×

நீரை ஆளும் நாக தேவதைகள்

காஷ்மீரத்தின் பிரபலமான வரலாற்று ஆசிரியரும், புகழ்பெற்ற ராஜதரங்கிணி என்ற நூலை எழுதியவருமான ‘கல்ஹனர்’ என்பவர். காஷ்மீர் மலைச்சாரல்களில் மக்கள் நாகராஜாவை வணங்கி வந்ததையும், இந்த நாக தேவதைகள் அவர்கள் மனதில் ஏற்படுத்தி வைத்திருந்த பயபக்தி பற்றியும் விவரமாக கூறியிருக்கிறார்.நாகர்கள், நீர் நிலையங்களான ஏரிகள், குளங்கள் இவற்றின் அதிதேவதைகளாக மதிக்கப்பட்டனர். இவர்களை வணங்கி வருவதால் காலத்தில் மழை பெய்து.

பயிர்கள் வளருவது அமோகமாக இருக்கும் என்று நம்பினர். அதுவே, அவர்களின் கோபத்துக்கு ஆளானால் புயல், பயங்கர பனிமழை, அழிக்கும் வெள்ளம் இவைகளை உண்டாக்குவர் என்றும் பயந்தனர். இன்றளவும் ‘நாக்’ என்ற வார்த்தை காஷ்மீரத்தில் நதி மூலத்தையும், அருவிகளையும் குறிக்கும். நாகர்களுக்கு, கருடனின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பு கொடுத்த இடம் காஷ்மீரம் என்று நூலின் ஆரம்பத்தில் கல்ஹனர் குறிப்பிடுகிறார்.

கருடன், நாகர்களுக்கு ஜென்ம எதிரி என்பது தெரிந்ததே. இந்த நாகங்களுள் அதிகமாக சங்க, பத்ம அல்லது மஹா பத்ம வகை நாகங்கள் காஷ்மீர மலைச்சாரலில், மத்திய பிரதேசங்களில் உள்ள மிகப்பெரிய ஏரியின் மூல தேவதையாகும். இந்த ஏரி, மஹா பத்ம ஸரஸ் என்றும் பத்மாங்க ஸரஸ் என்றும் அழைக்கப்பட்டது. ஆயினும், ராஜதரங்கிணி ஆசிரியர் கல்ஹனர், இந்தப் பிரதேசத்தின் அதிதேவதையை பத்ம நாகம் என்று சொல்லவில்லை. அவருடைய கூற்றின்படி ‘நீலா’ என்ற நாகதேவதை, நீலகுண்டா என்ற இடத்தில் வாழ்ந்ததாகவும், ஜீவம் நதியின் மூலஸ்தானம் அதுவே என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்.

புத்த மதம் இந்த பிரதேசங்களில் பரவியபோது நாக தேவதைகளை வழிபடுவது கைவிடப்பட்டது. அதன் பலனாக, காஷ்மீரம் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகியது. மிகவும் கொடிய பனிமழை, அழிக்கும் பெருவெள்ளம், மற்ற இயற்கை உபாதைகள் நாட்டை நாசம் செய்தன என்று கல்ஹனர் கூறுகிறார். பண்டிட்கள் மற்றும் பூசாரிகள் சமூகத்தினர் தலையிட்டு, திரும்பவும் நாகராஜா பூஜைகளை செய்து, வணங்க ஆரம்பித்த பின்தான் இந்த துன்பங்களில் இருந்து விடுபட்டனர்.

இது சம்பந்தமான பிரபலமான கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு. இந்த மலைச்சாரல்களில் வசித்து. இதை நாசமாக்கிக் கொண்டிருந்த அசுரர்களை அழிக்க, காஸ்யபரின் வேண்டுகோளின்படி தேவர்கள் வந்தனர் இங்குள்ள ஏரிகளில் அசுரர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்த காலம் அது.
பலராமன், பகவான் விஷ்ணுவின் கட்டளைப்படி, இமாலய மலையை தன் கலப்பையால் பிளந்து, இந்தப் பிரதேசம் முழுவதும் தண்ணீரை வடிய விட்டு, உலரச்செய்தார். வீரநாக் என்று சொல்லப்பட்ட அந்த நாக அசுரன், பின்னால் பலராமனால் அழிக்கப்பட்டான். பூமிக்கு அடியில் குகையில் நாகராஜா வசிப்பதாக, இன்றும் காஷ்மீர மக்கள் நம்புகின்றனர்.

நாகதேவதையின் மாளிகை, காஷ்மீர தேசத்தின் பூமிக்கடியில் இருப்பதாகவும், இங்கிருந்துதான் மிகச் சிறந்த பக்தரும், பிராமணருமான சந்த்ர தேவன், ஆறு மாதங்கள், கடும் பனிக்காலத்தில் வசித்து. காஷ்மீர மக்கள் அனுசரிக்க வேண்டிய நியமங்களையும், பழக்க வழக்கங்கள் பற்றியும் கற்றுகொண்டார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பிற்காலங்களில் புனித அருவியான ‘நீலா’ வீரநாகமாக எண்ணித் தொழப்பட்டது.

முகம்மதிய வரலாற்று ஆசிரியரான அபுல் ஃபாசல் சொல்கிறார். இந்த வீர வழியில் தான் பீஹத் அல்லது (விடாஸ்தா என்று சொல்லப்படும் ஜீலம்) மூலஸ்தானம் அல்லது உற்பத்தி ஸ்தானம் உள்ளது. இதில் நுரை பொங்கி வரும்போது பயங்கரமான சத்தம் உண்டாகும். இதனுடைய ஆழமோ அளவிட முடியாதது. இதன் பெயர் ‘வீர நாக்’. இதன் இரண்டு கரைகளும் கற்களால் ஆனது. இதன் கிழக்குக்கரையில் கற்கோயில்கள் இருக்கின்றன என்கிறார். காஷ்மீரில் உள்ள ‘அனந்தநாக்’ என்ற பெயர் அனந்தன் அல்லது சேஷன் என்ற நாகராஜாவின் பெயர் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த
நகரத்தின் தென் கோடியில் உள்ள ஒரு அருவிதான் அனந்தனின் இருப்பிடம் என்கிறார்கள்.

நாகராஜாவான தட்சகனும், காஷ்மீர் தேசத்தில் வணங்கப்பட்டவர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. மஹாபாரதத்தின் தீர்த்த யாத்ரா பர்வம், அதாவது புனித யாத்திரையில் செல்லவேண்டிய மிக முக்கியமான இடங்களைப் பற்றி வர்ணிக்கும்போது, விடாஸ்தா (ஜீவா) நதி, தட்சகனுடைய வாசஸ்தலமாக
சொல்லப்பட்டுள்ளது.கல்ஹணரோ, காஷ்மீர தேசத்தில் நாகராஜாவான தட்சகனுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடை
பெறும் திருவிழாவைப் பற்றி குறிப்பிடுகிறார்.

நடனம் ஆடுபவர்களும், அங்கப் பிரதட்சணம் செய்பவர்களும், கூட்டம் கூட்டமாக பார்வையிட வந்த பொதுமக்களுமாக, இந்த (உற்சவம்) திருவிழா, கோடை காலத்தில் ஆரம்ப மாதமான  ‘ஜ்யேஷ்டா’ (சித்திரை) மாதத்தின் கிருஷ்ணபட்ச த்வாதசியன்று கொண்டாடப்படுகிறது.

சம்ஸ்க்ருத இலக்கியங்களில் தேவதாரு என்ற வகை மரத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்த மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 6,000 அடி முதல் 10,000 அடி வரை உயரம் உள்ள பிரதேசங்களில் வளரும், இமாசல மலைப்பிரதேசங்களின் இந்த வகை மரங்கள் தியோதர் (தேவதாரு) அல்லது சேதார் என்று அழைக்கப்படுகிறது.

இமாசலபிரதேசத்தின், கிராமங்களுக்கு அருகிலேயே, அடர்ந்த தேவதாரு மரங்களுக்கிடையில் நாகராஜாவுக்கான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அனேகமாக இந்த கோயில்கள், ஏரிகள் அல்லது நீர் அருவிகளோடு சம்பந்தப்பட்டிருக்கும். தங்களுக்கிடையில் வசிக்கும் தேவதைகளின் சொத்து என்று எண்ணி, இங்குள்ள மரங்களை, இப்பகுதியினர் வெட்டுவதில்லை.

நாகராஜாவிற்கான கோயில் கட்டுவது மிகவும் சுலபம், கனமாக மரங்களாலான அடிப்பாகத்தின் மேல், பாறைக்கற்களும், மரச்சட்டங்களும் உபயோகித்து, ஒரு சிறிய சதுர அறை கட்டப்படுகிறது. இதன்மேல் தாழ்வான அல்லது கூம்பு வடிவிலான கூரை வேயப்படுகிறது. இதைத்தாங்க மரத்தாலான தூண்கள் மூலம் நான்கு புறமும் பிராகாரம் அமைக்கப்படுகிறது. அவ்வளவே, இந்த வகை கோயில்கள், நாக தேவதைகளுக்கும், தேவி உபாசகர்களுக்கும் பொதுவானவை, இமாசல பிரதேசத்தின், மிகப் பழமையான கோயில் கட்டட கலாசாரத்தை பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ளன.

வாயிற்கதவைச் சுற்றியுள்ள மரச் சட்டங்களில் கண்ணுக்கினிய பாம்பு உருவ சித்திரங்கள் செதுக்கப்பட்டிருப்பதும் பொதுவானது. பஞ்சாப் மாநிலத்தில் உயிருள்ள பாம்புகளையே வணங்கும் வழக்கம். சிறந்த போர்வீரரான அலெக்ஸாண்டர் வந்தபோது கூட இருந்திருக்கிறது. பிரபலமான பக்தி பாடல்களிலும், நாட்டுப் புறபாடல்களிலும் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.

குருதாஸ்பூர் என்னுமிடத்தில், ஆண்டுதோறும் ஸ்ராவண (ஆவணி) மாதத்தில் ஒரு பண்டிகை வரும். கிராமத்துப் பெண்கள் ஒன்றாக சேர்ந்து குளம், அருவி ஏதோ ஒரு நீர் நிலைக்குச் சென்று பாடி, ஆடி, ஊஞ்சல் ஆடி மகிழ்ந்த பின், கையில் எடுத்துச்சென்ற தித்திப்பு ரொட்டியை உண்டு மகிழ்வர். மழைக்காலத்தின் ஆரம்பத்தில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையும், நாகராஜா வழிபாட்டின் காரணமாகத்தான் ஆரம்பித்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொகுப்பு: இ.எஸ். இந்துஜா

நன்றி: இந்தியாவில் நாக வழிபாடு

Tags :
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?