×

புரட்டாசியில் பெருமாள் வழிபாடு

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கூறப்படுவது ஏன்?

ஆவணி மாதம் நிறைவுற, புரட்டாசி மாதம் தொடங்கிட இருக்கும் நிலையான அதாவது சூரியன் இருக்கும் நிலையை வைத்து தமிழ் மாதங்கள் குறிக்கப்படுகிறது. இதர மாநிலங்களில் சந்திரனை மையமாக வைத்து மாதங்களை குறிக்கிறார்கள். ஆடி மாதம் அமாவாசை முடிந்த நாளிலிருந்து ஆவணி கணக்கிடப்படுகிறது. அதுபோல ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களெல்லாம் புரட்டாசி ஆகிறது மற்ற மாநிலங்களில் அந்த வகையில் மகா விஷ்ணு எடுத்த அவதாரமான வாமன அவதாரம் நிகழ்ந்தது புரட்டாசி மாதத்தில். அது மட்டுமன்றி பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில். மகாவிஷ்ணுவின் அவதாரமாக காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் அவதரித்தது புரட்டாசி மாதத்தில் இவ்வாறு புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுக்கு உகந்த மாதம் ஆனது.

சனிக்கிழமை திருமாலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளானது எப்படி?

மகாவிஷ்ணு கண்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்து வந்தார். அப்போது கண்ணனால் தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்த அவரது தாய்மாமன் கம்சன், மாயா என்ற அரக்கியை, கண்ணனை கொலை செய்ய அனுப்புகிறான். அவளை கண்ணனே வதம் செய்கிறான். அதே நேரம் ஹோலிக்கா என்கிற மாய அரக்கியையும் உடனே அனுப்பி வைத்தான் கம்சன். பாலகனாக இருந்த கண்ணனை காப்பாற்றி பெரும் பாக்யம் பெற எண்ணிய சனீஸ்வரன், மாய அரக்கி ஹோலிக்காவை உக்கிர பார்வை பார்க்க, மறுகனமே பஸ்பமானாள் ஹோலிக்கா. இதனை நினைவூட்டினார் மகாவிஷ்ணுவிடம் சனீஸ்வரன். உடனே மகாவிஷ்ணு சனிக்கிழமை விடியற்காலை சனி உஷஸ் பொழுதில், நாள், நட்சத்திரம் பார்க்காமல் நல்ல காரியங்கள் செய்ய உகந்த பொழுதாகும். அதுமட்டுமல்ல சனிக்கிழமைகளில் என்னை நினைத்து பூஜிப்பவர்களுக்கு எல்லா விதமான நற்பலன்களும் கிட்டும்.

சகல சௌபாக்யமும் உண்டாகும். குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் என்னை நினைத்து விரதம் இருப்போர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கச் செய்வேன் என்று கூறினார். சனீஸ்வரனுக்கு முக்கியத்துவம் அளிக்கிற வகையில் பெரும் வரம் அளித்தார். இதன் காரணமாக சனிக்கிழமை, பெருமாள் வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்தது. உண்மையிலேயே சனிக்கிழமை ஸ்ரீ நிவாசப் பெருமாளை பூஜிப்பவர்களுக்கு சனிபகவானால் ஏற்பட இருக்கும் கெடுபலன்கள் மறையும்.

ஏழுமலையான் என்கிற நாமம் வந்தது எதனால்?

பகவான் ஸ்ரீகிருஷ்ணன், பெரு மழையிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு கோவர்த்தன மலையை தனது விரலால் தூக்கி, தாங்கிப்பிடித்தார். ஏழு நாட்கள் முடிந்த பின்னர் மலையை கீழே இறக்கி வைத்தார். அப்போது கோவர்த்தன மலை, பகவானே உமது விரல் பட்டதை விட உமது பாதம் படவே நான் விரும்புகிறேன். மேலும் என்னை சுமந்த உம்மையும், உமது நாமம் சொல்லி வரும் பக்தர்களையும் நான் சுமக்கும் பாக்யமும் எனக்கு கிட்டச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. உடனே அப்படியே ஆகட்டும். நீ எண்ணியது நடந்தேறும் என்றார். மறுகணமே ஏழு நாள் கிருஷ்ணர் தாங்கி பிடித்ததாலே அதை நினைவு கூறும் வகையில் கோவர்த்தன மலை ஏழு மலையாக உருவெடுத்தது. ஏழு மலையிலும் பாதம் பணித்து மேல் மலையில் வாசம் செய்தார் ஸ்ரீநிவாசன். ஏழு மலைக்கு மேலே நின்றதாலே எம்பெருமாள் ஏழுமலையான் என அழைக்கப்பட்டார்.

எவ்விதம் புரட்டாசி மாதம் முழுதும் பெருமாளை வழிபடுவது?

பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற அதிகாலை நேரம் 4.30 முதல் 6 மணிக்குள்ளான பொழுதில் எழுந்திருக்க வேண்டும். கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, திரிகூடமலையில் உள்ள யானை கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்தது. ஒரு நாள் தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கி சென்றபொழுது அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திர யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி ஆதிமூலமே ஹரி...ஹரி என்று ஏழு முறை கூவி அழைத்தது. விரைந்து வந்த பெருமாள் தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார். அதுபோல நமது துன்பங்களையும், துயரங்களையும் களையும் பொருட்டு ஹரி...ஹரி என்று ஏழு முறை சொல்லவேண்டும். அதன் பின்னர் நீராடி விட்டு திலகம் இட்டு பெருமாள் சந்நதியில் அமர்ந்துக்கொண்டு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவையில் முதலானவற்றை சொல்லலாம். திருப்பாவையில் வரும் கீழே உள்ள பாசுரமான...
‘‘சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்
தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம்
ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று  ஏலோர் எம்பாவாய்.’’

பொருள்:

கண்ணா! மிக அதிகாலையில் எழுந்து, உன்னைச் சேவித்து, உன்னுடைய பொன்னான திருவடிகளைப் போற்றி, நாங்கள் கேட்கும் வரம், வேண்டுகோளைக் கேட்டு அருள வேண்டும். (பரம்பொருளாக இருந்தும்) மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து கோபலனாக வந்த நீ, எங்களது சிறு அடிமைப் பணி களை, அந்தரங்கத்தொண்டுகளை, ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று நாங்கள் வந்தது, பறை என்ற கொட்டும் வாத்தியத்தைப் பெறுவதற்காக அல்ல. காலம் உள்ள
அளவும், ஏழு ஏழு பிறவிகளிலும் நாங்கள் உன்னோடு உறவு கொண்டு, உன் மகிழ்ச்சிக்காகவே, நாங்கள் அடிமைப்பட்டிருப்போம். எங்களது உள்ளத்தில் எழும் மற்ற சிறுசிறு ஆசைகளையும் நீ உன்னிடத்தில் பக்தியாக மாற்றி அருள வேண்டும்.

இந்த திருப்பாவையின் 29வது பாசுரத்தை தினமும் சொல்ல வேண்டும். அதோடு பெருமாள் படத்திற்கு அல்லது விக்ரஹத்திற்கு துளசி மாலை சாத்தி பூஜிக்க வேண்டும். வெங்கடேச சுப்ரபாதம் கேட்கலாம். அல்லது சொல்லலாம். பின்னர் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு மாலையில் பெருமாள் விக்ரஹத்திற்கு மாலை சாத்தி தீபம் ஏற்றி வைத்து விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கேட்கலாம். அல்லது சொல்லலாம். இதையே புரட்டாசி மாதம் முடிய தினமும் செய்யுங்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு அரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து அதன் மேல் குழி அமைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுங்கள்.

மாலனுக்கு மாவிளக்கு ஏற்றுவது எதற்காக?

மரத்தையே வேங்கடவனாக எண்ணி வேடன் பூஜை செய்து தேனும் தினைமாவும் கொடுத்தான். அவனுக்கு பெருமாள் காட்சி கொடுத்து மோட்சம்
அருளினார். இதை நினைவு கூறும் வகையில் தினைமாவுக்கு பதிலாக அரிசி மாவும், தேனுக்கு பதிலாக வெல்லமும் கலந்து உருண்டை பிடிக்கிறோம். மாவு உருண்டை என்பது ஏழுமலையையும் அதன் மேல் பற்ற வைக்கும் தீபம் வேங்கடவனையும் குறிக்கும். மாவு உருண்டையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு திருவாய்மொழியிலுள்ள இரண்டு பாசுரங்களை பாட வேண்டும்.

‘‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தை தந்தை
தந்தைக்கே.
வேங்கடவனே யாவர்க்கும் தந்தை’’
‘‘உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே!
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய் அடியே னாருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங்கடத்தெம் பெருமானே!
குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே.’’

புரட்டாசி மாதம் திருமலைக்கு யாத்திரை செல்லவேண்டும். திருமலையில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கண்டால் பெரு வாழ்வு கிட்டும்.

தொகுப்பு: திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Perumal ,
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...