×

மோசடி வழக்கில் மனைவியுடன் கைதான பாஜ பிரமுகர் மீது மேலும் 2 வழக்கு: 177 பேர் புகாரில் போலீஸ் நடவடிக்கை

சேலம்: சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி வழக்கில் மனைவியுடன் சென்னையில் கைதான பாஜ பிரமுகர் மீது மேலும் 2 வழக்கு பாய்ந்தது. 177 பேரிடம் ₹2.5 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் என்ற தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் பாலசுப்பிரமணியம். இவரின் மனைவி தனலட்சுமி, மகன் வினோத், மருமகன் கதிர்வேல் ஆகியோர் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தனர். சேலத்தை தலைமையிடமாக கொண்டு வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட 8 இடங்களில் இதன் கிளைகளை தொடங்கி இருந்தனர். 1 லட்சம் ரூபாய் கட்டினால் ஒரு வருடத்திலேயே ₹1 லட்சத்து 60 ஆயிரம் கொடுப்பதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணத்தை கட்டினர். பல கோடி ரூபாய் வசூல் செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி வழங்கவில்லை.இதுதொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பொருளாதார குற்றப்பிரிவில் நூற்றுக்கணக்கானோர் புகார் கொடுத்துள்ளனர். அங்கு வழக்கு பதிவு செய்வதற்காக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காடையாம்பட்டியை சேர்ந்த காவேரியப்பன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ₹37 லட்சம் மோசடி செய்ததாக பாலசுப்பிரமணியம், இவரது மனைவி தனலட்சுமி, மகன் வினோத், மருமகன் கதிர்வேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த அழகாபுரம் போலீசார், நேற்று பாலசுப்பிரமணியம், தனலட்சுமி ஆகியோரை அதிரடியாக சென்னையில் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத், கதிர்வேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மீது மேலும் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரிடம் ₹5 லட்சம் மோசடி செய்ததாகவும், காரைக்குடியை சேர்ந்த கார்த்திக் தலைமையில் 10 ஏஜெண்டுகள் ஒன்று சேர்ந்து 176 பேரிடம் ₹2 கோடி மோசடி செய்ததாகவும் புகார் செய்துள்ளன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஏராளமானோர் புகார் கொடுத்து வருகின்றனர்.கைதான பாலசுப்பிரமணியத்தின் சொந்த ஊர் வாழப்பாடி அருகேயுள்ள மேட்டுப்பட்டியாகும். ஆனால் அவர் அழகாபுரம் ரெட்டியூரில் வசித்து வருகிறார். ஆதார் கார்டில் தாதகாப்பட்டியில் வசிப்பதாக இருக்கிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான பாலசுப்பிரமணியம், பாஜகவின் ‘மோடி விகாஷ் மிஷனின்’ மாநில தலைவராக செயல்பட்டு வருவதாக விசிட்டிங் கார்டு அச்சடித்து விநியோகம் செய்து வந்தார். இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இருப்பதாகவும், அதில் பிரதமர் மோடி, பாலசுப்பிரமணியம் ஆகியோரது புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அவர் தன்னை பாஜக மாநில தலைவர் என கூறியே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது….

The post மோசடி வழக்கில் மனைவியுடன் கைதான பாஜ பிரமுகர் மீது மேலும் 2 வழக்கு: 177 பேர் புகாரில் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Baja Praghwar ,Salem ,Paja Mukhara ,Chennai ,Salem Financial Institution ,Baja Pramkar ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...