×

கனகசபை மேவும் எனது குருநாதா

அருணகிரி உலா-104

க்ஷேத்ரக் கோவைப் பாடலில் கும்பகோணம், திருவாரூரை அடுத்து சிதம்பரத்தைக் குறிப்பிடுகிறார், அருணகிரிநாதர். சைவ சமயத்தவர் ‘கோயில்’ என்று கூறினால் அது சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலையே குறிப்பதாக அமையும். தேவார மூவர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர் அனைவராலும் பாடப்பெற்ற திருத்தலம். தில்லை எனப்படும் சிதம்பரம் இங்கு உமைய பார்வதியுடனான திருமூலட்டானேசுவரரும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜரும் எழுந்தருளியுள்ளனர். தில்லை வனமாக இருந்தால் ஊரின் பெயர் தில்லை எனப்பட்டது. தற்போது ‘சிதம்பரம்’ எனும் கோயிலின் பெயராகவும் உள்ளது.

புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் சிவபெருமானைப் பூசித்து உய்வு பெற்ற தலம் சிதம்பரம். எனவே அருணகிரி நாதர் தாம இத்தலத்தில் பாடிய 65 பாடல்களுள், நான்கு பாடல்களில் மட்டுமே ‘சிதம்பரம் என்று ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டு விட்டு மற்றவற்றில் ‘புலிசை’ ‘புலியூர்’ ‘பெரும்பற்ற புலியூர்’ எனும் பெயர்களில் பாடியுள்ளார். சில பாடல்களில் செம்பொன்னம்பலம் என்றும் கனகபை என்றும் குறிப்பிடுகிறார்.

‘‘கனகசபை மேவும் எனது குருநாத’’  ‘‘செம்பொன்னம்பலத்தாடும் அவர் தம்பிரானே’’ விராடபுருஷனின் வடிவத்தில், சிதம்பரம் இருதயஸ்தானமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்ச பூதத் தலங்களுள் இது ஆகாயத் தலம். ஆடல் வல்லானின் ஐந்து சபைகளுள் இது கனகசபை தவிரவும் யிலுக்குள்ளேயே ஐந்து வெவ்வேறு சபைகள் உள்ளன. இறைவன் ஆடல்புரியும் சிற்றம்பலம், சிற்சபை எனவும், அதற்கு முன்னுள்ள எதிரம்பலம் கனகசபை எனவும்,கொடிமரத்தின் தெற்கேயுள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் சந்நதி நிருத்தசபை எனவும், சோமாஸ்கந்தர் முதலான திருமேனிகள் எழுந்தருளியுள்ளசபை தேவசபை எனவும் ஆயிரக்கால் மண்டபம் ராஜசபை எனவும் வழங்கப் பெறுகின்றன.

கர்ப்பக்கிரகத்தில் உருவத்திருமேனியாக எழுந்தருளியுள்ள நடராஜரைக் காணலாம். மந்திர சொரூபமாகிய திருவம்பலச் சக்கரம்தான் சிதம்பர ரகசியம் எனப்படுகிறது. இது அருவத்திருமேனி; அருஉருவமாக ஸ்படிகலிங்க மூர்த்தியை காணலாம்; இவர் அழகிய சிற்றம்பலமுடையார் எனப்படுகிறார். நடராஜரின் இடப்புறம் சிவகாமி அம்மையாரும், ஸ்வர்ணாகர்ஷண பைரவரும் உள்ளனர். உ.வே.சா அவர்கள் இவரை ஸ்வர்ண காலபைரவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆடல்வல்லானுடைய நடனக் காட்சியைத் தனது சிதம்பரத் திருப்புகழ் மூலம் நம் மனக்கண் முன் கொண்டு வருகிறார் அருணகிரி நாதர்.

அந்தர துந்துமி யோடு டன்கண
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய
ரிந்திர சந்திரர் சூரி யன்கவி
வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி
அம்புய னந்திரு மாலொ டிந்திரை
வாணி யணங்கவ ளோட ருந்தவர் ......
தங்கள்மாதர்
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர்
அம்புவி மங்கைய ரோட ருந்ததி
மாதர் புகழ்ந்திட வேந டம்புரி
அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே
[பதர் = நடம்புரிபாதத்தர்]
என்பது அப்பாடல்.

வழக்காடு மன்றத்தில், தில்லைக்கோயில் பூசை செய்யும் தமக்கே உண்டு என்பதை நிரூபிக்க, தில்லையந்தணர்கள் ‘தாது மாமலர்’ எனத் துவங்கும் திருப்புகழ்ப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினர். அன்று அம்மன்றத்தில் இதைக் கேட்க நேர்ந்த வடக்குப்பட்டு சுப்ரமண்ய பிள்ளை என்பார், திருப்புகழ் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளைத் தேடிச் சென்று பதிப்பிப்பதைத் தன் வாழ்நாள் தொண்டாக மேற்கொண்டார்.

அவரது மகன் தணிகை மணி திரு.வி.சு. செங்கல்வ ராயப் பிள்ளை அவர்கள் தந்தையைத் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டதோடு, பாடல்களுக்கான மிகச் சிறந்த உரையையும் பதிப்பித்தார். இப்பாடல்களால் மிகவும் கவரப்பட்ட வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், ‘திருப்புகழ் மணி’ என்று மஹா பெரியவாளால் அழைக்கப்பட்ட ஜஸ்டிஸ் டி, எம், கிருஷ்ணஸ்வாமி ஐயர், குருஜி திரு. ஏ. எஸ். ராகவன் போன்றோர்அருணகிரி நாதரின் நூல்களைக் கற்றுத் தேர்ந்து இசையுடன் பாடி அவை உலகெங்கும் பரவக் காரணமாயினர்.

முகம்மதியர்களுக்கஞ்சி கி.பி. 17ஆம் நூற்றாண்டில் நடராஜரை ஒரு புளியம் பொந்தில் ஒளித்து வைத்து பின் அவரை மீட்டு வந்ததை உ.வே.சா அவர்கள் தனது ‘அம்பலப்புளி’ எனும் கட்டுரையில் (நினைவு மஞ்சரி) குறிப்பிட்டிருப்பதாக பேராசிரியர் வெள்ளைவாரணர் கூறுகிறார். சிலை அங்கு வைக்கப்பட்டிருப்பதை அறிந்த தோப்பின் உரிமையாளர் அங்கு யாருமறியாமல் தினசரி பூஜை செய்து வந்ததால் அதுஅம்பலப்புள் என்றழைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.

நடராஜர் கோயிலிலுள்ள நான்கு கோபுரங்களையும் ஒட்டி முருகன் சந்நதிகள் உள்ளன. இங்கெல்லாமும் அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ளார்.

‘‘ஞான பூமியதான பேர் புலி
யூரில் வாழ் தெய்வானை மானொடு
நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே’’
‘‘மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய ......
தம்பிரானே.’’
‘‘வீறு சேர்வரை யரசாய் மேவிய
 மேரு மால்வரை யெனநீள் கோபுர
 மேலை வாயிலின் மயில்மீ தேறிய ......
பெருமாளே.’’

போன்ற பாடல்களே இதற்கு அத்தாட்சி.
கும்பகோணம், ஆரூர், சிதம்பரம்
இவ்வூர்களைத் தொடர்ந்து அடுத்தபடியாக க்ஷேத்திரக் கோவைப் பாடலில் இடம் பெற்றிருக்கும் தலம் கோவைப் பாடலில் இடம் பெற்றிருக்கும் தலம் (உம்பர் வாழ்வுறு) சீகாழியாகும். சீகாழி எனும் பெயரைக் கேட்டதுமே நமக்கு நினைவுக்கு வருபவர் ஞான சம்பந்தப் பெருமானே. அருணகிரியாரைப் பொருத்த மட்டில், முருகப் பெருமானே தான் பூமியில் வந்து ஞான சம்பந்தராகத் தோன்றினார் என்ற கொள்கையில் உறுதியாக விளங்கினார். திருப்புகழ்ப் பாடல்களிலும் கந்தர் அந்தாதிச் செய்யுட் களிலும் இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகப் பாடியுள்ளார்.

‘‘கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை ......
கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
 கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
 கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான்
 குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ......
பெருமாளே.’’

என்று திருக்குடவாயிலில் பாதம் போது ‘‘யாவராலும் கருதிப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், வேல், இவை தமை எவரும் காணாவகை சீகாழியில் கவுணியர் குலத்தில் தோன்றினான்’’ என்று கூறுகிறார். உமை பாலருந்தியது, கவிஞனாய்ப் பாடல்கள் பாடியது, பாண்டியனின் கூனை நிமிர்த்தியது, சமணர்களை கழுவேறச் செய்தது போன்ற பல குறிப்புகள் இங்குள்ளன.

இறுதியாக ‘‘மதுரை நகரின் முன்பிருந்த சமண நிலையை மாற்றி வேதபுரி எனும் படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியாம் சைவ நெறியில் சேர்ப்பித்து திருக்குடவாயில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே’’ என்று நிறைவு செய்கிறார்.

கார ணக்குறி யான நீதிய
 ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதியகதிர்வேலா
பாடல். எவற்றிற்கும் மூல காரண இலக்குப் பொருளானவனும் நீதிமானும் ஆகிய சிவபிரானது சந்நதிகளிலே அறநெறியை ஓதும் பிரபந்தமாகி சிவநூலாம்
தேவாரத்தை ஓதிய கதிர் வேலனே!
 ‘திருக்கை’ எனத் துவங்கும் கந்தர்
அந்தாதிச் செய்யுளில்
‘‘தென்னன் அங்கத்திருக்கை அம்போருக்
கைந்நீற்றின் மாற்றி, தென்னூல் சிவ பக்தி
 ருக்குஐயம் போக உரைத்தோன் சிலம்பு ’’


என்று பாடுகிறார்.‘‘கூன் பாண்டியனின் முதுகில் இருந்த குறைபாட்டை, தாமரை போன்ற தன் திருக்கையில் தரித்த திருநீற்றினால் நேர்படச் செய்தவனும், தமிழ் நூலும், சிவ பக்தியை உண்டாக்கும் ரிக் வேத சாரமுமாகிய தேவாரப்பாக்களை பரம்பொருள் யார் என்ற சந்தேகம் தீர (ஞான சம்பந்தராகத் தோன்றி) மொழிந்தருளிய குமாரக் கடவுளின் குறிஞ்சி நிலம் ’’ என்ற பொருள் இப்பாடலில் வருகிறது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் ‘‘திருநீறு மும்மலங்களை அழிக்கும், பரம்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடைமையைக் கொடுக்கும் என்று நினையாத சமணர் கூட்டத்தினரைக் கழுவேறி அழியும்படி வாது புரிந்த சம்பந்தப் பெருமானாகிய குமரக் கடவுளன்றி வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் இல்லை’’ என்று கந்தர் அந்தாதியில் கூறி விட்டார். சீகாழி என்ற ஊர்ப்பெயர் மக்களால் சீர்காழி என்றே வழங்கப்படுகிறது. காளி பூஜை செய்ததால் ஸ்ரீ காளி என்ற பெயர் உண்டாகிப் பின்னால் இவ்வாறு மருவியது என்பர் இறைவன் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதர்.
 
கோயிலில் நுழைந்ததுமே பிரம்ம தீர்த்தம் நம் கண்களைக் கவரும். இதன் கரையில் தான் தோடுடைய செவியனாகத் தோணியப்பர் குழந்தை சம்பந்தருக்குக் காட்சி அளித்தார். இங்கு தான் உமை முலைப்பாலை உண்டு ஞான சம்பந்தர் எனப் பெயர் பெற்றார். திருமுலைப்பால் உற்சவம் சித்திரைப் பெருவிழா இரண்டாம் நாள் ஐதீக விழாவாக நடைபெறுகிறது.

‘‘திருமுலைப் பால் உண்டார் மறு முலைப்பால் உண்ணார்’ என்பது பழமொழி.
இனி அவர்களும் பிறவி கிடையாது என்று பொருள்
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள்ப கர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் மிசையேறத்
தீரத்திரு நீறுபு ரிந்து மீனக்கொடி

யோனுடல் துன்றுதீமைப்பிணி தீரவு வந்தகுருநாதா
என்றும் ,‘‘கனசமண் மூங்கர்கோடி கழுமிசை தூங்கநீறு
கருணைகொள் பாண்டிநாடு பெறவேதக்
கவிதரு காந்தபால கழுமல பூந்தராய
கவுணியர் வேந்ததேவர் பெருமாளே’’
என்று சீகாழியில் மனமுவந்து
பாடுகிறார் அருணகிரி நாதர்.

(உலா தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

Tags : Kanakasabai Mayum ,Kurunatha ,
× RELATED தீமைப்பிணி தீர உவந்த குருநாதா