×

சுகப்பிரசவம் நல்கும் உடையாம்பிகை திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே இளநகர் கிராமத்தில் உடையாம்பிகை சமேத உடையபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அருட்பாலிக்கும் உடையாம்பிகையை சுகப்பிரசவ நாயகி என்றும், உடையபுரீஸ்வரர் முன்பாக உள்ள நந்தியை சுகப் பிரசவ நந்தி என்றும் அழைக்கின்றனர்.

மிகவும் பழமையான இத்திருக்கோயிலில் எந்த உயிரினமாக இருந்தாலும் கர்ப்பம் தரித்திருந்து பிரசவிக்கப் போகும் நேரத்தில் இக்கோயிலில் உள்ள சுகப்பிரசவ நந்தியை அம்மன் சிலைபக்கம் திருப்பி வைத்தால் சுகப்பிரசவம் நடப்பது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும். இளநகர் கிராமத்தில் வசித்து வந்த சிவபக்தர் ஒருவர் தன்னுடைய நிலத்தில் உழுதுகொண்டிருந்த போது ஏர்க்கால் ஓரிடத்தில் ஆழமாகப் பதிந்து நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் ஏர்க்காலை எடுக்க முடியவில்லை.

பின்னர், அந்த இடத்தில் தோண்டியபோது, மணலும், செம்மண்ணும் கலந்த சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டு அந்த சிவபக்தர் அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவர் அந்த இடத்திலேயே சிவனுக்கு கோயில் கட்டி வழிபட்டும் வந்துள்ளார். உடை (ஏர்க்கால்) தடுத்து கிடைக்கப்பெற்ற மூலவராக இருந்ததால் உடையபுரீஸ்வரர் என்றும் பெயராயிற்று. இதனைத் தொடர்ந்து உடையாம்பிகை சந்நதியும் கட்டப்பட்டு வழிபட்டு வந்திருக்கின்றனர்.
இக்கோயிலில் திருப்பணி செய்துகொண்டிருந்தபோது நந்தி சிலை ஒன்று கிடைத்திருக்கிறது.

அந்தச் சிலையை கோயில் முன்பாக எடுத்து வைத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் நிறைமாத கர்ப் பிணியாக இருந்த பெண் ஒருவர் உடையாம்பிகையை வழிபட வந்திருக்கிறார். அந்த நேரத்தில் அப்பெண்ணுக்கு பிரசவ வலியும் வந்ததால் அருகில் இருந்த நந்தியின் மீது தலைசாய்ந்து உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் அந்தச் சிலை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அம்மன் பக்கம் திரும்பி இருக்கிறது. அதே நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கும் சுகப்பிரசவமாகி அழகான ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. அன்று முதல் இக்கோயில் நந்தி சுகப்பிரசவ நந்தி என்றே அழைக்கப்படுகிறது. அம்பிகை சுகப்பிரசவ நாயகி என்ற பெயரிலேயே அருட்பாலித்து வருகிறார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி வரும் நேரத்தில் நந்தியை அம்மன் பக்கமாக திருப்பினால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஆகும் அற்புதம் இன்றும் நடந்து வருகிறது. மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் ஆடு, மாடுகள் உட்பட எந்த உயிரினமாக இருந்தாலும் பிரசவிக்கப் போகும் நேரத்துக்கு சற்று முன்பாக நந்தியை அம்மன் பக்கம் திருப்பினால் சுகப்பிரசவமாகி விடுகிறது.

கன்று ஈன முடியாத பல பசுக்கள் சுகப்பிரசவமாகி இருக்கின்றன. பிரசவம் ஆனபிறகு நந்தியை மறுபடியும் முன்பு இருந்தது போலவே திருப்பி வைத்துவிடுகின்றனர். இக்கோயிலில் மூலவர் சிலைக்கு முன்பாக இரண்டு நந்தி தேவர் சிலைகள் உள்ளன. ஒன்று பிரசவ காலத்தில் அம்மனை நோக்கி திருப்புவதற்காகவும், மற்றொன்று திருப்ப முடியாதபடி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதோஷ வழிபாடு மாதந்தோறும் இக்கோயிலில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் பலரும் சுகப்பிரசவம் நடைபெற வேண்டும் என்பதற்காக பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர்.

மணலும், செம்மண்ணும் கலந்து உருவான சுயம்புலிங்கமாக தாமரை பீடத்தில் உடையபுரீஸ்வரர் அருட்பாலிக்கிறார். இம்மூலவருக்கு அபிஷேகம் செய்யும்போது, மணல் லிங்கம் சிறிதும் கரையாமல் இருப்பது கலியுக அற்புதம். செம்மண் நிறத்தில் மூலவர் காட்சி அளிக்கிறார். விவசாயி உழும்போது, ஏர்க்கால் பட்டதால் அதன் தடம் சிவலிங்கத்தின்மீது இருப்பதையும் காண முடிகிறது. சுயம்புலிங்கத்தின் நடுவில் மற்றொரு லிங்கம் இருப்பது போன்ற அமைப்பும் வேறு எங்கும் காணமுடியாத மற்றுமொரு சிறப்பாகும்.

அனைத்து வகையான அபிஷேகங்களும் சுயம்பு லிங்கத்துக்கு செய்து வருகின்றனர். சுகப்பிரசவம் ஆக, கடன்தொல்லை தீர, திருமணம் நடக்கவும் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தால் கைகூடும் என்பது நம்பிக்கை. மனநிலை சரியில்லாதவர்களையும் இங்கு வந்து தரிசனம் செய்யச் சொல்வது நலம். ஆலய சுற்றில் விநாயகர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு மற்றும் துர்க்கை ஆகிய தெய்வ மூர்த்தங்கள் அமைந்துள்ளன. தைப்பூசம், சிவராத்திரி, ஆருத்ரா, பங்குனி உத்திரம் ஆகிய விசேஷங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

எந்த உயிராக இருந்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் பிரசவத்திற்கு முன்பாக அர்ச்சகரிடம் சொன்னால், அவர் சுகப்பிரசவ நந்தியை அம்மன் பக்கம் திருப்பி வைக்கிறார். பிரசவம் ஆனபிறகு என்றாவது ஒருநாள் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்து கொள்ளலாம். இக்கோயிலில் திருப்பணி வேலைகளும் தொடங்கி இருப்பதால் பக்தர்கள் இந்த திருப்பணியில் கலந்துகொண்டு இறைவனின் அருளுடன் அம்மன் மற்றும் சுகப்பிரசவ நந்தியின் அருளையும் சேர்த்தே பெறலாம்.

இந்த திருக்கோயில் காலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் 7 மணிவரையிலும் திறந்திருக்கும்.
என்னதான் அறிவியல் வளர்ச்சி நாம் பெற்றுக்கொண்டு போனாலும், இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சுகப்பிரசவம் என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. எட்டாக்கனியான சுகப்பிரசவத்தை, சுகப்பிரசவம் நடக்காதா என ஏங்கும் பெண் பக்தர்களுக்கு நான் உடன்
இருக்கிறேன் என்று அழைக்கிறாள் உத்திரமேரூர் அன்னை உடையாம்பிகை.

செய்தி:இரத்தின.கேசவன்

படங்கள் : கே.ஜனார்த்தனன்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?