×

ஒன்றிருக்க ஒன்றுரைத்தல் (பிறிதுமொழிதல் அணி)

குறளின் குரல்-124

சொல்ல வரும் கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல் கலைநயத்தோடு சொன்னால்தான் அது படிப்பவர் மனத்தில் ஆழப் பதியும். ஒரு கருத்தை உள்ளது உள்ளபடி நேரடியாகச் சொல்லும்போது அதில் இலக்கியம் எங்கே வரும்? அது வெறுமே கருத்தைத் தெரிவித்தல், அவ்வளவுதான். அதை யார் வேண்டுமானாலும் செய்யலாமே? அதற்கு இலக்கியவாதி எதற்கு?

இலக்கியம் படைப்பவன் கருத்துக்குத் தன் மொழியால் அழகு சேர்க்கிறான். கருத்தைச் சொல்வது மட்டுமல்ல அவன் நோக்கம். அதை சுவைபடச் சொல்வதே அவன் நோக்கம். அப்படி சுவைபடச் சொல்வதன் காரணமாகவே ஒரு நூல் இலக்கிய மதிப்பைப் பெறுகிறது. வள்ளுவம் காலத்தை வென்று நிற்கும் இலக்கியம். கருத்தால் மட்டுமல்ல, சொல்லும் முறையாலும்தான் அது காலத்தை வென்று நிற்கிறது.

ஒன்றைச் சொல்ல வரும் வள்ளுவர் அதைச் சொல்லவே சொல்லாமல் இன்னொன்றைச் சொல்கிறார்! ஆனால் அப்படி இன்னொன்றைச் சொல்வதன் மூலம் தான் சொல்ல வந்ததை அவர் சரியாகச் சொல்லிவிடுகிறார்! இது விந்தையாக இருக்கிறதல்லவா?

இந்த விந்தையைச் செய்ய உதவுவதுதான் தமிழ் இலக்கணம் சொல்லும் 'பிறிது மொழிதல் அணி'. தன் கருத்தைச் சொல்ல பிறிதுமொழிதல் அணியைப் பல இடங்களில் அழகாகப் பயன்படுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை.

இந்த அணியை நுவலா நுவற்சி என்றும் ஒட்டு என்றும் பரிமேலழகர் குறிப்பிடுகிறார்.கருதிய பொருள் தொகுத்து அது  புலப்படுத்தற்கு
ஒத்ததொன்று உரைப்பின் அஃது ஒட்டென மொழிப’
என பிறிதுமொழிதல் அணியாகிய இந்த ஒட்டணியை விளக்குகிறது தண்டியலங்கார நூற்பா. எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாகச் சொன்னால் அதற்கு அதிக மதிப்பிராது. அதைக் கேட்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மறைமுகமாகச் சொன்னால் என்ன சொல்கிறோம் என்று சிந்திப்பார்கள். அந்தச் சிந்தனையின் மூலம் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். அப்போது அவர்களே சிந்தித்துப் புரிந்துகொள்வதால் அந்தக் கருத்து அவர்கள் மனத்தில் உறைக்கும்....

*அதுசரி, பிறிது மொழிதல் அணி இப்போது நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறதா? கட்டாயம் இருக்கிறது. வலிமையோடு இருக்கிறது!
கணவன் சற்று ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறான். தன் சக்திக்கு மீறிய ஒரு பெரிய வீட்டை வாங்க முற்படுகிறான். மனைவி அவனுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். `பக்கத்து வீட்டுப் பணக்காரனைப்போல் உங்களை நினைத்துக் கொள்ளாதீர்கள், நம் வசதிக்குத் தகுந்த சிறிய வீடொன்றை வாங்கலாம், அதில் கடன் இல்லாமல் நிம்மதியாக வாழலாம், கடன் சுமை இல்லாமல் இருப்பதுதான் முக்கியம்’என்று சொல்ல எண்ணுகிறாள். அதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்கிறாள்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுங்களா? என்னவோ எனக்கு மனசில் பட்டதைச் சொல்றேன். பாத்து நடந்துக்குங்க!’ என்கிறாள்.
இப்போது கணவன் யோசிக்கிறான். குருவி வேறு. பருந்து வேறு. இரண்டுமே சந்தோஷமாகத்தான் வாழ்கின்றன. குருவி எப்போதும் குருவியாகவே இருந்தால் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.

பருந்தாக முயன்றால் மகிழ்ச்சி பறிபோய்விடும். மனைவி சொன்னதன் உண்மையை உணர்ந்த அவன், அவள் அறிவுரைப்படியே தங்களுக்கேற்ற சிறியதொரு வீட்டைத் தங்கள் பொருளாதாரத்திற்கு உள்பட்டு வாங்குகிறான். குருவியைப் பற்றியும் பருந்தைப் பற்றியும் பேசினாலும் தாரம் சொல்வது தங்களது பொருளாதாரம் பற்றி என்பது அவனுக்குப் புரிந்து விடுகிறது.

ஆனால் தமிழ் இலக்கணம் கொண்டாடும் 'பிறிது மொழிதல் அணி’யின்படிப் பேசியதால்தான் தனது கருத்து தன் கணவனுக்குப் புரிந்தது என்பதெல்லாம் மனைவிக்குத் தெரியாது. தமிழ்மொழியின் இலக்கணமும் இலக்கியமும் எல்லாத் தமிழர்களின் ரத்தத்திலும் இயல்பாகவே கலந்திருப்பதால்தான் மனைவியால் அப்படியெல்லாம் அழகாக புத்தி சொல்ல முடிகிறது....

திருவள்ளுவர் தம் கருத்தைச் சொல்லப் பிறிதுமொழிதல் அணியை நயமாகக் கையாள்கிறார். அவர் சொல்லாமல் சொல்லும் கருத்து என்ன என்பது அவர் சொல்லாமலே நமக்குப் புரிந்துவிடுகிறது.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.’ (குறள் எண் 475)

கனமில்லாத மயில் தோகைதான் என்றாலும் அளவுக்கதிகமாக அதை ஏற்றினால் கனம் தாங்காமல் வண்டியின் அச்சு முறிந்து விடும்.  இந்தக் குறள் சொல்வது உண்மையில் இந்தக் கருத்தை அல்ல. இந்தக் கருத்தைச் சொல்வதன் மூலம் இன்னொரு கருத்தைச் சொல்கிறது இது. இக்குறள் 'வலியறிதல்' என்ற அதிகாரத்தில் அமைந்துள்ளது. (அதிகாரம் 49). நாம் ஒரு செயலைச் செய்யும்போது, நம் வலிமை எந்த அளவு இருக்கிறது என்பதை அறிந்தே செயலை மேற்கொள்ள வேண்டும். அடுத்தவர்களிடம் செயலை ஒப்படைக்கும்போதும் அவர்களின் வலிமை எத்தகையது என்று உணர்ந்து அதற்கு உட்பட்ட செயல்களையே தரவேண்டும்.

நாம் நம் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் நம் சக்தி எவ்வளவு என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு வாரத்திற்கு நம் உடலுக்குத் தேவையான தண்ணீரை நாம் ஒரே நாளில் குடிக்க முடியாது. ஒருவேளை அது ஒட்டகத்தால் முடியலாம். நம்மால் முடியாது. ஒட்டகம் வேறு. நாம் வேறு. இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொண்டால் வாழ்க்கை இனிக்கும்.  

நமக்கு மருத்துவராகும் ஆசை இருந்தது என்பதற்காக நம் மகனை மருத்துவப் படிப்பில் சேர்த்துவிடக் கூடாது. அவனது மதிப்பெண், அவனது கற்றுக்கொள்ளும் திறன், அவனுடைய ஆர்வம் முதலியவற்றை வைத்தே முடிவெடுக்க வேண்டும். அவனது கல்வி கற்கும் வலிமை எவ்வளவு இருக்கிறது எனப் பார்த்து முடிவெடுப்பதுதான் அவன் எதிர்காலத்திற்கு நல்லது.

'நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.' (குறள் எண் 476)

மரத்தின் உச்சிக் கொம்பு வரை ஏறியவர் அதற்கு மேலும் ஏற முயன்றால் அந்தச் செயலே அவரது உயிருக்கு முடிவைத் தந்துவிடும். இப்படிச் சொல்வதன் மூலம் வள்ளுவர் உணர்த்தும் கருத்தென்ன? ஒருவன் தன்னைப் பற்றி அளவுக்கதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு எல்லை மீறிப் போனால் அதுவே அவருக்கு மாபெரும் வீழ்ச்சியாய் முடியும் என்பதுதான்.

'ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்.'  (குறள் எண் 763)

எலிகள் பல கூடிக் கடல்போல முழங்கி பகையைக் கக்கினாலும் என்ன பயன்? நாகம் மூச்சு விட்டால் போதும். எலிகள் ஒடுங்கி விடும். (அதுபோல் மனவலிமை இல்லாத எதிரிகள் எத்தனைபேர் கூடி நின்றாலும் மன வலிமை உள்ள வீரன் ஒருவன் முன்னர் அவர்கள் வீழ்ந்துவிடுவார்கள்.)

'கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.' (குறள் எண் 496)

வலிய சக்கரங்களை உடைய தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் நாவாய் நிலத்தில் ஓடாது. எனவே ஒவ்வொருவரும் அவரவரர் எந்தெந்த இடத்தில் வலிமை உடையவர் என்பதை அறிந்துகொண்டு இயங்க வேண்டும். தம்மால் இயங்க முடியாத இடங்களில் இயங்க நினைத்தால் தோல்வி நிச்சயம்.

'காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு' (குறள் எண் 500)

வீரர்களை அச்சமின்றிக் குத்திக் கொல்லும் தந்தத்தை உடைய யானை, கால்புதையும் சேற்று நிலத்தில் சிக்கிக் கொண்டால் அதைச் சிறிய நரிகூடக் கொன்று விடும். (எனவே நாம் வலிமையுடன் இயங்க இயலாத இடங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நம்மை எச்சரிக்கிறார் வள்ளுவர்.)

'இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.'

(குறள் எண் 879)

முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்டி விட வேண்டும். துன்பம் தரக்கூடியது என்று தெரிந்துகொண்ட பின்னும் அதை வளர விடுதல் சரியல்ல. இளையதாக இருக்கும்போதே வெட்டினால் முள்மரத்தை வெட்டுவோர்க்கு எந்தத் துன்பமும் விளையாது. மாறாக வளர்ந்த பின்னர் வெட்டினால் முதிர்ந்த அந்த முள் வெட்டக் கடினமாக இருப்பதோடு வெட்டுபவரையும் குத்தும்.பகைமையும் இப்படித்தான். தொடக்க நிலையிலேயே பகைவர்களை அழித்துவிடுவது நல்லது என அரசர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் வள்ளுவர்....

*பிறிதுமொழிதல் அணியில் அமைந்த ஒரு பழைய வெண்பா சோலையைப் பற்றிப் பேசுவதுபோல் வள்ளலைப் பற்றிப் பேசுகிறது.
உண்ணிலவு நீர்மைத்தாய் ஓவாப் பயன்சுரந்து தண்ணளி தாங்கு மலர்முகத்து
- கண்ணெகிழ்ந்து

 நீங்க அரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே
 ஓங்கியதோர் சோலை உளது!’
 
மேலோட்டமாகப் பார்க்கையில் ஒரு சோலையைப் பற்றிச் சொல்வதுபோல் தோற்றமளிக்கிறது இது. நிலவொளி வீசுகிறது. நல்ல பயன் தருகிறது. மலர் முகம் கொண்டது. நிழல் தருகிறது என்றெல்லாம் அடுக்குகிறார் புலவர். உண்மையில் அவர் சொல்ல வருவது என்ன? அந்தச் சோலையைப் போன்ற வள்ளல் ஒருவர் அவருக்கும் அவரைப் போன்ற புலவர்களுக்கும் நிழல்தர இருக்கிறார் என்பதே வெண்பாவின் உட்கருத்து.

அவ்வையாரின் நல்வழியில் பிறிதுமொழிதல் அணியில் அமைந்த அருமையான ஒரு வெண்பா உண்டு:
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம், வேழத்தில்
'பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது
- நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்!’

வெட்டும் கருவிகள் மெத்தென்றிருக்கும் பொருட்களை வெட்ட உதவாது. ஆண் யானையின் மீது ஊடுருவிச் செல்லும் ஈட்டி பஞ்சில் பாயாது. நீண்ட இரும்பாலான கடப்பாரைக்கு நெக்குவிடாத கல் பாறை, ஒரு பச்சை மரத்தின் வேருக்குக் கலகலத்துப் போகும்.

 இதுதான் வெண்பா சொல்லும் மேம்போக்கான கருத்து. ஆனால் அவ்வையார் சொல்ல வரும் உட்கருத்து என்ன தெரியுமா? மென்சொல்லை வன்சொல்லால் வெல்ல முடியாது, ஆனால் மென்சொல் வன்சொல்லை வென்றுவிடும் என்பதுதான்!....
  *பல திரைப்பாடல்களில் பிறிதுமொழிதல் அணியைக் காண முடிகிறது.

'அம்மம்மா தம்பி என்று நம்பி....' என `ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் டி.எம்.எஸ். குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடலில் பல வரிகள் பிறிதுமொழிதல் அணியைச் சார்ந்தவை.
'கண்ணில்  நீர்பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது,
அண்ணன் பட்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது'
என்ற இடத்தில் பேசப்படுவது பழைய ராமாயணக் கதை அல்ல. புதிய திரைப்படக் கதை.

'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் ஒலிக்கும் 'கேள்வியின் நாயகனே' என்ற கண்ணதாசன் பாடல் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வாணிஜெயராம், சசிரேகா குரல்களில் ஒலித்துப் பலரின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல். அந்தப் பாடலின் பல வரிகள் பிறிதுமொழிதல் அணியின் விளக்கம்தான்.

'பழனி மலையில் உள்ள வேல்முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா!
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா
- கொஞ்சம்

'பிரியத்துடன் பக்கத்திரு முருகா'

என்ற வரிகளில் கதாநாயகி பாடுவது கந்த புராணம் அல்ல. அந்தக் கதைப்படி அமைந்த அவளுடைய சொந்த புராணம். கண்ணதாசன் தாம் எழுதிய பல பாடல்களில் இதிகாசக் கதைகளை அழகாக இடையிடையே கொண்டுவந்து திரைக் கதையைச் சொல்லாமலே புரிய வைத்துவிடுகிறார். திரைக்கவிஞர்களில் பிறிது மொழிதல் அணியை அதிகம் கையாண்டவர் என்ற பெருமை கண்ணதாசனுக்கே உரியது. அவரது பக்தி மனம் எல்லாக் கதைகளிலும் இதிகாசக் கூறுகளைப் பொருத்திப் பார்த்ததே இதற்குக் காரணம்.

'நம் வீட்டில் அரிசியே இருக்கும்போது அடுத்தவன் வீட்டுத் தவிட்டுக்கு ஆசைப்பட்டானாம்!’ இந்த வாக்கியம்  என்ன சொல்கிறது என்று ஆச்சரியம் எழுகிறதா? இதுவும் பிறிதுமொழிதல் அணிதான்! `திருக்குறள் என்ற மாபெரும் இலக்கியச் செல்வமே நம்மிடம் இருக்கும்போது அதை முழுமையாகக் கற்காமல், அயல்மொழிகள் மேல் மோகம் கொண்டு அலைவானேன்?’என்பது இதன் பொருள்! புரிந்தால் நல்லது!

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Tags : translation team ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி