×

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

திருக்குற்றாலநாதர், குற்றாலம் - சுக்கு கஷாயம்

சேக்கிழார் பெருமான் போற்றிய 14 சிவ தலங்களில் மிகவும் தொன்மையானது திருக்குற்றாலம் சிவன் கோயில். கு என்றால் பிறவிப்பிணி, தாலம் என்றால் தீர்ப்பது. கு+தாலம் = குத்தாலம். திரிந்து, குற்றாலம் என்றாயிற்று. இத்தலத்து இறைவன் பெயர் திருக்குற்றாலநாதர்.

இறைவி குழல்வாய் மொழி அம்மை. இங்குள்ள தீர்த்தம், சிவமது கங்கை, வடஅருவி, சித்ராநதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உற்சவ மூர்த்தியின் பெயர் சோமாஸ்கந்தர். மகுடாகமம் எனும் ஆகம விதிப்படி இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. சங்கு வடிவக் கோயில் இது. 2000 ஆண்டுகள் தொன்மையானது. இந்த சித்திர சபை சுவர்களில் பிரம்மதேவன் எழுதி வைத்த சிவபிரானுடைய சொரூபங்களை இன்றும் காணலாம்.

தலவிருட்சம் குறும்பலா மரம். நான்கு வேதங்கள் ஒன்றாகி மரமாகவும், பிரணவம் வேராகவும், சுருதி கிளைகளாகவும் கொண்ட இந்த விருட்சம் குழல்வாய் மொழி அன்னை சந்நதி முன்பாக உள்ளது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மூவர் பெயர் தாங்கிய முன்று சிகரங்கள் உள்ளதால் இதனை திரிகூட மலை என்பார்கள். இறைவன், திரிகூடநாதர். குழல்வாய்மொழி என்றால் வேய்ங்குழலின் ஒலி போன்று இனிமையான சொல்லையுடையவள் என்று பொருள். ஆரம்ப காலத்தில் திருமால் கோயிலாக இருந்தது.

அப்போது திருமுற்றம் என்றழைக்கப்பட்டது. சிவன் - பார்வதி திருமணத்தின்போது வடக்கு தாழ, தெற்கு உயர்ந்தது. இதை சமன் செய்ய தெற்கு நோக்கி ஈசன் அனுப்பிய அகத்திய முனிவர், இந்தக் கோயிலில் இருந்த திருமாலை தன் கையால் அழுத்தி சிவலிங்கமாக மாற்றினார். அவரது ஐந்து விரல் தழும்புகளை இப்போதும் இறைவனின் தலையில் காணலாம். தலை அழுத்தப்பட்டதால், சிவனுக்கு தலைவலி வந்து விடக்கூடாது என்று தினமும் இவருக்கு மூலிகை அபிஷேகம் நடக்கிறது.

குற்றால மலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலையில் செண்பகக் காட்டைப் பாதுகாக்கும் தேவதை செண்பகதேவி, செண்பகா அருவி அருகில் உள்ளார். குற்றால நாதரின் விழாக்கள் தடையின்றி நடக்க முதலில் இந்த தேவிக்கு பூஜை செய்கிறார்கள். அதன் பிறகே திருவிழா துவங்கும்.
 செண்பகாதேவிக்கான சித்திரை மாத பத்து நாள் திருவிழா, பௌர்ணமியோடு நிறைவுறும்.

அன்று நள்ளிரவு இங்கே மஞ்சள் மழை பெய்யும்! கோயிலுக்கு மேலுள்ள சிவமது கங்கை என்ற தேனருவியில் கங்காதேவி சிவலிங்கத்தைத் தேனால் அபிஷேகிப்பதால் அதுவே மஞ்சள் மழையாய் பெய்கிறதென்பார்கள். கோயில் அருகே உள்ள பேரருவி விழும் இடமெல்லாம் பாறைகளில் சிவலிங்க சிற்பங்கள் காணப்படுகின்றன. குற்றாலநாதர் கோயிலுக்கு வடக்கே தரணிபீடம் என்ற பராசக்தி பீடம், அழகிய சிறு கோயிலாக அமைந்துள்ளது. இங்கு பராசக்தி யோகத்தில் இருப்பதால் இதை யோக பீடம் என்கிறார்கள்.

இங்குள்ள இறைவன் குற்றாலநாதருக்கும், அம்பிகை குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், இருவருக்கும் தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்கவே இந்த ஏற்பாடு!திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் சிவ தலம் உள்ளது.

தொகுப்பு: ந.பரணிகுமார்

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்