×

உத்யோக வரமருளும் உத்யோக நரசிம்மர்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-32

*திருப்புள்ளம்பூதங்குடி, தஞ்சை

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புள்ளம்பூதங்குடி. இங்கு உற்சவர் வல்வில் ராமர். சதுர் புஜங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த ராமர் ராமனுக்கும் க்ரித ராஜனுக்கும் ப்ரத்யட்சமானவர். தாயார் பொற்றாமரையாள். ராமர் சயன கோலத்தில் கிழக்கு முகமாக பள்ளிகொண்டிருக்கிறார்.

ஆனால் திருப்புட்குழியில் ஜடாயுவுக்கு ஈமக்கடன்களை செய்யும் பொழுது கூடவே இருந்த பூமாதேவி இங்கு ராமனுடன் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். புள்ளினத்தை சேர்ந்த தன் தந்தைக்கு நிகரான ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ததால் இந்த தலம் புள்ளங்குடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு க்ரித ராஜன் கடுமையாக தவம் புரிந்து ராமபிரானை சதுர் புஜங்களுடன் தரிசனம் செய்ததால் இங்குள்ள தீர்த்தம் க்ரித தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.  இக்கோயிலின் தல விருட்சமாக புன்னை மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

எம்பெருமான் மன் நாராயணர் தனக்குத்தானே ப்ரத்யட்சமாகி  வணங்கிய தலமாகும். சக்கரவர்த்தி திருமகன் ராமபிரான் இங்கு புன்னை மரத்தின் அடியில் அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்தபொழுது ராமனின் ஆத்மாவை தரிசனம் செய்தார். திருமங்கையாழ்வார் இங்கு தவம் செய்தபொழுது ராமபிரான் சங்கு சக்கரம் ஆகியவைகளுடன் காட்சி கொடுத்ததால் இங்கு மட்டுமே ராமர் சங்கு சக்கரத்துடன்  தரிசனமளிக்கிறார்.
மண்டலங்குடி இங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்தார். பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமிதேவி இங்குதான் நாராயண தத்துவத்தை உலகிற்கு உணர்த்தினார். இந்தக்காரணத்தாலும் இந்த திருத்தலத்திற்கு புள்ளம்பூதங்குடி என்ற பெயர் வந்தது என்று சொல்லுவார்கள். இந்தக் கோயில் விமானம் சோபன விமான அம்சத்துடன் ஒத்துப்போகிறது.

திருபுள்ளம்பூதங்குடி வல்வில் ராமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சோழர் காலத்தில் கட்டிய கோயிலாகும். ராமாயண காவியத்தில் வரும் ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு ராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் செய்தார். எனவே இவ்வூர் புள்ளபூதங்குடி ஆயிற்று. கோதண்டத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பெரியபிராட்டியை பிரிந்த நிலையில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறார்.

ராமாயண கதையின்படி குடிலுக்குள் இருந்த சீதாதேவியை ராவணன் குடிலுடன் பெயர்த்து செல்வதை கண்ட ஜடாயு சீதாதேவியை மீட்க வான வெளியில் கடும் சண்டை நடந்தது. தனக்கிருக்கும் இறக்கைகளை கொண்டு தானே பறந்து பறந்து சண்டை செய்கிறாய் என இறக்கையை வெட்ட ராமா ராமா எனக் கூறிக்கொண்டே காட்டுக்குள் விழுந்தார் ஜடாயு. சீதையை தேடிய ராமன் லட்சுமணனிடம் ராவணன் சீதையை தென்திசை நோக்கி தூக்கி செல்வதைக் கூறி உயிர் நீத்தார்.

ஜடாயு ராமனின் தந்தை தசரதனுக்கு உற்ற நண்பன். நட்பின்படி பார்த்தால் பெரிய தந்தை. எனவே கரும காரியங்களை செய்து கிழக்கே திருமுகம் காட்டி சயனம் கொண்டார். ராமபிரான், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தபிறகு சிரமப் பரிகாரத்திற்காக இத்தலத்தில் சயனித்திருந்ததால் ‘சிரமப்பரிகார பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.

அதனால் பெருமாளுக்கு அம்பு, வில் போன்ற ஆயுதங்கள் இல்லை. உற்சவ மூர்த்தியான ராமபிரானுக்கு சதுர்புஜங்கள் உள்ளன. சீதையை பிரிந்த நிலையாதலால் பக்கத்தில் சீதை இல்லை. பூமிப்பிராட்டி மட்டுமே அமர்ந்திருக்கிறார்.ஜடாயு மோட்சம் பெற்ற இடம் இதுவே. க்ருத்ர ராஜன் எனும் மன்னன் எம்பெருமானை நோக்கி கடும் தவம் செய்தான். வல்வில் ராமனாக புஜங்க சயனத்தில் பெருமானை தரிசித்தான். எனவே இங்குள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம் ஆயிற்று.

இங்கு ராமநவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுகிறது. ராமநவமியை கடைசி நாளாகக் கணக்கிட்டு இங்கு உற்சவம் நடைபெறுவதால் ‘கர்ப்போத்சவம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமநவமியைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்திற்கு ‘ஜனனோத்சவம்’ என்று பெயர். வைணவர்களை பொறுத்தவரை இரண்டு பூதபுரிகள் உண்டு.

ஒன்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீ பெரும்புதூர். இதை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் இந்த புள்ளம்பூங்குடி இதை வைணவ ஆச்சாரியர்கள் சிறப்பித்தார்கள். நவகிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோயிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட திருமணத் தடை நீங்கும்.

இங்குள்ள நரசிம்மர் ‘உத்யோக நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. வேலை வாய்ப்பு வரம் தருவதில் இவர் நிகரற்றவர். எனவே நரசிம்மமூர்த்தியின் திருப்பெயரே உத்யோக நரசிம்மர் என்றாயிற்று. வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க இக்கோயிலில் இருக்கும் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறுவார்கள் என்பது பக்தர்களின் வாக்காக இருக்கிறது. கோயில் அருகிலேயே உள்ள மடத்தில் வசதிகள் உள்ளன. அருகிலேயே திருஆதனூர் திவ்ய தேசம் உள்ளது. இரண்டு தலங்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்.

கணவன் மனைவி இடையே கருத்து வேறு பாடுகள் பிரிந்து இருக்கும் நிலை மாறவும் சத்ரு சம்ஹாரம் செய்யவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். குழந்தை பாக்கியத்திற்கு இங்கு வேண்டிக்கொள்ளலாம். உங்களுடைய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறி மனஅமைதியுடன் உங்கள் வாழ்க்கை அமைய நீங்கள் இங்குள்ள வல்வில் ராமரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்குள்ள பெருமாள் சீதா தேவியை பிரிந்த நிலையில் மிகுந்த மன வருத்தத்துடன் காட்சி அளிக்கிறார்.இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுவாமி மலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், ஆதனூரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

(தரிசனம் தொடரும்)

தொகுப்பு: பரணிகுமார்

Tags : Employee Groom ,
× RELATED சுந்தர வேடம்