×

வேடனாக வந்த வேங்கடவன்

காஸ்யப முனிவர், சக ரிஷிகளுடன் சேர்ந்து யாகம் நடத்தினார். அப்போது அவ்விடம் வந்த நாரதர், யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் யாருக்குத் தரப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். உடனே மும்மூர்த்திகளில் யார் பொறுமையின் பொக்கிஷம்? என்று காஸ்யப முனிவர் கேள்வி எழுப்ப, நாரதர் அதை பிருகு முனிவரிடமே கேளுங்கள். என்று கூற, காஸ்யப முனிவர் பிருகு முனிவரை அணுகினார். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று, எந்தக் கடவுள் பொறுமை மிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார்.

பிருகு முனிவர் பிரம்மனை தரிசிக்க சத்யலோகத்திற்கு சென்றார். அங்கே பிரம்மதேவர் சரஸ்வதி தேவியின் துணையுடன் தனது நான்கு முகங்களாலும் ஸ்ரீமன் நாராயணனைப் போற்றி நான்கு வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார். பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டுவிட்டு, கயிலாயம் சென்றார். அங்கே சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார். பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமான், பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர், பூலோகத்தில் இனி உமக்கு உருவம் இல்லை. லிங்க ரூபமே. அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார்.

பின்னர் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தார். ஆனால் ஆதிசேஷன் குடை விரிக்க, மகாலட்சுமி காலடியில் அமர்ந்து பணிவிடை செய்ய மகாவிஷ்ணு சயனத்தில் இருந்ததால் அவரும் முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் ஆத்திரத்தில் மதியிழந்த பிருகு முனிவர் மகாவிஷ்ணுவின் நெஞ்சில் எட்டி உதைத்தார். முனிவரின் கோபத்தை தணிக்க நினைத்த பெருமாள் எட்டி உதைத்த காலை சட்டென பிடித்து என் மார்பை மிதித்ததால் தங்கள் கால்கள் வலிக்குமே என்று கூறியவாறு, பாதங்களை மென்மையாக அழுத்திவிட்டார். அந்த இதத்தில் முனிவரின் கோபம் தணிந்தது. அதே சமயம் மகாவிஷ்ணு பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பறித்துவிட்டார். பாதத்தில் இருந்த கண் தான் அவருக்கு இத்தனை அகங்காரத்தை தந்தது. தனது தவறை உணர்ந்த முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்புக் கோரிவிட்டு மும்மூர்த்திகளில் சிறந்தவர் இவரே என முடிவு செய்தார்.

தன்னை எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே விஷ்ணுவை விட்டு பிரிந்து பூலோகத்திற்கு வந்தாள். மகாலட்சுமியை அழைத்து வருவதற்காக பூலோகம் வந்த மகாவிஷ்ணு வேங்கடமலையில் உள்ள புஷ்கரணியின் தெற்குக் கரையில் ஒரு புளிய மரத்தடியில் எறும்புப் புற்றின் மேல் அமர்ந்து தவம்புரிந்தார். பிரம்மனும், ஈசனும் பெருமாளுக்கு உதவும் நோக்கோடு பசு மற்றும் கன்றுக் குட்டியின் வடிவெடுத்து அவர்களும் பூலோகம் வந்தனர். இதனை சூர்ய பகவான் மூலம் அறிந்த மகாலட்சுமி மாடு மேய்க்கும் இடைக்குலப் பெண்ணாக உருக்கொண்டு வந்து பசுவையும், கன்றையும் சோழ மன்னனுக்கு விற்றாள். சோழ மன்னனின் பணியாட்கள் மாடுகளை வேங்கடமலைக்கு மேய அனுப்புவார்கள்.

அங்கே ஒரு எறும்புப் புற்றில் மகாவிஷ்ணுவை கண்ட பசு, தாமாகவே அங்கே பால்சுரக்க ஆரம்பித்தது. அதை ஏற்று மகாவிஷ்ணுவும் பசியாறி வந்தார். இதற்கிடையே அரண்மனையில் பசுக்கள் பால் தருவது இல்லை என்பதை கவனித்த மன்னனின் வேலையாள் பசுவை பின்தொடர்ந்து வந்தான். அது ஒரு இடத்தில் தானாகவே பால் சுரந்து பாலை வீணடிப்பதை கவனித்த அவன் பசுவின் மீது தன் கோடாரியை வீசியெறிய அது பசு மீது பட்டுவிடக் கூடாது என மகாவிஷ்ணு குறுக்கே தோன்றி அடியை தான் வாங்கினார். தான் வீசிய ஆயுதம் மகாவிஷ்ணுவை தாக்கி அதனால் ரத்தம் வருவதைக் கண்ட வேலையாள் அதிர்ச்சியில் உயிரிழந்தான்.

ரத்தக்கறையுடன் பசு மாடு வருவதைக் கண்ட சோழ ராஜா என்ன நடந்தது என அறிய அதை பின்தொடர்ந்தான். அங்கே எறும்புப் புற்று ஒன்றின் அருகே தனது வேலையாள் இறந்து கிடப்பதைக் கண்டு ஏதுமறியாமல் விழித்தான். அப்பொழுது அவனுக்கு காட்சியளித்த விஷ்ணு ‘‘அடுத்த ஜென்மத்தில் ஆகாச ராஜாவாக நீ பிறப்பாய் என்றும் உனக்கு மகளாக மகாலட்சுமியே உன்னிடத்தில் வளர்வாள் என்றும் உரிய நேரத்தில் நானே வந்து அவளை மணப்பேன்.’’ என்றும் கூறினார்.
அடுத்த பிறவியில் அச்சோழ மன்னன் ஆகாச ராஜாவாக பிறந்தான். அவரது மனைவி தரணிதேவி. அவனுக்கு பிள்ளைப் பேறு இல்லை அதனால் யாகம் செய்ய எண்ணிய அவன் பொன் கலப்பையால் நிலத்தை உழுத பொழுது அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. அதனருகில் சென்று பார்த்தபோது அதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அப்போது இந்த குழந்தையை எடுத்து வளர்த்தால் சகல சௌபாக்கியம் உண்டாகும் என அசரீரி கேட்டது.

தாமரை மலரில் தோன்றியதால் பத்மாவதி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தான். (பத்மம் என்றால் - தாமரை என்று பொருள்) பத்மாவதி வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட, பத்மாவதி மறுத்துவிட்டாள். பின்னர் வேடனாக வந்தது மகாவிஷ்ணு என்பது தெரிந்ததும், பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை. ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய்விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் நாரதர், குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார்.

உடனே சீனிவாசப்பெருமாள் குபேரனை அழைத்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்தார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு, கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் சீனிவாசன். திருமணம் சிறப்பாக முடிந்தது. திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags : Venkatavan ,hunter ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’