரத்தில் அர்ஜுனனுக்குக் குருவாய் இருந்து கீதையை உபதேசித்து, கீதாச்சார்யன் என்று ஆச்சாரிய ஸ்தானத்தைப் பெற்றான் கண்ணன். அதுபோலவே இப்போது திருமங்கை ஆழ்வாருக்கு சங்கு சக்கரப் பொறிகளை வழங்கி ஆச்சாரிய ஸ்தானத்தைப் பெற்றார் ஸ்ரீநிவாசப் பெருமாள். சைவத்திலும் கூட, மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறையில் சிவபெருமானே குருவாக வந்து தீட்சை வழங்கிய வரலாறு உள்ளது.

அர்ஜுனனுக்குக் குருவாய் இருந்து உபதேசம் செய்த போது, கண்ணன் அவனுக்குத் தனது விஸ்வரூபத்தைக் காட்டியருளினான் அல்லவா? அதுபோல், தனது சீடரான திருமங்கை ஆழ்வாருக்கும் அந்த விஸ்வரூபத்தைக் காட்டி அருளினார் ஸ்ரீநிவாசப் பெருமாள். பெருமாளின் ஆடையில் அனைத்துக் கடல்களும் தெரிந்தன. அவரதுதிருவடிகளில் பூலோகம் அனைத்தும் அடங்கி இருந்தது. அவரது திருமேனியில் காற்றுக் கூட்டங்கள் அனைத்தும் காணப்பட்டன. அவரது தோள்களில் எட்டு திசைகளும் தெரிந்தன. அவரது கிரீடத்தில் அண்டங்கள் அனைத்தும் இருந்தன. இத்தகைய பிரம்மாண்டமான வடிவைத் தரிசித்துப் பரவசமடைந்த திருமங்கை ஆழ்வார், அதை வருணித்து ஓர் அழகான பாடலைப் பாடினார்:

“பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்!
கவ்வை மாகளிறு உந்தி வெண்ணி ஏற்றக்
கழல்மன்னர் மணிமுடிமேல் காகம் ஏற
தெய்வ வாள் வலம்கொண்ட சோழன்
சேர்ந்த திருநறையூர் மணிமாடம்
சேர்மின்களே!”
     
இதன் பொருள்: “விஸ்வரூபத்தில் திருமாலுக்குக் கடல் நீரே இடையில் அணியும் ஆடையாக ஆகிறது. பூமியின் நிலப்பரப்பு முழுவதும் அவரது திருப்பாதங்களாக ஆகிறது. காற்றுக் கூட்டங்கள் அனைத்தும் அவரது உடலாகின்றன. திசைகள் எட்டும் அவரது தோள்கள் ஆகின்றன. அண்டங்கள் அனைத்தும் அவரது கிரீடமாய் ஆகின்றன. அப்படிப்பட்ட விஸ்வரூபத்தை உடைய திருமால், திருநறையூர் எனப்படும் நாச்சியார்கோவிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளாகக் காட்சி தருகிறார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட் சோழ நாயனார், இந்த ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்கி, அவரிடம் தெய்வீக வாளைப் பெற்று, அப்பெருமாளின் அருளால் கோவில்வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில் எதிர்தரப்பு வீரர்களை எல்லாம் சாய்த்து, அவர்களின் பிணங்களைக் காகங்கள் உண்ணுமாறு செய்தார். தனக்கு வெற்றியைத் தந்தருளிய பெருமாளுக்காக நாச்சியார்கோவிலில் அமைந்திருந்த சிறிய கோவிலைப் பெரிய மணிமாடக் கோவிலாகக் கட்டித் தந்தார். திருமாலின் திருவடிகளை யாரெல்லாம் வணங்க விரும்புகிறீர்களோ, அவர்கள் அனைவரும் நாச்சியார்கோவில் மணிமாடக் கோவிலுக்கு வாருங்கள்!”

கடல், நிலம், காற்று, திசைகள், அண்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் திருமாலின் உடல் அங்கங்களாக உள்ளன என்று கூறும் இப்பாடலின் வாயிலாக, அனைத்திலும் திருமால் உறைகிறார் என்னும் தத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. இத்தகைய தத்துவத்தை உணர்த்தும் பிரம்மாண்டமான வடிவை உடையவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ப்ருஹத்ரூப:’என்றழைக்கப்படுகிறார். வடமொழியில் ‘ப்ருஹத்’ என்றால் பெரிய என்று பொருள். ‘ரூப:’ என்றால் வடிவம். கடல்நீரை ஆடையாகவும், நிலப்பரப்பைப் பாதங்களாகவும், காற்றுக் கூட்டங்களை உடலாகவும், எண்திசைகளைத் தோள்களாகவும், அண்டங்களைக் கிரீடமாகவும் கொண்டு மிகப்பெரிய வடிவத்தோடு திகழும் திருமாலுக்கு ‘ப்ருஹத்ரூப:’ என்று பெயர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 273-வது திருநாமம்.“ப்ருஹத்ரூபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்துப் பெருமைகளும் கிட்டும்படித்திருமால் அருள்புரிவார்.

274. சிபிவிஷ்டாய நமஹ(Sipivishtaaya namaha)

(‘நைகரூப:’ என்ற 272-வது திருநாமம் தொடங்கி, ‘ப்ரதாபன:’ என்ற 278-வது திருநாமம் வரையில் உள்ள 7 திருநாமங்கள், திருமாலுடைய விஸ்வரூபத்தின் பெருமையைச் சொல்கின்றன)திருமாலிருஞ்சோலை கள்ளழகரின் பெருமைகளை வர்ணித்துப் பாடிய நம்மாழ்வார், ஓர் இடத்தில், “பொருளென்று இவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல்மருளில் வண்குருகூர் வண்சடகோபன்”என்று தம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டார். “இவ்வுலகைப் படைத்த இறைவன், தன் பெருமைகளையும் புகழையும் குறித்த ஞானத்தைத் திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபனான அடியேனுக்கு அருளியுள்ளான். அவனது அருளால் எந்தவிதமான சந்தேகமும் இல்லாத தெளிவான ஞானத்தை உடையவனாக நான் விளங்குகிறேன்!” என்பது இத்தொடரின் கருத்தாகும்.

இவ்வாறு நம்மாழ்வார் பாடியதைக் கவனித்த அழகர், “பரம ஞானியான உங்கள் உள்ளத்தில் சாதாரண மனிதர்களின் உள்ளங்களில் எழுவது போன்ற சந்தேகங்கள் வராது. எனினும், என்னுடைய அழகைக் காட்டி அதன் விளைவாக உங்களது உள்ளத்தில் சந்தேகத்தை வரவழைக்கிறேன்!” என்று ஆழ்வாரைப் பார்த்துச் சொல்லி விட்டு, தனது வடிவழகைக் காட்டியருளினார். அதிலும், நம்மாழ்வாரின் பக்திக்குத் தலைவணங்கும் வகையில், அவரை நோக்கித் தலைகுனிந்த படி வந்து நின்றாராம் திருமால். பொதுவாக பக்தர்கள் இறைவனின் பாதங்களில் தொடங்கி மேலே ஒவ்வொரு அவயவமாக வர்ணிப்பது வழக்கம். ஆனால் இங்கே இறைவன் ஆழ்வார் முன் தலைகுனிந்து வந்து நின்றபடியால், நம்மாழ்வார் இறைவனின் திருமுடியில் தொடங்கித் திருவடி வரை மேலிருந்து கீழ் நோக்கிப் பாடி, இறைவனின் அழகினால் தம் உள்ளத்தில் உருவாகிய ஐயத்தை இப்பாடலால் தெரிவிக்கிறார்:

“முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே
கட்டுரையே!”

“இறைவா! நீ உன் தலைக்கு மேல் தனியாக ஒரு கிரீடம் வைத்திருக்கின்றாயோ? அல்லது உனது முகத்தில் உள்ள ஒளியே மேலே படர்ந்து திடமாகிக் கிரீடமாக என் கண்ணுக்குத்தோன்றுகின்றதோ? உனது திருவடிகளுக்குக் கீழே ஆசன பத்மம் எனப்படும் தாமரை ஒன்று தனியாக உள்ளதோ? அல்லது உன் திருப்பாதங்களின் சுடரே கீழே பரவி அந்தத் தாமரை போல் தென்படுகின்றதோ? உனது திருமேனியின் ஒளியே நீ அணிந்திருக்கும் திவ்ய ஆபரணங்களாக வடிவெடுத்து விட்டதோ? அல்லது நீ தனியாக ஆபரணங்கள் அணிந்திருக்கின்றாயோ?

உன் இடுப்பின் ஒளியே பட்டுப் பீதாம்பரமாக உருவெடுத்து விட்டதோ? அல்லது நீ தனியாக ஒரு பீதாம்பரம் அணிந்திருக்கின்றாயோ?” என்பன போன்ற கேள்விகளை இப்பாடலில் கேட்டுத் தமக்கு எழுந்த ஐயங்களைத் திருமாலிடம் விண்ணப்பித்தார் ஆழ்வார்.அதற்கு விடையளித்த திருமால், “நான் கிரீடம் அணிந்துள்ளேன், தாமரை மேல் என் திருவடி களைப் பதித்துள்ளேன், பட்டுப் பீதாம்பரமும் ஆபரணங்களும் தரித்துள்ளேன்! இவை வெறும் ஒளியினால் உண்டான தோற்றங்கள் அல்ல!” என்றார்.

நம்மாழ்வாரோ, “நீ கிரீடமும், ஆபரணங்களும், பட்டாடையும் தரித்திருப்பது உண்மை தான். அவை மிகவும் ஒளிபடைத்தவையாக இருப்பதும் உண்மைதான். எனினும், உன் முகத்தில் இருந்து பெருகும் ஒளி, கிரீடத்தின் ஒளியை மங்கச் செய்கிறது. திருவடியில் இருந்து பெருகும் ஒளி, தாமரையின் ஒளியை மங்கச் செய்கிறது. திருமேனியில் இருந்து பெருகும் ஒளி, உன் ஆடை ஆபரணங்களின் ஒளியை மங்கச் செய்கிறது. உன் கிரீடம், ஆடை, ஆபரணங்கள் என்று மட்டும் இல்லாமல், அனைத்து உலகங்களிலுமே உன் ஒளி பரவி வியாபித்து இருக்கிறது. அதனால் தான் அந்த ஒளியே கிரீடம், தாமரை, பட்டாடை, ஆபரணங்கள் உள்ளிட்டவையாக உருவெடுத்து விட்டதோ என்று கவிநயத்துடன் கேட்டேன்!” என்று கூறினார்.

‘சிபி’ என்றால் ஒளிக்கிரணம் என்று பொருள். ‘விஷ்ட’ என்றால் வியாபித்திருத்தல் அல்லது நிறைந்திருத்தல் என்று பொருள். திருமாலின் திருமேனி ஒளி, சூரிய ஒளிபோல் எங்கும் பரவி இருந்து, அனைத்துலகங்களுக்கும் ஒளி தருவதால், திருமால் ‘சிபிவிஷ்ட:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 274-வது திருநாமம்.“சிபிவிஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஒளிமயமான வாழ்வு  கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

275. ப்ரகாசனாய நமஹ (Prakaashanaaya namaha)

(‘நைகரூப:’ என்ற 272-வது திருநாமம் தொடங்கி, ‘ப்ரதாபன:’ என்ற 278-வது திருநாமம் வரையில் உள்ள 7 திருநாமங்கள், திருமாலுடைய விஸ்வரூபத்தின் பெருமையைச் சொல்கின்றன)பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் கர்மயோகம், ஞானயோகம் ஆகியவற்றை அர்ஜுனனுக்கு விளக்கிய கண்ணன், அதன் பின் ஏழாம் அத்தியாயம் முதல் பக்தி யோகத்தின் பெருமையைச் சொல்லத் தொடங்கினான். அந்த பக்தியோகத்தைச் செய்யும் முறையை ஒன்பதாம் அத்தியாயத்தில் தெரிவித்த கண்ணன், “அர்ஜுனா! எப்போதும் இடைவிடாமல் என்னையே தியானம் செய்தால் என்னையே வந்து அடைவாய்!” என்று கூறினான்.

ஆனால் இதைக் கேட்ட அர்ஜுனனுக்குக் கலக்கம் ஏற்பட்டது. “கண்ணா! இடைவிடாமல் உன்னையே தியானிப்பது எப்படி சாத்தியம்? என் போன்றோரின் மனம் என்பது எப்போதும் நாலாப் புறமும் சிதறிக் கொண்டே அல்லவா இருக்கும்? உன்னையே தியானித்து அதில் சித்தி பெற்று உன்னை அடைவது என்பது என் போன்றோர்க்குச் சாத்தியமில்லாத காரியம் போலும்!” என்றான் அர்ஜுனன்.

அதற்குக் கண்ணன், “அர்ஜுனா! எனது மேன்மைகளை எல்லாம் வரிசையாக நான் உனக்குச் சொல்கிறேன்! அவற்றை நீ மனத்தில் பதித்துக் கொண்டாலே, உன் மனம் தானாக என்னைத் தியானிக்கத் தொடங்கிவிடும்!” என்று சொல்லி அர்ஜுனனைத் தேற்றிய பின், தனது மேன்மைகளை எல்லாம் கீதையின் பத்தாம் அத்தியாயத்தில் பட்டியலிட்டான் கண்ணன்.

“அதிதியின் மகன்களுள் வாமனனாகவும், ஒளிகளுக்குள் சூரியனாகவும், வேதங்களுக்குள் சாமவேதமாகவும், தேவர்களுக்குள் இந்திரனாகவும், உருத்திரர்களுக்குள் சிவனாகவும், யட்சர்களுக்குள் குபேரனாகவும், வசுக்களுக்குள் அக்னியாகவும், மலைகளுக்குள் மேருவாகவும், புரோகிதர்களுக்குள் பிருகஸ்பதியாகவும், சேனாதிபதிகளுக்குள் முருகனாகவும், நீர்நிலைகளுக்குள் பெருங்கடலாகவும், முனிவர்களுக்குள் பிருகுவாகவும், வார்த்தைகளுள் ஓம்காரமாகவும், யாகங்களுக்குள் ஜபமாகவும், மரங்களுள் அரச மரமாகவும், தேவரிஷிகளுள் நாரதராகவும், சித்தர்களுள் கபிலராகவும், யானைகளுள் ஐராவதமாகவும், ஆயுதங்களுள் வஜ்ராயுதமாகவும், பசுக்களுள் காமதேனுவாகவும், நாகங்களுள் ஆதிசேஷனாகவும், அசுரர்களுள் பிரகலாதனாகவும், மிருகங்களுள் சிங்கமாகவும், பறவைகளுள் கருடனாகவும், ஆயுதம் ஏந்தியவர்களுள் ராமனாகவும், நதிகளுள் கங்கையாகவும், எழுத்துக்களுள் அகரமாகவும், பா வகைகளுக்குள் காயத்ரியாகவும், மாதங்களுக்குள் மார்கழியாகவும், காலங்களுக்குள் வசந்த காலமாகவும், பாண்டவர்களுள் அர்ஜுனனாகவும், முனிவர்களுள் வியாசராகவும், பண்டிதர்களுள் சுக்கிராச்சாரியாராகவும், ரகசியங்களுள் மவுனமாகவும் நான் இருக்கிறேன்! அதாவது உலகில் உள்ள இத்தகைய அனைத்துக் கூட்டங்களும் அவற்றின் தலைவர்களும் எனக்கு உடலாக உள்ளார்கள், நானே அவர்களுக்கு உயிராக இருக்கிறேன்! இப்பெருமைகளை உணர்ந்து என்னை தியானம் செய்தால், உனது மனம் சிதறாமல் இந்த மேன்மைகளிலேயே நன்கு ஈடுபடும், உனக்கு தியானமும் கைகூடும்!” என்று அர்ஜுனனிடம் கூறினான்.

அச்சமயம் அர்ஜுனனுக்கு ஓர் ஆசை வந்தது. “அனைத்தும் உனக்கு உடல் என்றும், அனைத்துக்குள்ளும் நீ உயிராக இருக்கிறாய் என்றும் சொன்னாயே! அதை நான் என் கண்களால் காண விழைகிறேன்! காட்டியருள முடியுமா?” என்று கண்ணனிடம் வேண்டினான். அவன் மேல் கருணை கொண்ட கண்ணன், கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தில் விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினான்.

“அர்ஜுனா! ஆதித்தியர்கள், வசுக்கள், உருத்திரர்கள், யட்சர்கள், உள்ளிட்ட தேவர் கூட்டங்கள் தொடங்கி, முனிவர்கள், யோகிகள், ரிஷிகள், அசுரர்கள் உட்பட நீ இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்னவெல்லாம் காண நினைக்கிறாயோ அத்தனையும் என்னுள்ளே பார்!” என்று சொல்லி, அர்ஜுனனுக்குத் திவ்யமான கண்களை அருளினான் கண்ணன். பலமுகங்களும், பல கண்களும், பல ஆயுதங்களும் கொண்ட, ஒளிமிக்க அந்த விஸ்வரூபத்தினுள்ளே உலகில் உள்ள அனைத்து ரூபங்களும் அடங்கி இருப்பதை அர்ஜுனன் கண்டான். இதுவரை ஒலி வடிவில் கேட்ட கண்ணனின் பெருமைகளை ஒளி வடிவில் கண்டு மகிழ்ந்தான்.

காண வேண்டும் என்று விரும்பியஅர்ஜுனனுக்காக, ஒலி வடிவில் சொன்ன தனது பெருமைகளை ஒளியாகப் பிரகாசப் படுத்தி, ‘ஒலியும் ஒளியுமாகக்’ காட்டியதால், விஸ்வரூபம் எடுத்த திருமாலுக்கு ‘ப்ரகாசன:’ என்று பெயர். ‘ப்ரகாசன:’ என்றால் பிரகாசப் படுத்திக் காட்டுபவர் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 275-வது திருநாமம்.“ப்ரகாசனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பிரகாசமான ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

276. ஓஜஸ்-தேஜோ-த்யுதிதராய நமஹ (Ojas-thejo-dhyuthi-dharaaya namaha)

(‘நைகரூப:’ என்ற 272-வது திருநாமம் தொடங்கி, ‘ப்ரதாபன:’ என்ற 278-வது திருநாமம் வரையில் உள்ள 7 திருநாமங்கள், திருமாலுடைய விஸ்வரூபத்தின் பெருமையைச் சொல்கின்றன)காஞ்சியில் வாழ்ந்த வரதகுரு என்னும் மகான், அத்தி வரதரின் மேல் அன்பு கலந்த பக்தி கொண்டிருந்தார். அத்தி வரதருக்கு அர்ச்சகர் சூடான பாலைச் சமர்ப்பிக்கச் சென்ற போது, அதை வாங்கி, ஆற வைத்து, தாய் குழந்தைக்குச் சமர்ப்பிப்பது போல் ஆசையுடன் சமர்ப்பிக்க, அதைக் கண்டு உகந்த அத்தி வரதர், வரதகுருவைப் பார்த்து “அம்மா!” என்றழைத்தபடியால், நடாதூர் அம்மாள் என்றே வரதகுருவைஅனைவரும் அழைக்கத் தொடங்கினார்கள்.

அந்த நடாதூர் அம்மாள், உபநிஷத்துக்களை விளக்குவதில் வல்லுனராகத் திகழ்ந்தார். அவர் தமது சீடர்களுக்கு ஒருநாள் சாந்தோக்ய உபநிஷத்தின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். அதில் ஒரு வாக்கியம் - “ஐததாத்ம்யம் இதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா”. இதன் பொருளைக் கூறுகையில், “உலகமெல்லாம் இறைவனுக்கு உடல், இறைவன் அனைத்துலகுக்கும் உயிர்!” என்று கூறினார் நடாதூர் அம்மாள்.

அவரது சீடர்களுள் ஒருவரான சுதர்சன சூரி எழுந்து, “இறைவனுக்கு உலகெல்லாம் உடல் என்று சொன்னாலே, இறைவன் தான் அவற்றின் உயிர் என்று புரிந்து விடுமே! அல்லது, இறைவனே அனைத்துலகுக்கும் உயிர் என்று சொன்னாலே, அனைத்துலகும் இறைவனுக்கு உடல் என்று தேறுமே! உபநிஷத் எதற்காக இரண்டு முறை - உலகெல்லாம் இறைவனுக்கு உடல் என்று ஒருமுறையும், இறைவனே உலகுக்கெல்லாம் உயிர் என்று இரண்டாம் முறையும் - சொல்கிறது?” என்று கேட்டார்.

நடாதூர் அம்மாள், “ராமாயணத்தில் வால்மீகி, ‘ராமாநுஜம் லக்ஷ்மணபூர்வஜம் ச’ என்று ஓரிடத்தில் ராம-லட்சுமணர்களைக் குறிப்பிட்டுள்ளார். ‘ராமாநுஜ:’ என்றால் ராமனின் தம்பி, ‘லக்ஷ்மணபூர்வஜ:’ என்றால் லட்சுமணனின் அண்ணன். ராமன், லட்சுமணன் என்று நேரே சொல்லாமல், ராமனின் தம்பி என்று லட்சுமணனையும், லட்சுமணனின் அண்ணன் என்று ராமனையும் சொல்கிறார்.

என்ன காரணம் தெரியுமா?

ஒரு பக்தனைச் சொல்லும் போது இறைவனைச் சொல்லி அந்த பக்தனை அடையாளப் படுத்துவது வழக்கம். கிருஷ்ண பக்தையான ஆண்டாள், ராம பக்தரான குலசேகரப் பெருமாள், அரங்கனின் பக்தரான தொண்டரடிப் பொடியாழ்வார் என்று இறைவனை இட்டு அடியவரைச் சொல்லும் வழக்கத்தைப் பின்பற்றி, ராமனின் தம்பியான லட்சுமணன் என்று வால்மீகிசொல்கிறார்.

அதுபோலவே, இறைவனைச் சொல்லும் போதும் பக்தனை இட்டு இறைவனை அடையாளப் படுத்திச் சொல்லவேண்டும். நம்மாழ்வார் பாடிய ஒப்பிலியப்பன், திருமங்கை ஆழ்வார் பாடிய சார்ங்கபாணிப் பெருமாள், மேதாவி முனிவர் வணங்கிய நிவாசன், தொண்டைமானுக்கு அருளிய திருவேங்கடமுடையான் என்றெல்லாம் பக்தர்களை இட்டு பகவானைச் சொல்லும் வழக்கத்தைப் பின்பற்றி, லட்சுமணனின் அண்ணனான ராமன் என்று வால்மீகி சொல்கிறார்.

அந்த வழியில் தான் உபநிஷத்தும் ‘ஐததாத்ம்யம் இதம் ஸர்வம் - இறைவனுக்கு உடலாய் இருக்கும் உலகம்’ என்று இறைவனை இட்டு உலகையும், ‘தத் ஸத்யம் ஸ ஆத்மா - உலகுக்கெல்லாம் உயிராக இருக்கும் இறைவன்’ என்று உலகை இட்டு இறைவனையும் இங்கே சொல்கிறது.

மேலும், ‘இறைவனுக்கு உடல்’ என்று உலகைச் சொல்லும் போது, காற்றில் மிதக்கும் ஒலிகளிலும், கடலில் தவழும் அலைகளிலும், உலகின் ஒவ்வொரு பொருளிலும் இறைவன் இருப்பதை நாம் அறியலாம். உலகையே நாம் தெய்வீகக் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்குவோம். ‘உலகுக்கு உயிர்’ என்று இறைவனைச் சொல்லும் போது, உலகைத் தாங்குவதற்குரிய வலிமை, அவ்வாறு தாங்குவதால் உண்டான புகழ், அதனால் இறைவனுக்கு ஏற்படும் பொலிவு உள்ளிட்ட குணங்களையும் நாம் எண்ணி உகக்கலாம். இவ்வாறு புரிந்து கொண்டால், நடைமுறை வாழ்க்கையும் ஆன்மிகமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சீராக இயங்குமல்லவா?” என்றார் நடாதூர் அம்மாள்.

உலகனைத்தும் இறைவனின் உடல், இறைவனே உலகுக்கெல்லாம் உயிர் என்னும் இந்த சாந்தோக்ய உபநிஷத் கருத்தை நம் கண்முன் படம் பிடித்துக் காட்டவே விஸ்வரூப தரிசனத்தைக் கண்ணன் அர்ஜுனனுக்கு வழங்கினான். அந்த விஸ்வரூபத்தில் உலகைத் தாங்கக் கூடிய வலிமையும், அனைத்துலகுக்கும் தலைவனாய் இருத்தலாகிய புகழும், அனைத்துலகையும் காக்கும் மகிழ்ச்சியால் உண்டான பொலிவும் நிறைந்தவராகத் திருமால் திகழ்ந்தார்.

வடமொழியில் ‘ஓஜஸ்’ என்றால் வலிமை, ‘தேஜஸ்’ என்றால் புகழ், ‘த்யுதி:’ என்றால் பொலிவு. ‘தர:’ என்றால் உடையவர். உலகைத் தாங்கவல்ல வலிமை, உலகின் தலைவனுக்குரிய புகழ், உலகைக் காப்பதால் உண்டான பொலிவு ஆகிய மூன்றும் விஸ்வரூபத்தில் நன்கு வெளிப்படுவதால், விஸ்வரூபத்தில் திருமால் ‘ஓஜஸ்தேஜோத்யுதிதர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 276-வது திருநாமம்.“ஓஜஸ்தேஜோத்யுதிதராய நமஹ” என்று தினமும் சொல்லும் அன்பர்கள், திருமால் அருளால் வலிமை, புகழ், மற்றும் பொலிவோடு திகழ்வார்கள்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!