×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

250. விசிஷ்டாய நமஹ: (Visishtaaya namaha)

வனவாசம் சென்ற ராமன், சுதீட்சணர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் சிலகாலம் சீதையோடும் லட்சுமணனோடும் தங்கியிருந்தான். அப்போது  ராமனைச் சந்திப்பதற்காகச் சில முனிவர்கள் அங்கே வந்தார்கள். அருகிலுள்ள தண்டகாரண்யம் என்னும் வனப்பகுதியில் அரக்கர்களின் நடமாட்டம்  அதிகரித்து வந்தது. முனிவர்களின் வேள்விகளைத் தடுப்பதும், முனிவர்களைக் கொன்று குவிப்பதுமே அவ்வரக்கர்களின் வழக்கமாக இருந்தது. எனவே  அந்த அரக்கர் கூட்டங்களை எல்லாம் அழித்தொழித்து முனிவர்களுக்கு அபயம் அளிக்க வேண்டும் என்று ராமனிடம் பிரார்த்தனை செய்வதற்காக  ராமனிடம் அம்முனிவர்கள் வந்தார்கள்.

அவர்களை மதிப்போடும் மரியாதையோடும் வரவேற்ற ராமனிடம், அம்முனிவர் கூட்டத்தின் தலைவர், “ராமா! உன் எழிலில் மயங்கிய நாங்கள்,  உன்னை ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பி வந்துள்ளோம்!” என்று கூறினார். மற்ற முனிவர்களும், “ஆம் ராமா! உன்னை ஆரத்  தழுவிக் கொள்ள வேண்டும் என்று விரும்பி வந்துள்ளோம்!” என்றார்கள்.‘ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்’ என்ற ரீதியில் ஏக பத்தினி விரதனான  ராமன், “முனிவர்களே! சீதா தேவி ஒருத்தி தான் என்னை ஆலிங்கனம் செய்து கொள்ள இயலும்! அவளைத் தவிர வேறு யாருக்கும் அந்த உரிமையை  இந்த அவதாரத்தில் நான் வழங்கவில்லை!” என்று கூறினான்.

அதைக் கேட்டு மிகவும் வருந்திய முனிவர்கள், “ராமா! நாங்கள் உன்னிடம் பணமோ பொருளோ அரசோ கேட்டு வரவில்லையே! உன்மேல் உள்ள  பக்தியினால் உன்னை ஆரத் தழுவுகின்ற பாக்கியத்தைத் தானே பிரார்த்தித்தோம்? அதைக் கூட எங்களுக்கு அருள மாட்டாயோ?” என்று கேட்டார்கள்.அதற்கு ராமன், “இந்த அவதாரத்தில் தான் வேறு யாரையும் தழுவிக் கொள்ள மாட்டேன் என்று சொன்னேன். எனது அடுத்த அவதாரமான  கிருஷ்ணாவதாரத்தில், நீங்கள் அனைவரும் ஆயர்பாடியிலுள்ள ஆய்ச்சிகளாக வந்து பிறப்பீர்கள். அப்போது நானே உங்களைத் தேடி வந்து உங்கள்  ஒவ்வொருவரையும் நெஞ்சார அணைத்துக் கொள்வேன்!” என்றான்.

மேலும், “வேறு ஏதாவது பிரார்த்தனைகள் உள்ளதா”? என்று அந்த முனிவர்களிடம் கேட்டான் ராமன். “வேறு எந்தப் பிரார்த்தனையும் இல்லை!  உன்னைத் தழுவிக் கொள்ளும் பேற்றை அடுத்த அவதாரத்தில் அருளியமைக்கு நன்றி!” என்று சொல்லி விட்டு முனிவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.செல்லும் வழியில், முனிவர் கூட்டத்தின் தலைவரிடம் ஒரு முனிவர், “சுவாமி! அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை வதம் செய்யுமாறு  ராமனிடம் பிரார்த்திக்கச் சென்றோம்! ஆனால் அதைப் பிரார்த்திக்காமல், ராமனை ஆலிங்கனம் செய்யும் பேற்றைப் பிரார்த்தித்துவிட்டுத் திரும்பி  விட்டோமே!” என்று கேட்டார்.அதற்கு அம்முனிவர் தலைவர், “நான் ராமனைக் காணச் செல்லும் முன், அவனது வீர தீர பராக்கிரமத்தைக் கருத்தில்  கொண்டு, அரக்கரிடம் அவனைப் போர் புரியச் சொல்லலாம் என்று கருதினேன்.

ஆனால் ராமனின் அந்த மென்மையான உடலையும், கண்கொள்ளா வடிவழகையும் கண்ட மாத்திரத்தில், அவனை அள்ளி அணைக்கத் தான்  தோன்றியதே ஒழிய, இவ்வளவு மென்மையான ராமனை அரக்கர்களை எதிர்த்துப் போர் புரியச் சொல்ல எனக்கு மனம் வரவில்லை! அதனால் தான்  ஆலிங்கனம் செய்து கொள்ளும் பாக்கியத்தை மட்டும் பிரார்த்திவிட்டுத் திரும்பிவிட்டேன்! மற்ற முனிவர்களும் என்னைப் போலவே அவன் எழிலில்  மயங்கி விட்டதால், போர் புரிவதைப் பற்றி யாருமே பேசவில்லை!” என்றார்.

“இதுவரை நீங்கள் ராமனைக் கண்டதே இல்லையா? இப்போது மட்டும் ஏன் இந்த திடீர் ஆசை?” என்று கேட்டார் மற்றொரு முனிவர். அதற்கு முனிவர்  தலைவர், “இதுவரை நான் ராமனை நாட்டில் தரிசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவன் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்கள் அவனது  உண்மையான திருமேனி அழகை மறைத்துவிடும். ஆனால் இப்போது ஆடை ஆபரணங்களைக் களைந்துவிட்டு, வெறும் மரவுரியோடு வனவாசம்  வந்தபடியால், ராமனின் முழுமையான வடிவழகை நான் காண நேர்ந்தது. அதனால் தான் இதுவரை உண்டாகாத ஆசை இப்போது
உண்டானது!” என்று கூறினார்.

பெருமாளை ‘ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள்’ என்று சொல்வார்கள். நாம் அணிவிக்கும் ஆடைகளாலோ, ஆபரணங்களாலோ,  பெருமாளுக்குப் பெருமையோ, அழகோ வருவதில்லை. மாறாக, அவர் திருமேனியை அலங்கரிப்பதால், ஆடைகளும் ஆபரணங்களும் பெருமை  பெறுகின்றன. அவை இல்லாவிடினும் அவரது திருமேனி எழிலும், பொலிவும், பெருமையும் குன்றாமல் இருக்கும்.இவ்வாறு மிக உயர்ந்தவராகவும்,  தனது உயர்வுக்கு வேறு எந்தப் பொருளின் உதவியை எதிர்பாராதவராகவும் திருமால் திகழ்வதால் ‘விசிஷ்ட:’ என்றழைக்கப்படுகிறார். ‘விசிஷ்ட:’  என்றால் மிக உயர்ந்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 250-வது திருநாமம்.“விசிஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும்  அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து விதமான உயர்வுகளும் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

251. சிஷ்டக்ருதே நமஹ: (Shishtakruthe namaha) & 252. சுசயே நமஹ: (Shuchaye namaha)

(விஷ்ணு ஸஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதிய ஸ்ரீபராசர பட்டர், 251 மற்றும் 252-வது திருநாமங்களாக வரும் சிஷ்டக்ருத், சுசி: ஆகிய இரு  திருநாமங்களையும் இணைத்துப் பொருளுரைத்துள்ளார். எனவே அவர் காட்டிய வழியைப் பின்பற்றி இரு திருநாமங்களுக்கும் சேர்த்து ஒரே கதையை  வழங்கியுள்ளோம்.)

ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களைப் பார்த்து,

“அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ”

என்ற சுலோகத்தைச் சொன்னார். பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும்  தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.“சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை,  தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர்கள். ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழைந்த பிரம்மதேவர்,  தமது கற்பனையை எல்லாம் திரட்டி, அகல்யாவை உருவாக்கினார். அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி  செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் திரௌபதி. ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா  தேவியைக் கண்டெடுத்தார். பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள். பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா  என்னும் அப்சரஸ் பெண்ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும் அழகிய பெண்ணாக மாற்றினார்!” என்று கூறினார்  வேத வியாசர்.

“இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?” என்று கேட்டார்கள் சீடர்கள்.அதற்கு வேத வியாசர், “இந்த ஐவருமே தங்கள் வாழ்வில்  பேரிழப்புகளையும் பெருந்துயரங்களையும் சந்தித்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற்றி கண்டவர்கள். தன் கணவர் கௌதமர் தந்த  சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோடும் மனவுறுதியோடும் இருந்த அகல்யாவை, ராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய  பெண்ணாய் ஆக்கினான். கௌரவர்களின் சபையில் பெரும் அவமானத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதியுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து,  பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள். பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக்கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ராமன்  வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை. வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத் துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள். ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது  கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள் எனவே இந்த ஐவரும் காலையில் தியானிக்கத்  தக்கவர்கள்!” என்று கூறினார்.

அப்போது சீடர்கள், “சுவாமி! இந்த ஐவருள் மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா? இந்திரனின்  ஆசைக்கு இணங்கினாள் அகல்யா. ஐந்து ஆண்களை மணந்தாள் திரௌபதி. வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவனை மணந்தாள் தாரை. மண்டோதரி  நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள். இந்த நால்வரும் எப்படி சீதைக்குச் சமமானவர்களாக ஆக  முடியும்?” என்று வியாசரிடம் கேட்டார்கள்.அதற்கு வியாசர், “அதற்குத் திருமாலின் திருவருளே காரணம். ராமனின் பாதுகையில் உள்ள மண்  அகல்யாவின் மீது பட்ட மாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள். திரௌபதி  எப்போதும் கண்ணனையே தியானித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள். ராம தரிசனத்தால் தாரையும்  மண்டோதரியும் தூய்மை பெற்றார்கள். இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி ஆகிய நால்வரும்  மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்றப்படுகிறார்கள்!” என்றார்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல், சாதாரண மனிதர்களைக் கூடத் தனது  சம்பந்தத்தாலே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் ‘சிஷ்டக்ருத்’ (உயர்ந்தவர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்படுகிறார். உயர்ந்த  மனிதர்களை ‘சிஷ்ட:’ என்று சொல்வார்கள். ‘க்ருத்’ என்றால் உருவாக்குபவர் என்று பொருள். ‘சிஷ்டக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது  திருநாமம்.அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூடத் தனது  சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார். ‘சுசி:’ என்றால் தூய்மை என்று பொருள். தானும்  தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் ‘சுசி:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது  திருநாமம்.“சிஷ்டக்ருதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையத் திருமால் அருள்புரிவார்.
“சுசயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.


253. ஸித்தார்த்தாய நமஹ: (Siddhaarthaaya namaha)

சேதுக்கரையில் முகாமிட்டிருந்த ராமபிரானிடம் சரணாகதி செய்ய விபீஷணன் வந்த போது, சுக்ரீவனும் மற்ற வானரர்களும் விபீஷணனை ஏற்றுக்  கொள்ளக்கூடாது என்று ராமனிடம் சொன்னார்கள். “உடன்பிறந்த சகோதரனான ராவணனுக்கே துரோகம் செய்யத் துணிந்த விபீஷணன் நாளை  நமக்கும் துரோகம் இழைத்திடுவான்!” என்பது சுக்ரீவனின் வாதம். ஆனால் அனுமனோ, “நான் இலங்கைக்குச் சென்றபோது கவனித்தேன். இந்த  விபீஷணன் தர்மாத்மா. இவனை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னுயிரைக் காத்தவனே இவன் தான்!” என்று ராமனிடம் கூறினார். “இவன் தீயவன், ஏற்கக் கூடாது!” என்று சுக்ரீவனும், “இவன் நல்லவன், ஏற்கலாம்!” என்று அனுமனும் சொல்ல, ராமனோ, “இவன் நல்லவனோ  தீயவனோ, சரணம் என்று என்னைத் தேடி வந்து விட்டான். அவனை ஏற்றுக் கொண்டே தீருவேன்!” என்றான்.

“ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கடிமை ஆகின்றேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும்
அஞ்சேல் என்று அருள்கொடுப்பன்!”

என்று ராமன் விபீஷணனுக்கு அபயம் அளித்த விதத்தை வேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.“விபீஷணன் மட்டுமில்லை, அவனது அண்ணன்  ராவணனே வந்தாலும், அவனையும் எனது நண்பனாக ஏற்க நான் தயார்!” என்று சொல்லியபடித் தனது கூடாரத்தில் இருந்து வெளியே வந்த ராமன்,  தன்னைத் தேடி வந்த விபீஷணனையும் அவனுடன் வந்த நால்வரையும் வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டான். தன்னை நாடி வந்தவனுக்கு ஏற்ற  வெகுமதியை அளிக்க விரும்பிய ராமன், இலங்கையின் அரசனாக விபீஷணனுக்குக் கடற்கரையிலேயே பட்டாபிஷேகம் செய்வித்தான்.பின்னர் சேது  பாலம் அமைத்து, ராமனும் வானர வீரர்களும் ராவணனின் சேனையை எதிர்த்துப் போர் புரியத் தொடங்கினார்கள். யுத்தம் உச்ச கட்டத்தில் நடந்து  கொண்டிருந்த வேளையில், ராம பாணங்களால் தாக்கப்பட்டுத் தனது வில், அம்பு, கவசம், தேர் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக  நின்றிருந்தான் ராவணன். அவனைப் பார்த்து ராமன்,

“ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய்ப் போர்க்கு நாளை வா!”

என்று சொன்னதாகக் கம்பர் பாடுகிறார். “இன்று போய்ப் போர்க்கு நாளை வா!” என்ற சொற்றொடரின் மூலம், “இவ்வாறு என்னிடம் வீழ்ந்ததற்கு  அப்புறமும் உனக்குப் போரில் நாட்டமிருந்தால் நாளை வா. மனம் திருந்தி சரணாகதி செய்ய நினைத்தால் அதை இப்போதே செய்து விடு!” என்ற  கருத்தை ராவணனிடம் தெரிவித்தான் ராமன்.அன்று மாலை சுக்ரீவன் ராமனிடம், “ராமா! ராவணன் திருந்தி சரணாகதி செய்தால் அவனை நிச்சயமாக  ஏற்றுக் கொள்வாயா?” என்று கேட்டான். “அதில் சந்தேகமே வேண்டாம்!” என்றான் ராமன். “அப்படியானால், ஏற்கனவே கடற்கரையில் இலங்கையின்  மன்னனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டாயே! இந்நிலையில் ராவணன் மனம் திருந்தி வந்தால், இலங்கையின் அரசை  ராவணனிடமே ஒப்படைப்பாயா?” என்று கேட்டான் சுக்ரீவன்.

அதற்கு ராமன், “நான் கொடுத்த வாக்கை என்றும் மீறமாட்டேன். இலங்கைக்கு அரசனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டேன்.  இனி இலங்கைக்கு என்றுமே அவன் தான் மன்னன்!” என்றான். “அப்படியானால் ராவணனுக்கு என்ன தருவாய்?” என்று கேட்டான் சுக்ரீவன். “ராவணன்  மனம் திருந்தி, பிறன்மனை நோக்கும் பழக்கத்தை விட்டு, சீதையை ஒப்படைத்தால், அயோத்தி ராஜ்ஜியத்தை அவனுக்கு வழங்கி விட்டு, சீதையுடன்  நான் வனம் செல்வேன்!” என்றான் ராமன்.“உனக்கு ராஜ்ஜியம் வேண்டாமா?” என்று ராமனிடம் கேட்டான் சுக்ரீவன். அப்போது குறுக்கிட்ட லட்சுமணன்,  “சுக்ரீவா! அவாப்த-ஸமஸ்த-காமனாகிய என் அண்ணன், இயற்கையிலேயே தனது அனைத்து விருப்பங்களும் ஈடேறப் பெற்றவராகவும், எப்போதும்  மனம் நிறைந்தவராகவும் திகழ்கிறார்.

அயோத்தி ராஜ்ஜியத்தாலோ, இலங்கை ராஜ்ஜியத்தாலோ புதிதாக எந்த ஒரு மகிழ்ச்சியும் அவருக்கு வரப்போவதில்லை! அனைத்தையும்  அடியார்களுக்குத் தந்து விட்டு வனம் சென்றாலும் அவரது மகிழ்ச்சியில் குறைவில்லை!” என்று கூறினான்.‘அர்த்த:’ என்பது விருப்பங்களைக் குறிக்கும்.  ‘ஸித்த:’ என்றால் ஈடேறுதல் என்று பொருள். தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறப் பெற்ற இயல்வினராகத் திருமால் எப்போதும் திகழ்வதால்,  அவர் ‘ஸித்தார்த்த:’ (விருப்பங்கள் யாவும் ஈடேறப்பெற்றவர்) என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 253-வது திருநாமம்.“ஸித்தார்த்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் தர்மத்துக்கு உட்பட்ட அனைத்து விருப்பங்களும் கைகூடும்படித் திருமால்  அருள்புரிவார்.

ஆதி சங்கரர் சிருங்கேரியில் முகாமிட்டிருந்த போது, கிரி என்ற இளைஞன் அவருக்குச் சீடராக வந்து இணைந்தான். குரு பக்தியில்  தலைசிறந்தவனாகத் திகழ்ந்த கிரியின் மேல் சங்கரருக்குப் பிரீதி உண்டானது. அவனைத் தன்னோடு காசிக்கு அழைத்துச் சென்றார் சங்கரர்.காசியில் தினமும் சங்கரர் தமது சீடர்களுக்கு வேதாந்த பாடங்கள் நடத்தி வந்தார். அந்த வகுப்புகளில் எல்லாம் தவறாமல் பங்கு கொண்ட போதும்,  கிரிக்கு வேதாந்த ஞானம் துளி கூட வரவில்லை. இந்நிலையில் ஒருநாள் சங்கரரின் பூஜைக்காகப் பூப்பறிக்கச் சென்றிருந்தான் கிரி. மற்ற சீடர்கள்  எல்லோரும் வேதாந்த பாடத்துக்குத் தயாராக வந்து அமர்ந்து கொண்டார்கள். கிரி மட்டும் வரவில்லை.

அப்போது ஹஸ்தாமலகர் என்னும் சீடர், “சுவாமி! பாடத்தை ஆரம்பிக்கலாமா?” என்று சங்கரரிடம் பணிவோடு கேட்டார். ஆனால் சங்கரரோ, “கிரி  இன்னும் வரவில்லை. அவன் வந்தபின் பாடத்தைத் தொடங்கலாம்!” என்று கூறினார். அப்போது பத்மபாதர் என்னும் சீடர், “எதிரில் உள்ள ஒரு  சுவரைச் சுட்டிக் காட்டிவிட்டு, இதற்கும் கிரிக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை! அவன் பாடத்துக்கு வந்தாலும் ஒன்று தான், வராவிட்டாலும்  ஒன்று தான்!” என்று சொல்ல, அனைத்துச் சீடர்களும் கிரியைக் கேலி செய்து சிரித்தார்கள்.அச்சமயம் கிரியின் குரல் கேட்டது.

“விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்”

(சாஸ்திரங்களாகிற சமுத்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவரும், உபநிஷத்துக்கள் கூறும் தத்துவங்களின் இருப்பிடமாகத் திகழ்பவருமான ஆதி  சங்கரரின் பாத கமலங்களை என் இதயத்தில் வைத்துப் போற்றுகிறேன். மஹாஞானியான என் குரு சங்கரர் தான் எனக்கு அடைக்கலம் தந்தருள  வேண்டும்) என்று தொடங்கி, சங்கரரின் மேன்மைகளைக் குறித்து எட்டு ஸ்லோகங்களைப் பாடிக் கொண்டு, கைகளைத் தட்டித் தாளம் போட்டுக்  கொண்டு, துள்ளித் துள்ளி ஓடி வரும் கிரியை சீடர்கள் கண்டார்கள்.வடமொழியில் உள்ள பாவகைகளுள் தோடகம் என்னும் பா வகையில் இந்த எட்டு  ஸ்லோகங்களையும் கிரி இயற்றியிருந்தான். தோடகம் என்னும் பாவில் கவிதை எழுதுவது பெரும் கவிஞர்களுக்கே கடினமான செயலாயிருக்க,  அறிவிலியான கிரியால் எப்படி எட்டு ஸ்லோகங்கள் எழுதிப் பாட முடிந்தது என்று சீடர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

அப்போது அவர்களைப் பார்த்து, “சீடர்களே! கிரிக்கு ஞானம் குறைவாக இருக்கலாம். ஆனால் அளவு கடந்த குரு பக்தியை உடையவனாக அவன்  இருக்கிறான். அத்தகைய குரு பக்தி உள்ளவர்களைத் தான் இறைவனும் விரும்புவான். மிகச்சிறந்த குரு பக்தனான கிரியின் அறிவை நீங்கள் கேலி  செய்தீர்களல்லவா? அது இறைவனுக்கே பொறுக்கவில்லை! அதனால் ஒரே நொடியில் அவனுக்கு மிகச்சிறந்த பாண்டித்தியமும் ஞானமும் ஏற்படும்படி  இறைவன் அருள்புரிந்து விட்டார்!” என்று கூறினார் சங்கரர்.சங்கரர் குறித்து கிரி இயற்றிய அந்த எட்டு ஸ்லோகங்கள் ‘தோடகாஷ்டகம்’ என்று பெயர்  பெற்றன. இந்த தோடகாஷ்டகத்தை எழுதியபடியால், ‘தோடகாச்சாரியார்’ என்றே கிரிக்குப் பெயர் ஏற்பட்டது. தாம் நிறுவிய மடங்களுள் ஒன்றான  ஜோதிர்மட பீடத்துக்குப் பீடாதிபதியாகத் தோடகாச்சாரியாரை நியமித்தார் சங்கரர்.

கல்வி அறிவில் மந்தமாக இருந்த கிரி, தோடகாச்சாரியாராக மாறியதற்கு எது காரணம்? அவரது குருபக்தியே! அந்த குருபக்திக்கு உகந்த இறைவன்,  கிரிக்கு ஞானம் உண்டாகட்டும் என்று மனதில் நினைத்தார். அடுத்த நொடியே கிரிக்கு ஞானம் உண்டாகி விட்டது.நமக்கும் இறைவனுக்கும் உள்ள  வேறுபாடு இதுதான். நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் அதை மனத்தால் நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான பிரயத்தனத்தையும்  மேற்கொள்ள வேண்டும். ஆனால் இறைவனுக்கோ, பிரயத்தனப்படத் தேவையில்லை. அவர் மனத்தால் நினைத்தாலேயே அந்தச் செயல் நிறைவேறி  விடும்.‘ஸங்கல்பம்’ என்பது நமது எண்ணத்தைக் குறிக்கும். ‘ஸித்த:’ என்றால் ஈடேறுதல் என்று பொருள். திருமாலின் எண்ணங்கள் யாவும் நினைத்த  மாத்திரத்தில் ஈடேறிவிடுவதால், அவர் ‘ஸித்தஸங்கல்ப:’ (அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெற்றவர்) என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு  ஸஹஸ்ரநாமத்தின் 254-வது திருநாமம்.

“எண்ணிய முடிதல் வேண்டும்!
நல்லவே எண்ணல் வேண்டும்!”

என்று பாரதியார் பாடியதற்கேற்ப, “ஸித்தஸங்கல்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல எண்ணங்கள் விரைவில்  நிறைவேறத் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர் உ.வே. வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!