×

பலம் தரும் பால நரசிம்மர்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-31

திருநீர்மலை, சென்னை

நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் நான்கு தோற்றங்களில் பெருமாள் அருளும் தலம் திருநீர்மலை. இது ஒரு மலைக்கோயில் ஆகும். மலையிலும், கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலங்களில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு மூன்று ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் உண்டு.

இக்குளம் சுத்த புஷ்கரணி, க்ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வைகானச ஆகம விதிப்படி இருவேளை பூஜை நடக்கிறது. ராமர் தனிச்சந்நதியில் வீற்றிருக்கிறார். இத்தலத்தின் குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் சித்தம் தெளிந்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிபிரதட்சணம் செய்தும் வழிபடுகின்றனர். மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார்.

நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர் - அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர் - ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. பொதுவாக கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார்.

ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக் கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.

இருந்தான் (நரசிம்மர்), கிடந்தான்(ரங்கநாதர்), நின்றான் (நீர்வண்ணர்), நடந்தான் (உலகளந்த பெருமாள்) என நான்கு நிலைகளிலும் பெருமாளை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். எங்கே? சென்னைக்கு அருகிலேயே. அதற்குமுன் அந்தத் தலத்தின் புராணத்தை அறிவோம். திருமங்கையாழ்வார் ஒவ்வொரு தலமாக பெருமாளை தரிசித்தார். அவரை தம் அருளால் நிறைத்தான் நாராயணன்.

உள்ளுக்குள் நிறைந்ததை பாக்களாய் பாடி மாலவனின் திருவடி பரவினார். இவ்வாறு மங்களாசாஸனம் செய்து கொண்டு வரும்போது காண்டவ வனம் எனப்படும் தலம் அவரை ஈர்த்தது. தேடி வந்த ஆழ்வாருக்கு பெருமாளை தரிசிக்க முடியவில்லை. காரணம், சுற்றிலும் நீர் சூழ நடுவில் குன்றத்தில் உறைந்திருந்தார் பெருமாள். இக்காட்சியை சற்றுத் தொலைவிலுள்ள மந்திரகிரி எனும் மற்றொரு குன்றின் மீதிருந்துதான் தரிசித்தார், திருமங்கையாழ்வார். அவர் காத்திருப்பு ஓரிரு நாட்களோடு முடிவடையவில்லை.

ஆறு மாதங்களாக அவ்வண்ணமே தொலைவினின்று தரிசித்தார். மெல்ல நீர் வடிந்தது. திருமங்கையாழ்வார் கண்களில் நீர் பெருக மலைப்படிகளின் மீதேறி சென்று பெருமாளை தரிசித்தார். அவருக்குள்ளிருந்து ஞான ஊற்று பாசுரங்களாகப் பொங்கியது. நீருக்கு நடுவே மலையும், அதன் மீதமர்ந்து பெருமாள் சேவை சாதிப்பதால் திருநீர்மலை எனும் நாமம் இத்தலத்துக்கு ஏற்பட்டது.

ஆறுமாதகாலம் நீர் சூழ்ந்த அந்தப் பகுதியில் பெருமாள் சயனித்திருக்கும் திருக்காட்சியை கண்டவர், ஆஹா, எம்பெருமான் பாற்கடலின் மத்தியில் இப்படியல்லவா சயனித்திருப்பான் எனும் பக்தி பாவத்தோடு கரம் கூப்பினார். வைகுண்டமான திருப்பாற்கடலின் மையத்தே பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் தோற்றத்தினுடைய பூலோக பிம்பமாக திருமங்கையாழ்வாருக்கு சேவை சாதித்தார், பெருமாள். இதை மெய்பிப்பதுபோல திருநீர்மலையை தோயாத்ரி என்றும் தோதாத்ரி என்றும் சொல்வர்.

 தோயாத்ரி எனில் பால் சம்பந்தப்பட்ட என்று பொருள். எனவே அங்குள்ள தீர்த்தத்திற்கு ஷீர (பால்) புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.  
திருநீர்மலையின் பிரதான விஷயமே திருமாலின் நான்கு திரு அவதாரங்களும் மூலவராக அருளாட்சி செய்வதேயாகும். எழில் கொஞ்சும் அந்த காண்டவ வனம் எனும் திருநீர்மலையிலும், மலைக் கோயிலின் அடிவாரத்திலுள்ள தாழக் கோயிலிலும், திருமால் நான்கு அர்ச்சாவதார திவ்ய மூர்த்தங்களாக எழுந்தருளியிருக்கும் தலத்தை நெருங்கும்போதே சிலிர்ப்பு பரவுகிறது. பூதத்தாழ்வார் திருநீர்மலையின் அழகில் மயங்கி பெருமாள் வீற்றிருக்கும் இந்த கிரியையும் மங்களாசாஸனம் செய்திருக்கின்றார்.

‘‘பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள், பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், பயின்றது அணிதிகழுஞ் சோலை, அணி நீர் மலையே மணி திகழும் வண் தடக்கை மால்’’ என்ற பாசுரமே இம்மலையின் எழிலைக் காணும் போது நம் நினைவுக்கு வருகிறது. அளவில் சிறியதாயினும், கீர்த்தியில் பெரியதான பெருமாளின் வாமன அவதாரம்போல திருமால் எழுந்தருளியிருக்கும் அந்தத் திருநீர்மலையின் அடிவாரத்தில் நீர்வண்ணப்பெருமாளும், தாயாரும், ராமனும் தனித்தனி சந்நதிகளில் அருள்கின்றனர்.

மலைமீது ரங்கநாதரும், நரசிம்மரும், உலகளந்த பெருமாளும் தரிசனம் தருகின்றனர். முதலில் அடிவாரக் கோயிலுக்குள் நுழைகிறோம். கிழக்கு நோக்கிய ஆலயத்தினுள் வடபுறம் சந்நதி கொண்டுள்ளார் நீர்வண்ணப்பெருமாள். அவருடன் மலைமேல் இருக்கும் ரங்கநாதப் பெருமானின் உற்சவத் திருமேனியும் உள்ளது.  இத்தலத்தின் பிரதான மூர்த்தி ரங்கநாதர் எனினும் ஸ்தலமூர்த்தி நீர்வண்ணப்பெருமாளே ஆவார். நீர்வண்ணப் பெருமாள் ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கு காட்சி தந்து அருளியவர்.

முன்பொரு சமயம் ராமபக்தியில் ஊறித் திளைத்த வால்மீகி முனிவர், ராமாவதாரம் முடிந்த பின்பும் ராமபிரானை மீண்டும் தரிசனம் செய்ய ஆவல் கொண்டு, இத் திருநீர்மலையில் தியானத்தில் ஆழ்ந்தார். முதலில், மலைமீதிருக்கும் ரங்கநாதப்பெருமாளாக சயனக்கோல காட்சி கிட்டிற்று. தியானத்தில் தொடர்ச்சியாக ‘நின்றான்’ என திருமங்கையாழ்வார் போற்றித் துதிக்கும் வண்ணம் நீர்வண்ணப்பெருமாளாய் கம்பீரத்துடன் தரிசனமளித்தார்.

அந்தப் பேரழகில் மயங்கிய வால்மீகி முனிவர், ‘‘சுவாமி நீங்கள் எப்போதும் இதே திருக்கோலத்தில் இந்த தலத்தில் எழுந்தருள வேண்டும் என பிரார்த்தித்தார். அவ்வண்ணமே அங்கு எழுந்தருளியிருக்கும் நீர்வண்ணப்பெருமாள் தாமரைமலர் பீடத்தில் அபய ஹஸ்த முத்திரைகளுடன் மார்பில் சாளக்ராம மாலை புரள, ராஜ கம்பீரத்துடன் நின்றருள்கிறார்.

நீர் வண்ணப் பெருமாள் என்ற திருநாமம் சற்று வித்தியாசமாகத் தோன்றினாலும் ஆழ்ந்த அர்த்தத்தை தன்னிடத்தே உடையது. நீருக்கு ஏது வண்ணம்? அது போல் பகவானுக்கு குறிப்பிட்ட எந்த உருவமும் இல்லை. நீர் எந்த இடத்தைச் சார்கிறதோ அதன் நிறத்தைப் பெறுவதுபோல் நாம் பகவானை அவருடைய எந்த கோலத்தில் தரிசிக்கப் பிரார்த்திக்கிறோமோ அந்தத் திருவுருவில் நமக்கு தரிசன சேவை சாதிக்கிறார். அவரது வண்ணம் என்பது நம் பக்தி தோய்ந்த எண்ணம் என்பதைத் தவிர வேறில்லை.

அதுமட்டுமல்ல, நீர் எல்லாவற்றிலும் கலந்து அந்தந்த தன்மைக்கேற்ப இணைந்து விடுவதைப்போல், இறைவனின் கருணை எந்த பேதமுமின்றி அனைவருக்கும் சென்று அவர்களுக்கு வாழ்வளிக்கிறது. பஞ்ச பூதங்களுக்குள் ஒன்றாகிய நீரின் வண்ணமாய் நமக்கு அருட்பாலிக்கும் பரந்தாமனை வணங்கி அடுத்த சந்நதிக்கு நகர்கிறோம்.

கல்யாண மங்களங்களுடன் ராமர் அன்னை ஜானகியுடன் எழுந்தருளியிருக்கிறார். அடுத்து, அகலகில்லேன் என திருமாலின் திருமார்பில் நித்யவாசம் புரியும் திருமகளாம் அணிமாமலர் மங்கையை மனம் குளிர மேனி சிலிர்க்க தரிசிக்கிறோம். திருநாரையூர், திருவாலி, குடந்தை, திருக்கோவிலூர் தலங்களிலுள்ள பெருமாளின் திருத் தோற்றங்கள் எல்லாம் இத்தலத்தில் நிறைந்திருக்கும் பெருமை பெற்றது. அதுமட்டுமல்லாது தாயார் அணிமாமலர் மங்கையாய் இங்கு வீற்றிருந்து அருளும் சிறப்பை ‘‘அன்றாயர்’’ எனும் பாசுரத்தில் நெகிழ்ந்து பாடியுள்ளார், திருமங்கையாழ்வார்.

தாயாரின் திருவருளைப் பெற்று இருந்தான், கிடந்தான், நின்றானாகிய எம்பெருமான் உறையும் தோயாத்ரி மலையை அண்ணாந்து நோக்கி மேலே ஏறுகிறோம். காண்டவ வனத்தின் தோயாத்ரி வன வாசல் என்று குறிப்பிடப்பட்ட அலங்கார வளைவைக் கடந்து மலை மீது ஏறத் துவங்குகிறோம். பெருமாளின் தரிசனம் பெற சுமார் 250 படிகளைக் கடக்க வேண்டும்.

பிரமாண்டபுராணம் இத்தலத்தின் பெருமைகளை பக்கம் பக்கமாக  பட்டியலிடுகிறது. மலையேறும் பாதையில் வாயு மைந்தன் நம் வாழ்வு வளம் பெற ஆசி கூறும் வண்ணம் அருள்கிறார். கொடிமரம், பலிபீடத்தை வணங்கி கருடாழ்வார் தரிசனம் கிட்டுகிறது. ரங்கநாயகித் தாயார் நம்மை வரவேற்க, திருவடித் தாமரையின் மகிமையால் அல்லலுறும் ஜீவன்களை கடைத்தேற்றும் அண்ணலாம் கிடந்தானான ரங்கநாதரை பாம்பணையின்மேல் பள்ளி கொண்ட தோரணையில் தரிசிக்கிறோம். இவரது சந்நதிப் பிராகாரத்தில்தான் தன் உயரத்துக்கும் மேலாக, தம் திருக்காலை பூரணமாக உயர்த்தி உலகளந்த திருக்கோலமாம் திரிவிக்ரமப் பெருமாளை கண்குளிர வணங்குகிறோம்.

இத்தலத்தில் ‘ரதசப்தமி’விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒருநாளில் மட்டும், காலை முதல் மாலை வரை ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் பெருமாள்.. பத்துநாள் விழாவினை ‘பிரம்மோற்சவம்’ என்பார்கள். அந்த நாளில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி உலா வருவார். ஆனால், இந்த ரத சப்தமி திருநாளிலோ, ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பெருமாள் உலா வருகிறார். இதனாலேயே இந்த விழாவினை ‘அர்த்த பிரம்மோற்ஸவம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

அடுத்து மகா உக்ரத்துடன் ஹிரண்யனை வதம் செய்த நரசிம்ம மூர்த்தி, குழந்தை பிரகலாதனிடம் வந்து அவன் பயந்து விடக்கூடாதே என சாந்தமாகி, கருணையோடு கனிந்து தரிசனமளித்த திருக்கோலத்தை கண்டு உள்ளம் உவகை பெற்று வணங்குகிறோம்.இத்தலத்தில் அழகே உருவாய் அன்பே வடிவாய் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம்.

உள்ளம் உருக  நரசிம்ம மூர்த்தியை அகத்தில் தேக்கி மீண்டும் ரங்கநாதரின் சந்நதிக்கே வருகிறோம். தீராத நோய் தீர்க்கும் தன்வந்த்ரியாக விளங்கும் ரங்கநாதர், திருமண வரம் வேண்டுவோர்க்கும், மழலைப் பேறு வேண்டி கைகூப்பி நின்றோர்க்கும் அதிவிரைவாக அருள்புரிகிறார். திருமணம் என்றாலே திருநீர்மலைதான் எல்லோருக்கும் நினைவில் வரும்படியாக ரங்கநாதர் அருளாட்சி செய்கிறார்.

ஆழ்வார்களும், அருள்மிகு மகான்களும் பணிந்து திருவருள் பெற்ற ரங்கனாதரை வணங்கி நிற்கும்போது ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது. திருமங்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் பாடிய பாசுரங்கள் அந்த எழில்சூழ் மலைகளினூடே அருவமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

பரந்தாமனின் இந்த நான்கு நிலைகளை நேரில் தரிசித்த பாக்கியவான்கள் அதே நிலைகளை நாமும் தரிசிக்கும் வகையில் பாசுரங்களாகப் பாடி, அர்ச்சாவதார மூர்த்திகளாகவும் ஸ்தாபிதம் செய்த அந்த பக்திநேயத்துக்கு அவர்களை வணங்கி நன்றி செலுத்த மனது விழைகிறது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை சென்னை, பல்லாவரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

(தரிசனம் தொடரும்)

தொகுப்பு: பரணிகுமார்

Tags : Bala Narasimhar ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!