×

விவசாயிகளின் 10 ஆண்டு கால கோரிக்கை வெள்ளகோவிலில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமையுமா?

வெள்ளகோவில்: வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் வெள்ளகோவிலில் முருங்கை பவுடர் தொழிற்சாலை,  குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்னும்  விவசாயிகளின் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மருத்துவ குணம் மிகுந்த முருங்கை கீரை, காய்களுக்கு கிராமங்களில் எப்போதும் மவுசு உண்டு. தற்போது நகரங்களை மட்டுமின்றி,  வெளிநாடுகளிலும் முருங்கையின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நிலைதான் பரிதாபமாக உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில், புதுப்பை, தாராபுரம், காங்கயம் சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் மானாவரி பூமி உள்ளது. இப்பகுதியில் விவசாயம் செய்ய குறைந்த  அளவில் தான் தண்ணீர் கிடைக்கும். அதனால் மழையை நம்பியே விவசாயிகள் உள்ளனர். அதனால் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி என்ன விவசாயம் செய்ய முடியுமோ அதை தான் செய்கின்றனர். இதனால் வருடம் முழுவதும் விளையும் முருங்கை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மரமுருங்கை, செம்முருங்கை என 4 வகை முருங்கைகள் உள்ளன.  இவற்றில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்தூர், காங்கயம், புதுப்பை, மூலனூர் தாராபுரம் பகுதிகளில் செடிமுருங்கை, மரமுருங்கை சாகுபடியாகிறது. இப் பகுதிகளில் விளையும் காய்கள் குட்டையாகவும், இனிப்பு கலந்த சுவையுடனும் இருக்கும். இவை அதிக சத்துள்ளதாகவும், மருத்துவ குணம் கொண்டுள்ளதாலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வர்த்தகர்கள் வெள்ளகோவில், புதுப்பை சந்தைகளுக்கு வந்து கொள்முதல் செய்து வந்தனர். மேலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் முருங்கை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் மூலனூர், வெள்ளகோவில் பகுதிகளில் முருங்கை சாகுபடி பரப்பு அதிகமானது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடியாகிறது. இந்நிலையில், மூலனூர்,வெள்ள கோவில் முருங்கையின் ருசியை விரும்பிய பெங்களூரு, மைசூரு, விஜயவாடா பகுதி வர்த்தகர்கள் இதன் விதையை பெற்று தங்கள் பகுதியிலேயே பயிரிட்டனர்.  இதையடுத்து, அப்பகுதியினர் முருங்கை கொள்முதல் செய்ய இங்கு வருவதை நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக, வெள்ளகோவில், புதுப்பை பகுதியில் இருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் முருங்கையின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால், இப்பகுதியில் விளையும் முருங்கை காய்களை ஒட்டன்சத்திரம், சென்னை போன்ற பெரிய சந்தைகளுக்கு கொண்டு சென்று தற்போது விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே,  வெள்ளகோவில் அல்லது புதுப்பையில் முருங்கை பொடி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். முருங்கைகாய் அதிக உற்பத்தியாகும் சீசன் காலங்களில், விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை, இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வரத்து அதிகமானால் 1 கிலோ 2 ரூபாய்க்கும், வரத்து குறைந்தால் 1 கிலோ ரூ.50, ரூ.70, ரூ.100 வரை விற்கிறது. விலை அதிகம் இருக்கும் போது, விவசாயிகள் சாகுபடி பரப்பு குறைவாக இருக்கும் அல்லது காற்று மழையால் பாதிக்கப்பட்டு இருக்கும். இதுகுறித்து வெள்ளகோவில் பகுதி விவசாயி தங்கராஜ் கூறுகையில், ‘‘வெள்ளகோவில், மூலனூர் பகுதியில் தினமும் 200 டன் முருங்கை விளைகிறது. காய் வரத்து அதிகமானால், ரூ.2 க்கு விற்கிறது. விலையில் ஏற்றத்தாழ்வு அடிக்கடி நிகழ்வதால், விவசாயிகள் காய் பறிப்பு கூலியே கொடுக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. முருங்கையை காயவைத்து பொடியாக மாற்றும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். முருங்கை பொடியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக இப்பகுதி விவசாயிகள் வாழ்க்கை வளம் பெறுவதுடன் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இப்பகுதி முருங்கையின் பயனை அனைவரும் பெறும் வகையில், இங்கு முருங்கை பொடி தொழிற்சாலை அல்லது முருங்கைக்காய் குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’என்றார். விமானத்தில் பறக்கும்தினமும் 200 டன் அளவு முருங்கை விளையும் நிலையில் விவசாயிகளுக்கு போதிய  விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே முருங்கை காய் பவுடர்  தொழிற்சாலை அமைத்தால், அதிகளவில் ஏற்றுமதி செய்யமுடியும். இதனால் விமானங்களில் அயல்நாடுகளுக்கு பறக்கும் நிலை ஏற்படும். தமிழகத்து முருங்கை வெளிநாட்டினர் சமையல் அறையிலும் மணம் வீசும். மேலும்   முருங்கை காயை சேமித்து விற்பனை செய்ய அரசு குளிர்பதன கிடங்கு அமைத்து  கொடுத்தால், சேமித்து வைத்து விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு நியாயமான  விலை எப்போதும் கிடைக்கும் என்பதே விவசாயிகள் 10 ஆண்டு கோரிக்கை….

The post விவசாயிகளின் 10 ஆண்டு கால கோரிக்கை வெள்ளகோவிலில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமையுமா? appeared first on Dinakaran.

Tags : Murungai Powder Factory ,Silakovil ,VALLAKO ,Palakovil ,Silagovil ,Dinakaran ,
× RELATED காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம்...