×

திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா?

தெளிவு பெறுஓம்

?லாக்டவுன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஆலயங்களில் உற்சவங்கள் எதுவும் நடைபெறவில்லை. பிரதி வருடம் விமரிசையாக நடைபெற்று வந்த திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா? இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி பொதுமக்களுக்கு
சிரமம்தானே அதிகரிக்கும்?
- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.


நிச்சயமாக இல்லை. உற்சவங்கள், திருவிழாக்கள் குறித்த உங்களின் புரிதல் தவறானது. முதலில் எந்த ஒரு ஆலயத்திலும் நித்யப்படி நடந்து வரும் பூஜைகளும் நைவேத்ய ஆராதனைகளும் நிறுத்தப்படவில்லை. அந்தந்த ஆலயங்களுக்கு உரிய ஆகம விதியின்படி பூஜைகள் முறையாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நோய்த்தொற்றின் காரணமாக அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. உற்சவங்களும், திருவிழாக்களும் பொதுமக்கள் தரிசிப்பதற்காகத்தான் நடத்தப்படுகின்றன.

ஊரடங்கு அமலில் இருக்கும்போது பொதுமக்கள் தரிசிப்பதற்கான வாய்ப்பு இல்லாததால் அவைகள் நடத்தப்படவில்லை. ஆலயங்கள் என்பது கூட்டுப் பிரார்த்தனைக்காகவும், இவ்வுலகில் வாழும் பொதுமக்கள் யாவரும் நலமுடன் வாழவேண்டும் என்ற பிரார்த்தனையை முன் வைப்பதற்காக மட்டுமே அமைக்கப்பட்டன. ஆலயத்தில் நடக்கும் பூஜைகளை சரிவரச் செய்து வர வேண்டியது அர்ச்சகர்களின் கடமையாக இருந்தது. திருவிழாக்கள் மற்றும் உற்சவங்களின் போது மட்டும் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்துவார்கள்.

ஸ்வாமி திருவீதி உலா வரவேண்டும் என்பதற்காக தனியாக உற்சவமூர்த்தி விக்கிரகங்கள் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டன. மூலவரிடம் இருந்து சாந்நித்தியத்தை மந்திரங்கள் மூலமாக இந்த உற்சவமூர்த்தி விக்கிரகங்களின்பால் கொண்டுவந்து அவற்றை வீதி உலாவிற்கு கொண்டுவருவார்கள். தீட்டு (கவனிக்கவும் தீண்டாமை அல்ல) முதலான பிரச்னைகளால் ஆலயத்திற்குள் வந்து தரிசிக்க இயலாதவர்கள் உற்சவத்தின் போது ஆலயத்தை விட்டு வெளியே வரும் இறைமூர்த்தங்களை தரிசனம் செய்வார்கள்.

ஒரு நாட்டை ஆளுகின்ற அரசன் தன் குடிமக்களைக் காண வேண்டி நகர்வலம் வருவது போல இவ்வுலகை ஆளும் பரம்பொருளும் தன் பிள்ளைகளைக் காணும்பொருட்டு இந்த திருவிழாக் காலங்களில் வீதி உலா வருவதாக எல்லோரும் கருதினார்கள். தங்கள் வீட்டு வாயிலுக்கே வரும் இறைவனை கண்குளிர தரிசித்து மகிழ்ந்தார்கள்.

அதுபோக, பிழைப்பு தேடி வெளியூர் சென்றவர்கள் யாவரும் திருவிழா சமயத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தங்கள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து சொந்தபந்தம், நண்பர்கள் என எல்லோருடனும் ஒன்றாகப் பழகி அந்த வருடத்தில் தங்களுக்கு உண்டான அனுபவங்கள் அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைப்பார்கள். அதோடு ஒவ்வொரு ஊரிலும் திருவிழாவிற்கு காப்பு கட்டிவிட்டால் அதன்பிறகு அந்த ஊருக்குள் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது, மேலும் காப்பு களையும் வரை உள்ளூரில் இருந்து யாரும் வெளியே செல்லவும் இயலாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தார்கள்.

இவ்விதமான கட்டுப்பாடுகளை ஏன் விதித்தார்கள் என்ற உண்மையை தற்போதுதான் நாம் உணரத் தொடங்கியிருக்கிறோம். திருவிழா என்றால் பெருங்கூட்டம் கூடும், வெளியூரில் இருந்து வரும் நபரால் உள்ளூரில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான நோய்த்தொற்றும் உண்டாகிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருந்தார்கள். அதே போல, திருவிழாவின் இறுதிநாளில் மஞ்சள்தண்ணீரை ஒருவர் மேல் ஒருவர் ஊற்றி விளையாடுவார்கள். திருவிழாவின்போது எவரேனும் ஒருவருக்கு தொற்று நோய் ஏதேனும் இருந்து அது மற்றவர்களுக்கு வந்திருந்தால் கூட இந்த மஞ்சள் நீரை மேலே ஊற்றுவதால் கிருமிகள் அழிந்துவிடும் என்று நம்பினார்கள்.

மஞ்சள் என்பது கிருமிநாசினி என்பதும் நாம் அறிந்ததே. ஆக, திருவிழாக்கள் மற்றும் ஆலய உற்சவங்கள் யாவும் பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகத்தான் நடத்தப்பட்டன. தற்போதைய சூழலில் அது சாத்தியப்படாது என்பதால் அவைகளை இந்த நேரத்தில் நடத்தாமல் இருப்பது என்று ஆலய நிர்வாகிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் எல்லா ஆலயங்களிலும் நித்தியப்படி நடக்க வேண்டிய பூஜைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து என்ற பிரார்த்தனையை முன்வைத்து உலக மக்கள் யாவரும் ஆரோக்யத்துடன் வாழ அர்ச்சகர்கள் பிரார்த்தனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். திருவிழாக்கள் நடக்காததால் கேடு வந்துவிடும் என்ற உங்களின் எண்ணம் முற்றிலும் தவறானது. இறைவனின் திருவருளால் நாம் எல்லோரும் எல்லா வளங்களையும் பெற்று ஆரோக்யத்துடன் வாழ்வோம் என்பதில் எந்தவிதமான
ஐயமும் தேவையில்லை.

?அன்னதானம் செய்பவர்கள் தானே முன்னின்று செய்ய வேண்டுமா அல்லது பணம் கொடுத்து விட்டால் போதுமா?
 - வண்ணை கணேசன், சென்னை.


உங்களுடைய வயிற்றுப் பசிக்கு ஹோட்டலுக்குச் சென்று பணம் கட்டிவிட்டால் போதுமா அல்லது உணவினை வாங்கி கையால் எடுத்துச் சாப்பிட வேண்டுமா? பணத்தை செலுத்துவதால் மட்டும் வயிறு நிறைந்துவிடுமா? உணவினை நம் கையால் எடுத்துச் சாப்பிட்டால்தான் வயிறு நிறைகிறது. அதுபோல அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் தங்கள் கைகளால் தாங்களே முன்னின்று செய்தால்தான்
அதற்குரிய முழுமையான பலனை அடைய முடியும். பணத்தைக் கட்டி அன்னதானத்தைச் செய்விப்பதால் புண்ணியம் என்பது வந்து சேரலாம். ஆனால் அதனைச் செய்பவர்கள் தாங்களே முன்னின்று செய்யும்போது தங்களுடைய மனதில் எல்லையற்ற ஆனந்தத்தை அடைய இயலும் என்பதே அனுபவ பூர்வமான உண்மை.

?ஈசனை மட்டும் அன்பே சிவம் என்று சொல்லி வழிபடுவதன் தாத்பர்யம் என்ன?
 - அயன்புரம் த. சத்தியநாராயணன்.


சிவம் என்ற வார்த்தைக்கு ஈசன் என்ற பொருள் மட்டும் கிடையாது. மங்களம், உயர்வு, களிப்பு, நன்மை, முக்தி, கடவுளின் அருவுருவ நிலை என்று பல்வேறு அர்த்தங்கள் அந்த வார்த்தைக்குள் உண்டு. ஈஸ்வரன் உருவமின்றி அருவுருவமாக லிங்கத் திருமேனியாக காட்சியளிப்பதால் அவரை சிவன் என்று அழைக்கிறார்கள். குணங்களிலே மிக உயர்ந்த குணம் அன்பு என்றும், இந்த அன்பினைக் கொண்ட மனிதனே கடவுளின் சாயலைக் கொண்டவன் என்றும் எல்லா மதங்களும் கூறுகின்றன.

எங்கெல்லாம் அன்பு வெளிப்படுகிறதோ, அங்கெல்லாம் இறைவனின் நிழல் படிகிறது என்கிறார் புத்தர். அவ்வளவு ஏன், சிவன், விநாயகர், முருகன், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி என்று எந்த தெய்வத்தின் அஷ்டோத்ர நாமாவளியை எடுத்துக் கொண்டாலும் அதில் ஓம் சிவாயை நம:  என்ற வார்த்தை இடம் பிடித்திருப்பதைக் காண இயலும். “சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாய விஷ்ணவே” என்ற மந்திரத்தை அடிக்கடி காதால் கேட்கிறோமே.. நாம் விஷ்ணு என்ற வார்த்தையைக் கேட்டதும் பெருமாளை மட்டும் நினைத்துக் கொள்கிறோம்.

விஷ்ணு என்ற பதத்திற்கு ஸர்வ வ்யாபின: அதாவது எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். எங்கும் நிறைந்திருக்கும் அன்புதான் கடவுளின் அருவுருவ நிலை, அதுவே முக்தியைத் தரக்கூடியது என்பதே நிஜம். ஆக அன்பே சிவம் என்ற வார்த்தைக்கு அன்புதான் நமக்கு உயர்வை அளிக்கக்கூடிய சக்தி, அந்த சக்தியே கடவுள் என்று பொருள் காணவேண்டும். அத்தகைய உயர்வான இறைசக்தியைக் குறிப்பிடுகின்ற பொதுவான வார்த்தையே சிவம் என்பதே உங்கள் கேள்விக்கான விளக்கம்.

?சுவாமிக்கு கற்பூர ஆராதனை காட்டும்போது நிறைய பேர் கண்களை மூடிக் கொள்கிறார்களே, இது சரியா?
 - மு. மதிவாணன், அரூர்.


அது சரியான முறை அல்ல. கற்பூர ஆராதனை காட்டுவதன் நோக்கமே அந்த ஜோதியின் ஒளியில் இறைவனின் திருமுகத்தைக் காணவேண்டும் என்பதே. இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உணர்த்தும் பொருட்டு சுவாமிக்கு கற்பூர ஆராதனை செய்கிறார்கள். அத்தகைய ஒளி வெள்ளத்தில் இறைவனின் திருமுகத்தை நம் கண்களால் கண்டு தரிசிக்க வேண்டும். கற்பூர ஆராதனையின் போது கண்களை மூடி வணங்கினால் அங்கே கற்பூரம் காட்டுவதன் நோக்கமே காணாமல் போய்விடும். சனியைத் தவிர மற்ற மூர்த்தங்களின் கண்களை நேருக்கு நேராக நம் கண்களால் கண்டு தரிசிப்பதே முழுமையான பலனைத் தரும்.

?ஒரு ஜாதகத்தில் கேது 12ம் வீட்டில் இருக்கும் யோகம் கிட்டிவிட்டால் அந்த நபருக்கு மறுபிறவி கிடையாது என்பது உண்மையா?
 - கொள்ளிடம் காமராஜ், திருச்சி.


நிச்சயமாக இல்லை. 12ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதை நாம் பெரும்பாலானோரின் ஜாதகத்தில் காணமுடியும். இவர்கள் எல்லோருக்கும் மறுபிறவி கிடையாது என்று சொல்ல முடியாது. சிறு வயதிலியே சந்யாச ஆஸ்ரமத்திற்குள் நுழைந்து தன்னலம் கருதாது இறைசேவையில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வீடுபேறு எனும் மோட்சம் கிட்டும். அவர்களுக்கு மட்டுமே மறுபிறவி என்பது கிடையாது. மற்றபடி தனக்கென சம்பாதித்து வைத்துக்கொள்பவன் யாராயிருந்தாலும் மறுபிறவியை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே சாஸ்திரம் சொல்லும் விதி.

?செவ்வாய் கிரகத்தை அங்காரகன் என்று சொல்வது ஏன்?
 - மல்லிகா அன்பழகன், சென்னை-78.


தணல் போன்ற நெருப்பினை உடைய கரித்துண்டினை அங்காரகன் என்று சொல்வார்கள். நெருப்பு கிரஹம் என்று செவ்வாயைக் குறிப்பிடுவதுண்டு. செந்நிறத்தோன் என்றும் சொல்வார்கள். செவ்வாய் கிரகம் எப்படி உருவானது என்பதற்கு ஒரு புராணக்கதையும் உண்டு. பரமேஸ்வரனுக்கும் அந்தகாசுரனுக்கும் இடையே யுத்தம் நடந்த காலத்தே சிவபெருமானின் வியர்வைத்துளி பூமியில் பட்டு பூமி இரண்டாகப் பிளந்தது என்றும், அதில் ஒரு பாகமானது அந்தகாசுரனின் ரத்தத்துளிகள் மொத்தத்தையும் விழுங்கிக் கொண்டது, ரத்தத்துளிகள் நிறைந்ததால் அது செந்நிறமாக காட்சியளிக்கிறது என்றும் அதனால் அந்த கிரகம் அங்காரகன் என்று பெயர் பெற்றது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பூமியில் இருந்து பிரிந்து சென்றதுதான் செவ்வாய் என்ற கதை புராணத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அதனை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்களின் விஞ்ஞான அறிவை என்னவென்று சொல்வது?

?தற்போது நிலவும் ஊரடங்கு நிலையால் பல திருமணங்கள் நடைபெறாமல் தடைபட்டிருக்கின்றன. இதனை அபசகுனமாகக் கருதலாமா?
 - சுரேஷ், தேனி.


கூடாது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் திருமணத்தை நடத்தக்கூடாது என்று அரசாங்கம் சொல்லவில்லை. ஆடம்பரத்தைத் தவிர்த்து எளிமையாக நடத்துங்கள் என்றுதான் அறிவுறுத்தினார்கள். முதலில் இதுபோன்று திருமணத்தை நடத்தாமல் நிறுத்தியதே தவறு. இந்த நேரத்தில் எத்தனையோ திருமணங்கள் எளிமையாக அவரவர் வீட்டிலும், ஆலயங்களிலும் நடத்தப்பட்டன என்பதையும் கண்டிருக்கிறோம். பெரும்பாலும் ஆடம்பரத்தை விரும்புகிறவர்கள் மட்டுமே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

தற்போது நிலவுகின்ற சூழல் என்பது உலகளாவிய பிரச்னை. எனவே, இதனை அபசகுனம் என்று கருதி திருமணத்தை நடத்தாமல் விட்டுவிடுவது தவறு. தள்ளிவைக்கப்பட்ட திருமணங்களை எத்தனை விரைவாக நடத்த முடியுமோ அத்தனை விரைவாக நடத்திமுடிப்பதே நல்லது. இதைத்தான் சாஸ்திரமும் வலியுறுத்துகிறது. இந்த சாக்கிலாவது வீண் ஆடம்பரங்களுக்கும் பகட்டுத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி செலவுகளை மிச்சப்படுத்துவதுடன் அந்த தொகையை பொதுச்சேவை போன்ற நல்ல பணிகளுக்குப் பயன்படுத்தினால் மணமக்கள் எல்லோருடைய ஆசிர்வாதத்தால் நீண்ட நெடுங்காலம் நல்லபடியாக வாழ்வார்கள் என்பதில் அணு அளவும் ஐயமுண்டோ?

Tags : festivals ,
× RELATED ஹோலி பண்டிகை கொண்டாட்டம்