×

ஜிம்பாப்வேயுடன் முதல் ஒருநாள் போட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; தவான், கில் அசத்தல்

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. தீபக் சாஹர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ரெஜிஸ் சகாப்வா 35 ரன் எடுத்தார். ஜிம்பாப்வே 28.3 ஓவரில் 110 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து பரிதவித்த நிலையில், பிராட் எவன்ஸ் – ரிச்சர்ட் நாரவா இணைந்து 70 ரன் சேர்த்து கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர். ரிச்சர்ட் 34 ரன், விக்டர் 8 ரன்னில் வெளியேற, ஜிம்பாப்வே 40.3 ஓவரில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. எவன்ஸ் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் சாஹர், பிரசித், அக்சர் தலா 3, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ஷுப்மன் கில் இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இந்தியா 30.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 192 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தவான் 81 ரன் (113 பந்து, 9 பவுண்டரி), கில் 82 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தீபக் சாஹர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி ஹராரேவில் நாளை நடக்கிறது….

The post ஜிம்பாப்வேயுடன் முதல் ஒருநாள் போட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; தவான், கில் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Zimbabwe ,Dawan ,Gill ,Harare ,Harare Sports Club ,ZimbabweanIndia ,Kill Wading ,Dinakaran ,
× RELATED ஜிம்பாப்வேயின் புதிய நாணயம் பெயர் ஜிக்