×

திருமால் பெருமைக்கு நிகர் ஏது?

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

ஆக்க சக்திகளைக் காக்கவும், தீயவற்றை அழிக்கவும் அறச் செயல்களை நிலைநிறுத்தவும் யுகந்தோறும் என் தோற்றம் நிகழும்!மேற்கண்ட வாசகம் பகவத் கீதையில் பரந்தாமன் அருளிய புகழ் பெற்ற வாக்கு என்பதை நாம் அனைவருமே அறிவோம். கம்ப நாட்டாழ்வார் தன் இராமகாவியத்தில் மேற்கண்ட மொழியை இராவணனுக்கு அநுமன் கூறுவதாக ஒரு பாட்டில் இலக்கியச்சுவையை அற்புதமாகக் கூறியுள்ளார்.

அறம் தலைநிறுத்தி வேதம்  அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூண செந்நெறி செலுத்தி தீயோர்
இறந்துக நூறித் தக்கோர் இடர்துடைத்து ஏக ஈண்டு
பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பறுப்பான்.

பகவத் கீதை சுலோகத்தின் பைந்தமிழ் மொழி பெயர்பாகவே கம்பனின் கவிதை விளங்குகிறதல்லவா !
மகாவிஷ்ணுவை தசாவதார மூர்த்தி என்றே புராணம் புகழ்கின்றது. அவதாரம் என்றால் மேலிருந்து கீழே இறங்கி வருவது என்று பொருள்.
ஐந்து நிலைகளில் திருமால் திகழ்கின்றார்ஒன்று - பரம்

வைகுண்டத்தில் மந் நாராயணராக விளங்குவது திருப்பாவையில் ஆண்டாள் மார்கழித் திங்கள் என்று தொடங்கும் முதற்பாசுரத்தில் முகுந்தனின் முதல் நிலையை நாராயணனே நமக்கே பறைதருவான் என்று குறிப்பிடுகின்றாள். இரண்டாவது நிலை வியூகம் பாற்கடலில் பள்ளி கொள்ளுதல் திருப்பாவையின் இரண்டாவது பாசுரமான் வையத்து வாழ்வீர்கள்  பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் என்று பாடுகின்றது.

மூன்றாவது நிலை விபவம் அவதாரம் செய்து, ஓங்கி உலகளந்து உத்தமன் என்று திருப்பாவையின் மூன்றாவது பாசுரம் வாமன, விசுவரூப அவதாரத்தைப் போற்றுகின்றது. அனைத்திலும் மறைந்திருக்கும் நான்காவது நிலை அந்தர்யாமி இதை நான்காவது பாவைப் பாசுரம் ஆழிமழைக் கண்ணா விளக்குகின்றது.

வழிபடும் மூர்த்தியாக ஆலயங்களில் எழுந்தருள்வது அர்ச்சை என்னும் ஐந்தாவது நிலை. இதை மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் காட்டுகின்றது. திருமாலின் ஐந்து நிலைகளையும் திருப்பாவையின் முதல் ஐந்து பாடல்களும் சுட்டிக் காட்டுவது இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அல்லவா !

 காக்கும் கடவுளான கருணைதெய்வம் திருமால். நாம் அவர்மேல் அன்பு செலுத்துகிறோமோ, இல்லையோ பிள்ளைகளாகிய நம் மீது பேரன்பு வைத்தவர் நாராயணர். அதனால் தான் மீண்டும் மீண்டும் நம்மைக்காக்க அவரே அவதாரம் எடுத்து வருகின்றார்.

மொகலாய மன்னர் அக்பர் பற்றியும், அவர் மந்திரியான பீர்பால் பற்றியும் நாம் அனைவருமே அறிவோம். அவர்கள் இடையே நடந்த ஒரு அற்புத விவாதம் சுவையானது, ஒரு சமயம் பீர்பாலிடம் அக்பர் கேட்டார்.உங்கள் பகவான் எதற்காக ஒவ்வொரு சமயமும் தானே அவதாரம் எடுத்து பூமிக்கு வருகிறார். இந்திரன், சந்திரன், திக்பாலகர்கள், எல்லாம் அவருடைய உதவியாளர்கள் தானே ! அவர்களில் யாரையாவது ஒருவரை அனுப்பி வைக்க முடியாதா? அவரே வந்து காக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டார்.

அதற்கு பீர்பால் தாங்களின் கேள்விக்கு உரிய பதிலை வருகின்ற பௌர்ணமியன்று சொல்கின்றேன். அதுவரை பொறுத்தருள்க! என்றார்.
ஒவ்வொரு முழு நிலா நாளன்றும் அக்பர் தன் சிப்பந்திகளுடனும், பீர்பாலுடனும் யமுனை நதியில் படகில் உல்லாசமாகப் பயணம் செய்வது வழக்கம்.
பீர்பால் பதில் சொல்ல வேண்டிய பௌர்ணமி நாள் வந்தது.

அக்பரின் உல்லாச பௌர்ணமி உலா படகில் ஆரம்பமானது.சிப்பந்திகள் எல்லோரும் வந்தும் பீர்பாலைக் காணவில்லை.சரி, படகைக் கிளப்பலாம் என்று அக்பர் உத்தரவிட்டது தான் தாமதம் பீர்பாலின் குரல் கேட்டது.நில்லுங்கள் மாமன்னரே! தங்கள் மூன்று வயது மகன் தானும் படகில் வர வேண்டும் என்று அடம் பிடித்தான். அவனையும் தோளில் தூக்கி வந்துள்ளேன். அதனால் நேரம் சற்று கூடுதலாகிவிட்டது.பீர்பாலும் படகில் ஏற உல்லாச உலா மங்கிய சந்திர ஒளியில் மகிழ்ச்சியாகத் தொடங்கியது.

படகு ஓடத் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே தோளில் இருந்த குழந்தையை தொப் என்று பீர்பால் ஆற்றில் போட்டான்.அடுத்த நொடி அக்பர் தண்ணீரில் தாவிக்குதித்து குழந்தையைக் காப்பாற்றினார்.ஆனால் என்ன ஏமாற்றம்? அது குழந்தையே அல்ல. ஒரு குழந்தை பொம்மை. பீர்பால், இது என்ன வேண்டாத விபரீத விளையாட்டு, ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டார் அக்பர்.அதற்கு பிறகு பதில் சொல்கிறேன். சிப்பந்திகள் பலர் உடன் இருக்க அவர்களைக் காப்பாற்றச் சொல்லாமல் தாங்களே ஏன் ஆற்றில் குதித்தீர்கள்?என் குழந்தை அதனால்தான் நான் குதித்தேன்.

பகவானும் அப்படித்தான் அவதாரம் செய்கின்றார் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் அவரின் குழந்தைகள்.மகாவிஷ்ணுவின் அவதார மகிமையை மன்னர் புரிந்து கொள்ளும் விதத்தில் புலப்படுத்திவிட்டார் பீர்பால்!உலகின் பரிணாம வளர்ச்சி பத்து அவதாரங்களில் பொருந்தி உள்ளது.திருமாலின் அவதாரம் பத்திற்குள்ளே சிறந்தவொரு தொடர்புண்டு! முதலில் நீரில் பிறந்ததுவே உயிரினங்கள் என்பதற்குப் பேசுகின்ற சான்றாக மீன்! பின்னர், விரிந்த நிலம் நீர் இரண்டும் கூர்மம்!

இது மிகவும் மெதுவாய் நடக்குமாதலால் வேகம் கூட்டி விரைகின்ற வராகம்! பின்னர் விலங்கும் நாமும் விரவியதாய் நரசிம்மம்! அதற்குப் பின்னேவளர்ந்து வரும் நிலையிலுள்ள குள்ளமான வாமனமும்! அதன் பின்னே உடல் வளர்ந்து உளம் வளராச் சினம் கொண்ட பரசுராமர்! உளம் வளர்ந்த ஸ்ரீராமர்! ஞானத்தோடு வளர்ந்திணைந்த பலராமர்! ஞானம் தன்னை வழங்கவில்லை. ஆதலினால் கீதை சொன்னை தளர்வறியாக் கண்ணபிரான்! இனியோ கல்கி என்று தத்துவத்தின் தொடர்புகளை எண்ணிப் பார்ப்போம்!
 
உடைமைக்கு ஒரு முழுக்கு
உடையவனுக்கு ஒன்பது முழுக்கு
என்று ஒரு பழமொழி வழங்கி வருகிறது.
 
கிணற்றில் தவறி ஒரு வெள்ளிக்கிண்ணம் நீரில் மூழ்கிவிடுகிறது. அவ்வெள்ளிக் கிண்ணத்தை வெளிக் கொணர வேண்டுமானால் கிணற்று நீருக்குள் பலமுறை மூழ்கி தேடிப் பார்த்தால்தான் அக்கிண்ணத்தை மீண்டும் வெளியே எடுத்து வர முடியும். கிண்ணம் ஒருமுறைதான் நீரில் மூழ்கியது. ஆனால், அதை மீட்டெடுப்பதற்குப் பலமுறை மூழ்க வேண்டியுள்ளது. அப்படி இறைவனின் உடைமையான நாம் இந்த சம்சார சாகரத்தில் ஒருமுறை விழுந்து விட்டோம்.

ஆனால், உடையவனான எம்பெருமான் பலமுறை அவதாரம் செய்து நம்மைக் காப்பாற்றுகிறார். ஸ்வம் என்றால் உடைமை. ஸ்வாமி என்றால்
உடையவன்.  திருமங்கை ஆழ்வார் பகவான் எடுத்து பத்து அவதாரங்களையும் ஒரே பாடலில் பாடி உள்ளார். தினசரி அந்தப் பாசுரத்தைப் பாடி பெருமானின் பரிபூரணக் கருணைக்கு ஆளாவோம்.
 
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய்
முன்னும் இராமனாய்
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும்
ஆனான் தன்னை கண்ணபுரத்து அடியன்
கலியன் ஒலிசெய்த
தேனார் இன்சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே
 
 நலம் தரும் நாமம் நாராயணா என்று கண்டு கொள்வோம்! நாம் மட்டும் அல்ல! ஓரறிவு முதல் ஆறறிவு உயிர் வரை அவனே உறைந்துள்ளான்! அதனால்தான் கவியரசர் கண்ணதாசன் பாடுகின்றார்.
 
புல்லாங்குழல் தந்த மூங்கில்களே!- எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்!
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே ! எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்.

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags : Thirumal ,
× RELATED ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 25000 சேலைகள் பறிமுதல்