×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: கவந்தன்

“வாயும் வயிறுமாக இருக்கிறாள்” என்று கருவுற்ற பெண்களைச் சொல்வார்கள். மேம்போக்காகப் பார்த்தால், இது ஏதோ சாதாரணமாகத் தோன்றுகிறதே தவிர; ஆழ்ந்த பொருள் கொண்ட சொற்றொடர் இது.மகப்பேறு உண்டான பெண் உண்ணும் உணவு, அவள்  வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உணவாக அதன் வயி்ற்றில், தொப்புள்கொடி வழியே போய்ச் சேருகிறது.ஆம்! குழந்தைக்கு அதன் வயிறே, வாயாக இருக்கிறது. இவ்வாறு வயிறே வாயாக - வாயே வயிறாக இருந்த ஒரு ஜீவன்தான் கவந்தன்.

ராவணன் சீதாதேவியைத் தூக்கிக்கொண்டு போன பின், ராம - லட்சுமணர்கள் சீதாதேவியைத் தேடி வந்தார்கள்; வந்தவர்கள் கபந்தன் எனும் அரக்கன் இருந்த வனத்தை அடைந்தார்கள்.
எய்யும் சிலைக்கை இருவரும் சென்று,
இருந்தே நீட்டி எவ்வுயிரும்
கையின் வளைத்து வயிற்றடக்கும்
கவந்தன் வனத்தின் கண் உற்றார்
(கம்ப ராமாயணம்)

கவந்தனுக்கு வயிற்றிலேயே வாய் அமைத்திருந்தது; தன் இரு கைகளையும் நீட்டி வளைத்து, எந்தப் பிராணியையும் பிடித்து, அப்படியே வயிற்றுக்குள் அடக்கும்-அடைக்கும் வல்லமை பெற்றவன் ‘கவந்தன்’.நீ....ஈ...ண்ட கைகளை நீட்டி, அதற்குள் சிக்குவதை - அது மனிதனாக இருந்தாலும் சரி; மிருகமாக இருந்தாலும் சரி! எந்தவிதமான பேதாபேதமும் பார்க்காமல், அப்படியே தன் வயிற்றில் அடைத்துக்கொள்ளும் ஒரு சமதர்மவான் கவந்தன்.

அதனால்தான் சில ஊர்களில்,அவசர அவசரமாக அள்ளித் தின்பவர்களை, “ஏன்டா இப்படி கவந்தன் மாதிரி திங்கற?” என்று கேலி செய்வார்கள்.
எதைத் தின்னலாம்; எதைத் தின்னக்கூடாது என்று விவேகத்தோடு அறிந்து கொள்ளும் அறிவெல்லாம் கவந்தனுக்குக் கிடையாது; விவேகத்திற்கு இடமான மூளையே கிடையாது. அதனால்தானே விவேகம் இல்லாமல் செயல்படுபவர்களை, ‘மூளையில்லாதவன்’ என்கிறோம். இதற்கு முன் பார்த்த விராதனுக்கு மூளையிருந்தும் அதை, சூனியமாக்கிக் கொண்டவன் அவன். ஆனால் இந்தக் கவந்தனுக்கோ, மூளை சேட்டை செய்வதற்கு வழியே இல்லை.

மேலும் உணவை எடுத்து வாய்க்குள் போட்டால், அது கீழே இறங்கி வயிற்றுக்குத்தானே வர வேண்டியிருக்கிறது; கவந்தனுக்கு இந்தப் பிரச்னையே இல்லை; வயிற்றிலேயே வாயும் அமைந்திருப்பதால், அவன் அப்படியே கைகளால் வளைத்து வயிற்றில் அடைக்க வேண்டியதுதான். இப்படிப்பட்டவன் கைகளில்தான், ராம-லட்சுமணர்கள் அகப்பட்டார்கள்; கைகளில் அகப்பட்டவர்களை அப்படியே கவந்தன் வளைத்துச் சுருட்டும்போது, “இந்த மதிலுக்குள் எப்படி அகப்பட்டோம்?”என்பது, ராம-லட்சுமணர்களுக்கு முதலில் புரிய வில்லையாம்.

ஆனால் சற்று நெருங்குவதற்குள், கொடுமுடியில்லாத குன்று போலிருந்த குண்டனைக் கண்டதும், உற்று நோக்கினார்கள். வயிற்றின் நடுவில் வாய்; புகை கக்கும் மூக்கு; தீ ஜுவாலை போல ஜொலிக்கும் நாக்கு; பாதகமெல்லாம் திரண்டு ஓருருவம் கொண்டு வந்ததைப் போன்ற வடிவம்; எனப் பூதாகாரமாக இருந்த கவந்தனைக்கண்ட லட்சுமணர், “இது ஏதோ பூதம்போல இருக்கிறது”எனஎண்ணி, “அண்ணா! என்ன செய்யலாம் இப்போது?” எனக்கேட்டார்.

அவ்வழி இளையவன் அமர்ந்து நோக்கியே,
செவ்விய தொரு பெரும் பூதம் வில்வலாய்!
வவ்விய தன் கையின் வளைத்து வாய்ப்பெயும்;
செய்வதெண் இவண்? ‘எனச் செம்மல் சொல்லுவான்
(கம்ப ராமாயணம்)

லட்சுமணர் கேள்விக்கு ராமர் பதில் சொல்கிறார்; என்ன சொல்லியிருப்பார்?”தீயவர்களை அழிப்பதற்காக வந்த நாம், இந்த பூதத்தையும் அழிக்க வேண்டியது தான்” என்று சொல்லியிருப்பார்- என்று தானே நினைப்போம்? ஆனால் ராமர்அவ்வாறு சொல்லவில்லை.

“தம்பி! சீதை பிரிந்தாள்; ஜடாயு இறந்தார்; இவையெல்லாம் கொடும்பழியாகி உன் உள்ளத்தைத் துன்புறுத்த, இதற்கு மேலும் நான் வாழவிரும்ப வில்லை. இந்தப் பூதத்திற்குநான் இரையாவேன். இங்கிருந்து நீ போ!” என்றார் ராமர்.

தோகையும் பிரிந்தனள் எந்தை துஞ்சினான்
வேக வெம்பழி சுமந்து உழல வேண்டலேன்
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் !
ஏகுதி ஈண்டு நின்று இளவலே ! என்றான்
(கம்ப ராமாயணம்)

இவ்வாறு சொன்ன ராமருக்கு அதைத்தொடர்ந்து, மேலும் பல நிகழ்வுகள் வந்து மனதை வாட்டுகின்றன. அப்படியே சொல்கிறார்.
“என் வாழ்வே பழி மயமாகி விட்டது. பெற்றோர்கள், தம்பி பரதன், வசிஷ்டர் முதலான சான்றோர்கள் என எல்லோருக்கும், நான் ஒருவன் தோன்றி துயரம் விளைவித்து விட்டேன். நான் இறந்தால் இந்தப்பழியைத் துடைக்க முடியுமா?” என்றார்.

ஈன்றவர் இடர்பட எம்பி துன்புறச்
சான்றவர் துயருறப் பழிக்குச் சார்வுமாய்த்
தோன்றலின் என்னுயிர் துறந்த போது அலால்
ஊன்றிய பெரும்பழி துடைக்க ஒண்ணுமோ?
  (கம்ப ராமாயணம்)

பெற்றோர், தம்பி, குருநாதர் என நினைத்துப்பேசிய ராமரின் எண்ணம், ஜனகமன்னரையும் நினைக்கிறது. “ஜனகரே! நீங்கள் எனக்களித்த, இனிமையும் மென்மையுமாகப்பேசும் சீதாதேவி, இப்போது அரக்கர்களிடத்தில் இருக்கிறாள் என்று சொல்வேனா?” எனத் தன்னைத்தானே நொந்து கொள்கிறார் ராமர்.

இல் இயல்புடைய நீர் அளித்த இன்சொலாம்
வல்லி அவ்வரக்கர் தம் மனையுளாள் எனச்
சொல்லி நன் மலையெனச் சுமந்த தோள்மிசை
வில்லினென் செல்வனோ? மிதிலை வேந்தன்பால்
(கம்ப ராமாயணம்)

வில்லை வளைத்து, விதேக ராஜகுமாரியான சீதையை மணமுடித்த ராமர், தன் வில்லாற்றலையும் பழித்துக் கொள்கிறார். அதன்பின் ராமரின் துயரம் மிகவும் உச்சத்திற்குப் போய் விடுகிறது; “நான் இருப்பதை விட, இறப்பதே மேல்” என்கிறார்.

உளன் என உரைத்தலின் உம்பரான் எனவிளைதல்
நன்று ஆதலின் விளிதல் நன்று என்றான்

(கம்ப ராமாயணம்)

ராமர் இப்படிப் பேசலாமா? என்ற எண்ணம் எழுந்தால்... ராமர் தன்னை அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது. ராவண வதம் முடிந்து பிரம்மதேவர் முதலானோர் வந்து சொன்னபோதும், “நான் தசரதரின் பிள்ளை” என்றுதான் சொல்லியிருக்கிறார். ஒரு மனிதனைப் பிரச்னைகள் எவ்வாறு தாக்கும்? பிரச்னைகளில் ஆட்பட்டவன் எவ்வாறு செயல்படுவான்? பிரச்னைகளில் இருந்து விடுபட, எவ்வாறு செயல்பட வேண்டும்? - என்பவைகளையெல்லாம், வாயால் பாடம் சொல்வதைவிட - வாழ்ந்து காட்டியே பாடம் நடத்தியிருக்கிறார் ராமர். அதன் காரணமாகவே, கவந்தன் எனும் விசித்திரமான பெரும் அரக்கனின் பிடியில் அகப்பட்ட ராமர், ஒரு சாதாரண மனிதனின் துயரத்தை அப்படியே வெளிப்படுத்தினார்.

ஒருவர் துயரத்தில் இருக்கும் போது, அருகில் இருப்பவர் என்ன செய்ய வேண்டும்? இதோ! லட்சுமணன் செய்கிறார். பூதம் கொல்லப் பொன்றுதி போலும்; பொருளுண்டோ?
(கம்ப ராமாயணம்)

“ஒரு பூதம் போய், நம்மை அழிப்பதாவது! இந்த பூதத்தையெல்லாம் ஒரு பொருளாக மதிக்கலாமா?” என்ற லட்சுமணன், மேலும் தைரியமூட்டும் விதத்தில் பேசுகிறார்.“அண்ணா! வளைத்துக்கட்டும் இவன் கையையும்; எல்லாவற்றையும் அள்ளிக் கொட்டிக்கொள்ளும் இந்த வாயையும் வெட்டுகிறேன். பாருங்கள்! துயரத்தை நீக்குங்கள்!” என்றார் லட்சுமணன்.

பிணிக்கும் கையும் பெய்பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம்  துறவென்றான்
 (கம்பராமாயணம்)
இப்பாடல் வரிகளை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
லட்சுமணனின் தைரியம் அப்படியே தெரியும்.

துறக்க வேண்டியது துயரமே தவிர, உயிரல்ல என்பது லட்சுமணனின் வாக்கு. இவ்வாறு சொல்லி விட்டு லட்சுமணன் முன்னால் சென்றார். தம்பியைக் காப்பதற்காக, அவனுக்கு முன்னால் சென்றார் ராமர். “அண்ணனுக்கு முன்னால் போய் அரக்கனைக் கொல்லுவோம்”என்று லட்சுமணன் மறுபடியும் முன்னால் சென்றார்.

கவந்தன் பார்த்தான்; “என் வாயில் - வயிற்றில் விழுவதற்காகப் போட்டி போடும் நீங்கள் யார்?”என எகத்தாளமாகக் கேட்டான். அவனை உற்றுப் பார்த்தார்கள் ராம-லட்சுமணர்கள்.

உற்றுப்பார்த்த அவர்களைக் கண்டு கோபத்தில் கொதித்தெழுந்த கவந்தன், “உங்களை இப்போதே விழுங்குவேன்” எனக்கிளம்பினான். அதற்குள்ளாகக் கவந்தனின் தோள்கள் இரண்டையும் ராம-லட்சுமணர்கள் வெட்டித் தள்ளினார்கள்.

விழுங்குவேன் என ஓங்கலும் விண்ணுற, வீரர்
 எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார்
 (கம்பராமாயணம்)

கவந்தனைப் பார்த்ததும் ராம-லட்சுமணர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் பார்த்தோம்; கம்பரும் விரிவாகவே சொல்லியிருக்கிறார். ஆனால் எதிர்த்த பிரச்னையை ராம-லட்சுமணர்கள் இருவருமாகச் சேர்ந்து விரைவாக மிகவும் விரைவாக ஒழித்துக்கட்டி வெற்றி பெற்றார்கள் - என்பதை நமக்கு விளக்குவதற்காக, இரண்டே வரிகளில் கவந்தன் எழுந்ததையும்; அவனை ராம-லட்சுமணர்கள் கொன்றதையும் கம்பர் சொல்லியிருப்பது வியக்கத் தக்கதாக இருக்கிறது.

விசித்திரமான வடிவம் கொண்ட கவந்தனைப் போலவே; கொரோனா எனும் கொடியது எந்த விதமான பேதாபேதமும் பார்க்காமல், அனைவரையும் தன் கொடிய கரங்களால் மடக்கி-ஒடுக்கி-இடுக்கிப் பிடித்திருக்கிறது. ராம-லட்சுமணர்கள் ஒன்றாகச்சேர்ந்து, கவந்தனை ஒழித்து வெற்றி கண்ட தைப்போல, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘கொரோனா’எனும் அந்தக்கொடிய நோயைராம-லட்சுமணர்கள் அருளால் வெல்வோம்.

வாருங்கள்! ராம-லட்சுமணர்கள் வீழ்த்திய கவந்தனின் நிலையைப் பார்ப்போம்!ஏற்கனவே கொடூரமான வடிவத்துடன் இருந்த கவந்தன், கைகளை இழந்து கீழே விழுந்து உயிர் நீங்கிய அந்நிலையில் மேலும் கொடூரமான தோற்றத்துடன் இருந்தான். அதே விநாடியில், கவந்தனின் உடம்பில் இருந்து மிக அழகான வடிவம் ஒன்று வெளிப்பட்டு,ஆகாயத்தில் நின்றபடி ராமரைவணங்கித் துதித்தது.

விண்ணில் நின்றவன் விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன் எனக்கருத்துற உணர்ந்தான்
எண்ணி அன்னவன் குணங்களை வாய்
திறந்து இசைத்தான்

ஈன்றவனோ எப்பொருளும்? எல்லைதீர் நல்லறத்தின்
சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப்பயனோ?
ஒன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ?
தோன்றி இருவினையேன் சாபத்து இடர் துடைத்தாய்!
(கம்பராமாயணம்)

பல பாடல்களில், ராமரைப் பரம்பொருளாகவே துதித்த அவ்வடிவம், தன் வரலாற்றைக்கூறத் தொடங்கியது. (அது கூறியதன் சுருக்கம்) தனு என்னும் கந்தர்வன்; விளையாட்டுகளிலும் அடுத்தவர்களைக் கேலியாகப் பேசுவதிலும் கை தேர்ந்தவன். அவன் ஒருநாள், தூலசிரசு எனும் முனிவரிடம் கோரமான வடிவத்துடன் போய் அவரைப் பயமுறுத்திதன் வழக்கமான கேலியைச்செய்து, அவரை அவமானப்படுத்தினான். தனுவின் கேலியும் கிண்டலும் எல்லைமீறிப் போயின. பொறுத்துப் பார்த்த முனிவர் வேறு வழியின்றி சாபம் கொடுத்தார்; “கந்தர்வனாயினும் கொடூரமான வடிவம் கொண்ட நீ, இந்த வடிவத்துடனேயே அரக்கனாக ஆவாய்!” எனச் சாபம் இட்டார்.

அது போதாதென்று, தேவேந்திரனிடம் போய்த் தன் சேட்டைகளைக் காட்டிய  தனுவை, வஜ்ஜிராயுதத்தால் தேவேந்திரன் தலையில் அடிக்க,தனுவின்தலை அப்படியே வயிற்றில் இறங்கியது. வயிற்றில் வாய்கொண்ட அந்த வடிவம்தான் ‘கவந்தன்’.

இவ்வாறான தன் வரலாற்றைச் சொன்ன கவந்தன், “சாபவிமோசனம் தந்த பரம்பொருளே!” என்று வணங்கி விடை பெற்றான். செல்வம், அழகு, புகழ், திறமை என அனைத்தும் இருந்தும் நல்லோரை இகழ்ந்து அவர்களை அவமானப்படுத்தி, அரக்க வடிவம் பெற்றது கவந்தன் கதாபாத்திரம்.

(தொடரும்)

Tags : Epic Characters ,
× RELATED காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் அத்திரி முனிவர் - அனசூயை