×

வள்ளுவரும் சுற்றுச் சூழலும்...

குறளின் குரல்: 131

சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டு வருகிறது என்பதை உலகம் முழுவதும் பலரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கொரோனா போன்ற நோய்கள் உருவாவதற்கு சுற்றுச்சூழல் மாசுபாடும் கூட ஒரு காரணம் என்றுகருதப்படுகிறது.ஓசோனில் துவாரம் விழுந்து விட்டது என்றும் அது பெரும் பாதிப்புகளைத் தோற்றுவிக்கும் என்றும் சூரியக் கதிர்களின் வெம்மை உலகை அதிகம் தாக்கி அதனால் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படக் கூடுமென்றும் இமயப் பனிமலையேகூட உருகலாம் என்றும் சுற்றுச் சூழலியல் விஞ்ஞானிகள் தங்கள் அச்சத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

சந்திரனில் கால் வைத்த மனிதன், தன் வீட்டுக்கு வெளியே கால் வைக்கத் தயங்கும்நிலை உருவாகிவிட்டதை இப்போது தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பார்க்கிறோம். வனங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். புகை மண்டலத்தால் அகிலத்தையே மாசுபடச் செய்கிறோம். நிலம், நீர், காற்று போன்ற இயற்கை வளங்கள் பழுதுபட்டுள்ளன. வனங்களில் மரங்கள் வரைமுறையே இல்லாமல் வெட்டித் தள்ளப்படுகின்றன. கானக விலங்குகள் வாழ இடமின்றித்தத்தளிக்கின்றன.

நதிகளில் மணல் கொள்ளை. தொழிற்சாலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து சுற்றுச்சூழல் நாள்தோறும் நாசமாக்கப்படும் அவலம்.இதனால் இயற்கைச் சமநிலை மாறுபடு கிறது. பருவ காலங்கள் தவறுகின்றன. கடலில் ஆழிப் பேரலை எழுகிறது. நிலநடுக்கம் உருவாகிறது. மனித சமுதாயத்தின் நலன்கருதி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தோட்டம் இப்போது உலகெங்கும் முன்வைக்கப்படுகிறது.

இயற்கை வளத்தின் பெருமைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பதிவு செய்திருக்கிறார் என்பது இன்று நினைத்துப்
பார்த்தால் வியப்படைய வைக்கிறது.

'புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.'
(குறள் எண் 298)


புறத்தூய்மை என்பது தண்ணீரால் ஏற்படுகிறது. அகத் தூய்மையோ சத்தியத்தாலேயே உணரப்படுகிறது. புறத்தூய்மை தருகிற தண்ணீரை மாசுபடுமாறு செய்வது சரியல்ல. தண்ணீர் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்து இந்தக் குறளால் பெறப்படுகிறது.இந்தக் கொரோனா காலத்தில் வெளியே சென்று வந்தால் கைகளை நன்கு தண்ணீரால் கழுவிக் கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இப்பழக்கத்திற்கு ஆதாரம் திருக்குறளிலேயே உள்ளது. புறந்தூய்மை நீரால் அமையும் என்று குறிப்பிட்டதால், புறத்தைத் தண்ணீரால் நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் என்பதைத்தானே வலியுறுத்துகிறார் வள்ளுவர்?

'கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்
சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.'
(குறள் எண் 840)


சான்றோர் பலர் கூடியிருக்கும் இடத்தில் அறிவில்லாத ஒருவன் நுழைவதென்பது, தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத பாதத்தை அவன் தான் படுக்கிற படுக்கையில் வைத்ததைப் போன்றது.ஆக, கால்களைக் கழுவித் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பது தெரிய வருகிறது. கிருமிகள் நம்மைத் தாக்காதிருக்க நாம் எவ்வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றித் திருவள்ளுவர் காலத்திலேயே தமிழர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

'பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.'
(குறள் எண் 1000)


நல்ல பண்புகள் இல்லாத ஒருவனிடம் செல்வம் சேர்வதால் என்ன பயன்? அந்தச் செல்வம், நல்ல பாலானது அது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் தூய்மையாக இல்லாததால் திரிந்து கெட்டுவிட்டதற்கு ஒப்பானதாகும்.பாத்திரங்கள் நன்கு கழுவப்பட்டுத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையும் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தக் குறள் சான்று. அதுமட்டுமல்ல. நம் தமிழ்மொழியின் பல சொற்பயன்பாடுகள் தொன்றுதொட்டு ஒரேவிதமாகக் காப்பாற்றப்பட்டு வந்திருப்பதற்கும் இந்தக் குறள் சாட்சியாக அமைகிறது.

இன்றும் பால் கெட்டுப்போனதைப் பற்றிச் சொல்லும்போது பால் திரிந்துவிட்டது என்றே நாம் சொல்கிறோம். வள்ளுவரும் `நன்பால் திரிந்தற்று’ என்கிறார்.

'நீர் இன்று அமையாது உலகெனின் யார்    
யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு.'

(குறள் எண் 20)

நீரில்லாமல் உலக வாழ்வு அமையாது. அதுபோல நீரைத் தரும் வான்மழை இல்லையென்றால் எல்லோரிடமும் ஒழுக்கம் அமையாது. இவ்விதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீரின் முக்கியத்துவத்தையும் மழையின் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசுகிறது வள்ளுவம்.

'நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும்
மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.'
(குறள் எண் 452)


தான் எந்த நிலத்தை அடைகிறதோ அந்த நிலத்தின் தன்மைக்கேற்ப மாறுபாடு அடையும் இயல்புடையது நீர். அதுபோல மக்களுடைய அறிவென்னும் உணர்வும் தாம் சேர்ந்த இனத்தாரின் இயல்புக்கேற்ப மாறுபாடு கொள்ளும். `சிற்றினம் சேராமை’ என்ற அதிகாரத்தில் இக்குறளைச் சொல்கிறார் வள்ளுவர். கீழோரிடம் சேர்ந்தால் அந்த இயல்பே வரும் என்ற கருத்தை வலியுறுத்த இக்குறளை அமைக்கிறார். ஒரு மண்ணில் கலந்த நீர் அந்த மண்ணின் இயல்பை அடைகிறது.

'யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!'


- என்பது புலவர் செம்புலப் பெயல் நீரார் எழுதிய குறுந்தொகைப் பாடல். `செம்மண்ணில் விழுந்த மழைநீர் செந்நீர் ஆவதுபோல காதல் நெஞ்சங்கள் கலந்தன’ என்கிறார் கவிஞர். நிலத்தின் தன்மைக்கேற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை அறிந்திருந்த பழந்தமிழர் நீரின் தூய்மை குறித்தும் அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதையே இச்செய்திகள் புலப்படுத்துகின்றன.

'நிழல்நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.'
(குறள் எண் 881)


இன்பம் தரும் நிழலும் நீரும் நோய்செய்வனவாக இருந்தால் துன்பத்தைத்தான் தரும். அதுபோல சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும். நீர் மாசுபட்டால் துன்பத்தைத் தரக்கூடியது. நீர் இன்பத்தையே தரக்கூடிய வகையில் மாசற்றதாக இருக்குமாறு காப்பாற்ற வேண்டியது மனித குலத்தின் கடமை.

'நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.'
(குறள் எண் 17)


மேகம் கறுத்து மழைபொழியவில்லை என்றால் நெடிய கடலும் தன் வளம் குறையும். (மழை பெய்வதன் மூலம்தான் கடலில் உப்புச் சத்து அதிகமாகாமல் ஓரளவில் கட்டுக்குள் நிற்கிறது. மழை பொழியாவிடில் உப்பின் தன்மை அதிகரித்து மீன்கள் உயிர்வாழ இயலாத நிலை தோன்றும். கடல் செல்வங்களான முத்து பவழம் போன்றவையும் குறையும். இந்த உண்மையையெல்லாம் அன்றைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதன் அடையாளமே இந்தக் குறள்.)

'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.'
(குறள் எண் 215)


தன்னில் வந்து சேர்ந்த நீரைக் குளம் எப்படிப் பொதுமக்கள் எல்லோருக்கும் பாரபட்சமின்றிக் கொடுக்கிறதோ, அதுபோல், உலக மக்களின் நன்மையைப் பெரிதும் விரும்பும் சான்றோர் பெருமக்கள், தங்களிடம் சேர்ந்த செல்வத்தைக் கொடுப்பர்.

'விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.'
(குறள் எண் 16)


ஒரே ஒரு பச்சைப் புல்லே என்றாலும் அது வானத்திலிருந்து மழைத்துளி விழாவிட்டால் தலைகாட்ட இயலாது.

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.’
(குறள் எண் 742)


வற்றாத நீருடைய அகழியும் விரிந்த நிலமும் மலையும் நிழல்தரும் அடர்ந்த கானகமும் ஆகிய இந்த நான்கும் உடையதே அரண் எனப்படும்.

‘அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு
மல்லல்மா ஞாலம் கரி.’
(குறள் எண் 245)


எல்லோரிடமும் கருணை காட்டும் அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது. இதற்குக் காற்று உலவுகின்ற வளமை மிகுந்த இந்தப் பெரிய உலகமே சான்று.

'மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யாளன்கட் படின்.'
(குறள் எண் 217)

பெருந்தன்மையாளனிடம் செல்வம் சேர்ந்தால், எல்லாப் பாகங்களும் நோய்க்கு மருந்தாகும் மரம்போல அச்செல்வம் முழுமையாகப் பிறருக்குப் பயன் தருகிறது.பொதுவாகவே கவிஞர்கள் இயற்கையை ரசிப்பவர்கள். மாசுபடாதசுற்றுச்சூழலில் தன் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என மகாகவியும் கனவு காண்கிறார். பராசக்தியிடம் பாரதியார் வேண்டும் வேண்டுதல்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர் ஆழ்மனம் எத்தனை அக்கறை கொண்டிருந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.

காணி நிலம் வேண்டும் என பராசக்தியிடம் கேட்கும் அவர், தொடர்ந்து கேட்பவை எல்லாம் மாசில்லாத சுற்றுச் சூழல் இருந்தாலன்றிக்
கிட்டாதவை.

'பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்
 பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
 முன்பு வரவேணும் - அங்கு
கத்தும் குயிலோசை சற்றேவந்து
 காதில் படவேணும் - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளம்
 தென்றல் வரவேணும்!'


முன்பு கிராமங்களில் பாரதி கேட்கும் அனைத்தையும் பெறுவது சாத்தியமாயிருந்தது. இன்று கிராமங்களே இல்லாத சூழ்நிலை உருவாகத் தொடங்கிவிட்டது. கிராமங்கள் பட்டணங்களாய் மாறத் தொடங்கிவிட்டன. சிட்டுக்குருவிகளை மறையவைத்த கைபேசிகள் எல்லா கிராமங்களிலும் புழக்கத்தில் வந்துவிட்டன. தூய்மையான கிராமத்து வயல்வெளிக் காற்றிலும் மாசு படியத் தொடங்கிவிட்ட காலமல்லவா இது!

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலேயே நாம் நமது ஆன்மிகத் திருத்தலங்களில் தல விருட்சங்களைப் போற்றிக் கொண்டாடினோம். புண்ணியத் தீர்த்தங்கள் என்றும், புண்ணிய நதிகள் என்றும் சொல்லி நீர்நிலைகளின் பெருமையை நிலைநாட்டினோம்.

ஆனால் பல தல விருட்சங்கள் மாதிரிக்கு ஒன்றாக அந்தத் தலங்களில் மட்டுமே தென்படுகின்றன. அவையும் பல திருத்தலங்களில் பட்டுப் போய்விட்டன. மற்றபடி அந்த மரங்கள் கானகங்களை அழித்த காரணத்தால் மறைந்தே விட்டன. நதிகள் பல இன்று நீரற்று வறண்டிருக்கின்றன.

'காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி - என
மேவிய ஆறு பலஓடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு’

என்று பாரதி கொண்டாடிய நதிகளிலெல்லாம்
இன்று நீர் வரத்து குறைந்துவிட்டது.

'தண்டலை மயில்களாடத்
தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கு மாதோ!’


என்று வண்டுகளின் ரீங்காரத்திற்கு மயில்கள் நடனமாடிய அழகிய மருத நிலக் காட்சியை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் கம்ப நாட்டாழ்வார். இனி மனக்கண்ணில் தானே அத்தகைய காட்சிகளை நாம் காண முடியும்?

'ஏழாவது மனிதன்’ என்ற திரைப்படம் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் விளையும் கேடுகளைப் பற்றி பேசிய படம். ஹரிஹரன் இயக்கத்தில் ரகுவரன் கதாநாயகனாக நடித்த அந்தப் படம், ஒரு தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் புகை, காற்றை எப்படி மாசுபடுத்துகிறது என்பதையும், அதனால் பலருக்கு நுரையீரல் தொடர்பான நோய் ஏற்படுவதையும் விவரித்து திரை ரசிகர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
'ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்’ என்ற கண்ணதாசன் பாடல் பழநி திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஒலிக்கிறது.

'பச்சை வண்ணச் சேலை கட்டி
முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே
நாணம் என்ன சொல்லம்மா...
அறுவடைக் காலம் உந்தன்
திருமண நாளம்மா!’

என்ற வரிகளைக் கேட்கும் நம் மனம் மயங்குகிறது. ஆனால் கிராமங்களைப் பற்றி அறிய அதிக வாய்ப்பில்லாத இன்றைய தலைமுறை, நெல் எந்த மரத்தில் காய்க்கும் என்ற கேள்வியை எழுப்பும்போது நம் நெஞ்சம் திகைக்கிறது. இன்றைய சூழலே இவ்விதம் இருக்குமானால் எதிர்காலச் சூழல் என்னவாகும்?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களை வகுத்து ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய மரங்கள், பறவைகள் போன்றவற்றையெல்லாம் பேசுகிறது நம் பழந்தமிழ் இலக்கியம். இன்று அந்த நிலப் பகுப்புகளும் அவற்றிற்குரிய விலங்குகளும் பறவைகளும் எங்கே போயின? காடும் காடுசார்ந்த இடமும் வயலும் வயல்சார்ந்த இடமுமெல்லாம் மிகவும் குறுகி விட்டனவே?

சுற்றுச்சூழல் மாசு முழுமையாக அகற்றப்பட்டாலன்றி மீண்டும் அந்தப் பழைய தமிழகம் என்பது கனவு மட்டுமே. மாசற்ற சுற்றுச்சூழல் ஒருகாலத் தமிழகத்தில் நிலவியது என்ற உண்மையின் சாட்சியாக இன்றும் உள்ளது திருக்குறள்.சுற்றுச் சூழல் தொடர்பான வள்ளுவச் சிந்தனைகளை மனத்தில் கொண்டு, மென்மேலும் சூழலை மாசுபடுத்தாதிருப்போமாக.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்