மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒரு ரசிகை நடிகர் சஞ்சய் தத் மீது கொண்ட அன்பால் தனது முழு சொத்தையும் அவருக்கு எழுதி வைத்துள்ளார். நிஷா பாட்டீல் என்ற அந்த 62 வயது ரசிகை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு முன் தனது பெயரில் வங்கியில் உள்ள பணத்தை நடிகர் சஞ்சய் தத் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கூறி உயில் எழுதிவிட்டு காலமானார். இது குறித்து வங்கி நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் நடிகர் சஞ்சய் தத்தை தொடர்புகொண்டு ரசிகையின் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதனைக் கேட்டு சஞ்சய் தத் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார். இதற்கு முன்பு தான் அந்த ரசிகையை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்த சஞ்சய் தத், இந்த விவகாரம் தனக்கு வேதனை தருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது சொத்துகள் எதுவும் தனக்கு வேண்டாம் என்றும் கூறிவிட்டார். சஞ்சய் தத்தின் வக்கீல் இது குறித்து கூறுகையில், ‘‘நாங்கள் அந்த பணத்திற்கு உரிமை கோரவில்லை. சொத்துக்கள் அந்த ரசிகையின் குடும்பத்திற்குக் கிடைக்கத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். வங்கியில் இருக்கும் பணம் மற்றும் பிற சொத்துக்களை சேர்த்து நிஷா பாட்டீலிம் ரூ.72 கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்துள்ளது. அவை அனைத்தையும் சஞ்சய் தத்திற்கு கொடுக்கும்படி கூறி உயில் எழுதி வைத்துவிட்டு நிஷா பாட்டீல் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.