×

ராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன்

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்கிறார்கள். சித்தர்கள் சஞ்சரித்த கொல்லிமலையின் நான்கு பக்கங்களும் சூழ்ந்திருக்க நடுவே அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் ராஜபுரம் என்பதுதான் ராசிபுரமாயிற்று. நிலத்தை உழுதுகொண்டிருந்த விவசாயி கலப்பையில் ஏதோ தட்டுப்பட்டது. பூமியை கிளறிப் பார்க்க பீடம் இருந்தது. ஆஹா... மகாசக்தி இதற்குள் இருக்கிறாளே என்று பீடத்தையே வழிபட்டனர். அதன் பின்னர் அதற்கு மேல் அம்மனை பிரதிஷ்டை செய்தனர். மரணப் படுக்கை வரை சென்ற பல மன்னர்கள் இவளின் அருளால் பிழைத்தனர். இந்தக் கோயிலின் சிறப்பே கோயிலின் வேம்பு கம்பம்தான். பல கோயிலின் திருவிழாவின்போது வேம்பு கம்பம் நடுவர்.

இதை அம்மனின் கணவனாக ஈசனாக பாவித்து வழிபடுவர். இங்கு பெண்கள் தங்கள் கணவர் உடல்நலம் வேண்டியும், குடும்பப் பிரச்னைகளை தீர்க்க கோாியும் கிணற்றில் நீர் எடுத்து வேம்பு கம்பத்தில் ஊற்றி, மஞ்சள் குங்குமம் பூசி அம்மனை வேண்டுகின்றனர். சிலர் பால் அபிஷேகமும் செய்கின்றனர். வருடம் முழுவதும் இந்த கம்பம் அப்படியே நடப்பட்டுத்தான் இருக்கும். பெண்களின் தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்பவளாதலால் ‘நித்திய சுமங்கலி மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள். ராசிபுரம் - நாமக்கல் பாதையில் இந்த ஆலயம் உள்ளது.

காரைக்குடி - கொப்புடைய நாயகி

செட்டி நாட்டு மக்களின் குல தெய்வம். எல்லாமே கொப்புடையவள் கைகளில்தான் என்று சரணாகதி செய்து விட்டு இப்பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அம்மனின் பாதத்தில் கடைகளின் சாவியை வைத்து எடுத்துக்கொண்டு வந்துதான் கடையைத் திறக்கிறார்கள். ஆதியில் வீரம்மிக்க மருது சகோதரர்கள், மோர் விற்ற இடையர் குல கிழவி போன்றோரால் திருப்பணி செய்யப்பட்டது. இத்தலத்தின் ஆச்சரியமான சிறப்பே மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஐம்பொன்னாலான நாயகியே உற்சவ காலங்களில் வீதி உலா வருவதுதான்.

வேறெங்கும் இல்லாத நேர்த்திக் கடனாக பக்தர்கள் விரும்பிய நாளில் அம்பாளை புறப்பாடு செய்து திருவீதி உலா வரச் செய்யலாம். அதற்கான செலவை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இரட்டை மணிமாலை, பிள்ளைத் தமிழ் என்று இவளின் புகழை பலர் எழுதியிருக்கின்றனர். ஒப்பில்லாத வரப் பிரசாதியாக கொப்புடைய நாயகி திகழ்கிறாள். அம்மா... என் குழந்தைகளையும் நீதான் பார்த்துக்கணும் என்று பரம்பரையாக பாதம் பணிவதை இங்கு சகஜமாகக் காணலாம். அம்பாளின் காதில் அணிந்திருக்கும் நகையின் பெயரே கொப்பு. இதற்கு கிளை என்று பொருள்.

வம்சத்தை கிளைகள்போல பெருகச் செய்வதால் இவளுக்கு இந்தப் பெயரோ. காரை மரங்கள் அடர்ந்திருந்த இத்தலத்தில் இவள் தவம் மேற்கொண்டாள். அவள் அவ்வாறு தவத்திற்கு அமர்ந்த கதை தனித்த புராணமாக விரியும். அவள் தவமிருந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டது. குழந்தைப்பேறு வேண்டும் என்று வந்தோரை அவள் கைவிடுவதே இல்லை. ‘‘இதுக்குத்தானே நான் இங்க இருக்கேன்’’ என்பதுபோல வீற்றிருக்கிறாள்.

Tags :
× RELATED மன பயம், மனக்குழப்பம், மன சஞ்சலம் தீர...