×

பட்சிகளுக்கு அன்னமிடுங்கள்

?என் குடும்பத்திற்கு ஏதேனும் செய்வினையா அல்லது வேறு சஞ்சலமா என்பது தெரியவில்லை. இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று பேருக்கும் திருமணம் நடக்கவில்லை. பிள்ளை வீட்டார் வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள். மறுபடியும் வருவதில்லை. எத்தனையோ பரிகாரம் செய்தும் பலன் இல்லை. தினகரன் படித்துவிட்டு தீர்வு வேண்டி கடிதம் எழுதுகிறேன்.
- துரைஸ்வாமி, வேலூர்.

உங்கள் கடிதத்தில் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய பிறந்த தேதி மற்றும் நட்சத்தித்தைக் குறிப்பிட்டுள்ளீர்கள். பிறந்த நேரத்தை எழுதவில்லை. யாருடைய ஜாதகத்தினையும் இணைக்கவில்லை. பிறந்த நேரம் இல்லாமல் ஜாதகத்தை கணிக்க இயலாது. உங்கள் மனைவியும் மகனும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்திருப்பதாகவும் மற்ற இரண்டு மகள்களும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களை வைத்து ஆராயும் போது செய்வினை ஏதுமில்லை என்பது தெளிவாகிறது. வீட்டினில் லட்சுமி கடாக்ஷம் என்பது குறைந்து வருவதாகத் தெரிகிறது. லட்சுமி கடாக்ஷம் என்றால் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, நிம்மதியும் சந்தோஷமும் எங்கே நிறைந்திருக்கிறதோ அதுவே பூர்ணமான அருள் ஆகும். குடும்பத்தில் முன்னோர்கள் செய்த பாவத்தின் விளைவாகவும் இது போன்ற பிரச்னைகள் உருவாவது உண்டு. குடியிருக்கும் வீட்டினை மாற்றிப் பாருங்கள். வெள்ளிக்கிழமை தோறும் உங்களால் இயன்ற அளவிற்கு முழுமனதுடன் அன்னதானம் செய்து வாருங்கள். உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கணியம்பாடி வனதுர்கை அம்மன் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை தோறும் சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கித் தந்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் வனதுர்கையை மனதில் தியானித்து கீழ்க்கண்ட மந்திரத்தை 18 முறை சொல்லி வணங்கி வாருங்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கக் காண்பீர்கள்.
“துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே...”

?நாங்கள் மிகவும் வறுமையில் வாடி வதங்கி உள்ளோம். தந்தைக்கு சரி வர வேலையில்லை. தாயாருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. அக்காவின் திருமணத்திற்கு வாங்கிய கடனை கட்ட இயலாமல் அவமானப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நான் எம்.எஸ்.சி., படித்துள்ளேன். வேலைக்காக நிறைய பரிட்சை எழுதி வருகிறேன். இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை. என் குடும்பம் முன்னேற வழி சொல்லுங்கள்.
- வித்யா, ஆவடி.

பெண் பிள்ளையாக இருந்தாலும் ஆண் பிள்ளைக்கு சமமாக குடும்ப பொறுப்புகளைச் சுமக்க நினைக்கும் உங்கள் முயற்சிக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசை முடிவுறும் தருவாயில் உள்ளது. உங்களுடைய ஜாதக பலத்தின்படி நிச்சயமாக அரசு வேலை அல்லது அதற்கு இணையான நிரந்தர வேலையை வரும் வருடத்தில் பெற்று விடுவீர்கள். உங்கள் ஜாதகக் கணக்கின்படி 14.08.2021 வாக்கில் நிரந்தர வேலையில் அமர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதுவரை வேறு ஏதேனும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு முயற்சியுங்கள். அரசு வேலை கிடைக்கும் வரை சும்மா இருக்காமல் வேறு வேலைக்குச் செல்வதால் மனதளவில் தைரியம் பெருகுவதோடு அனுபவ அறிவு என்பதும் கிடைக்கும். மனோ தைரியமும் அனுபவ அறிவும் ஒன்றாக இணையும் போது எதிர்காலம் என்பதும் பிரகாசமாக அமைந்துவிடும். உங்கள் ஜாதக பலத்தின்படி நிச்சயமாக உயர்ந்த உத்யோகம் கிடைப்பதோடு எதிர்காலமும் சிறப்பாக அமையும். ஆண் பிள்ளைக்குச் சமமாக இருந்து பெற்றோரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள முருகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதை வாழ்நாள் முழுவதும் வழக்கத்தில் கொள்ளுங்கள். தினமும் காலையில் கீழ்க்கண்ட துதியினைச் சொல்லி முருகப் பெருமானை வணங்கி வர உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறக் காண்பீர்கள்.

“இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளரறு முகச்சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க”

?31 வயதாகும் என் மகன் காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டாள். அதனால் என் மகன் மிகவும் மன வேதனையுடன் உள்ளான். எல்லாவற்றையும் பறிகொடுத்தது போல் எதிலும் ஈடுபாடு இன்றி இருக்கிறான். தொழிலில் கவனம் செலுத்துவது இல்லை. அவன் நல்ல நிலைக்கு வரவும் அவனது திருமணம் நல்லபடியாக நடக்கவும் உரிய பரிகாரம் கூறுங்கள்.
- சென்னை வாசகர்.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சனி எட்டாம் வீட்டில் கேதுவின் சாரம் பெற்று அமர்ந்துள்ளதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி செவ்வாயும் எட்டாம் வீட்டில் சனியுடன் இணைந்து அமர்ந்துள்ளதால் இந்த நேரத்தில் இதுபோன்ற சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். எனினும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி சனியே என்பதாலும், ஜீவன ஸ்தானத்தில் புதன் மற்றும் ராகுவின் இணைவும் தொழில்முறையில் உழைப்பால் உயர்வதற்கான வாய்ப்புகளை உண்டாக்கித் தருகின்றன. உள்ளூரில் இவரது வாழ்வு அமையாது என்பதால் இருக்கும் ஊரை விட்டு தொலைதூரத்திற்கு மாறிச் செல்வது என்பது நல்லது. புதியதொரு ஊரில் அவர் தனது செய்தொழிலை அமைத்துக் கொண்டால் வாழ்வு என்பது சிறப்பாக அமையும். அந்தப் பெண் பற்றிய சிந்தனையும் மெதுவாக மனதில் இருந்து அகன்றுவிடும். சதா அலைந்து திரிந்து வியாபாரம் செய்ய வேண்டிய தொழில் இவருக்கு அமையும். செய்தொழிலில் உண்டாகும் பற்று மற்ற கவலைகளை மறக்கச் செய்துவிடும். கிறித்துவ மதத்தைச் சார்ந்த நீங்கள் சனிக்கிழமை தோறும் ஆதரவற்ற நிலையில் உள்ளோருக்கு அன்னதானம் செய்துவர சனியின் அருளால் உங்கள் மகனின் வாழ்வினில் நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள்.

?நான் நெல் அரிசி வியாபாரம் செய்து வந்தேன். கூடவே ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்து வந்தேன். ஆன்மிக ஈடுபாடும் அதிகம். அடிக்கடி அன்னதானம் செய்வேன். வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகி நிலத்தை விற்றுவிட்டேன். தற்போது ரேஷன் அரிசி வாங்கி உட்கொண்டு குடும்ப செலவிற்கே பணமின்றி கஷ்டப்பட்டு வருகிறேன். இரண்டு மகன்களும் எந்தப் பொறுப்புமின்றி உள்ளார்கள். உரிய வழி சொல்லுங்கள்.
- திருவண்ணாமலை மாவட்ட வாசகர்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசை முடிவுறும் தருவாயில் உள்ளது. ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் பிறந்திருக்கும் மூத்த மகனின் ஜாதகமும் பூராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் பிறந்திருக்கும் இளைய மகனின் ஜாதகமும் நன்றாகவே உள்ளன. நன்றாக சம்பாதிக்கும் திறமை கொண்ட மூத்த மகன் குடிக்கு அடிமையாகி இருப்பதும் நன்கு படித்திருக்கும் இளைய மகன் வேலைக்குப் போகாமல் பொழுதினைக் கழிப்பதும் அவர்களுடைய ஜாதக அமைப்பினால் அல்ல. கிரக நிலைகள் நன்றாக இருந்தாலும் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலைக்கு வந்திருப்பதன் காரணம் புரியாமல் தவித்து வருகிறீர்கள். உங்கள் மூவரின் ஜாதகங்களை ஆராய்ந்ததில் குரு சாபம் என்பது பரம்பரையைத் தாக்கியிருப்பதுபோல் தோன்றுகிறது. குரு, ஆச்சாரியன் அல்லது மடாதிபதி முதலானோரிடம் உங்கள் முன்னோர் பெற்ற சாபம் பரம்பரையில் தாக்கத்தினை உண்டாக்கியிருப்பது தெளிவாகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது 21.09.2020 முதல் தொடங்க உள்ள குரு தசை நல்லதொரு மாற்றத்தினை குடும்பத்தில் உண்டாக்கும். குரு மகான்களாக நீங்கள் நினைப்பவர்களை மானசீகமாக வணங்கி வாருங்கள். திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகியவற்றிற்குச் சென்று ஒரு மூலையில் அமர்ந்து மனதினை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யுங்கள். உங்களது இரு மகன்களையும் உடன் வருமாறு வற்புறுத்தி அழைத்துச் செல்லுங்கள். வாரந்தோறும் வியாழக்கிழமை நாட்களில் செல்வது நல்லது. தொடர்ந்து 16 வாரங்கள் குரு மகான்களை தரிசித்து பிரார்த்தனை செய்து வருவதன் மூலம் பிள்ளைகளின் வாழ்வினில் மறுமலர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். குருவருள் மட்டுமே உங்களுக்கு திருவருளைப் பெற்றுத் தரும் என்பதே உங்கள் பிரச்னைக்கான பரிகாரமாக அமைந்திருக்கிறது.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி