×

மோர் விற்ற பெண்ணுக்கு மோட்சம் கொடுத்த பெருமாள்

திருப்பதி மலையின் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது
‘‘மோரும்மா மோரு…சாமி.. மோரு…’’ என கூக்குரலிட்டவாறு ஒரு இடைக்குலப் பெண் அவ்வழியே தலையில் மோர்ப்பானை சுமந்தபடி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் அருந்த வேண்டும் என எண்ணம் தோன்றியது. இருப்பினும், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர் அருந்தும் ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். இருந்தாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் சில சீடர்கள்.

இந்த நிலையில் மோர் விற்கும் பெண்ணோ... அங்கே கூட்டமாக இருக்கிறார்களே, அங்கே சென்றால் கண்டிப்பாக மோர் விற்கும். பாரம் குறையும் என்று முடிவு செய்து, ராமானுஜரும், சீடர்களும் இருக்கும் இடம் நோக்கி வருகிறாள். ‘‘ஐயா… சாமி… ருசியான மோர், அதோடு கறிவேப்பிலை, இஞ்சி போட்டு கொண்டு வந்திருக்கேன். தாகம் தீர்க்கும், பசியாற்றும், சூட்டை தணிக்கும். ஆளுக்கு ஒரு குவளை குடிச்சீங்கன்னா, தெம்பா இருக்கும். உஷ்ணம் ஓடியே போயிடும்’’ என்று சொன்னபடி, மோர் பானையைக் கீழே இறக்கி வைத்தாள். ஏற்கெனவே பசியிலும், அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர் பானையைப் பார்த்ததும் ஆர்வம் அதிகரித்து ஆளாளுக்கு, எனக்கு தாங்க… எனக்கு கொடுங்க என்று கேட்டு வாங்கிக் குடித்தனர்.

மோரின் தரம் அப்படி இருந்தது. எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும், பானையின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள் மோர்க்காரப் பெண். ஓரளவு பானை காலியாக இருந்தது. நிறைந்த மனதுடன் சீடர்களையும், ராமானுஜரையும் பார்த்தாள். ராமானுஜரும் பார்த்தார். அப்போது அந்தப் பெண்ணைப் பார்த்து, “அம்மா… மோருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?” என்று கேட்டார் ராமானுஜர். அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சாமி. மோருக்குக் காசெல்லாம் வேணாம்…
‘‘அதை வெச்சிட்டு நான் என்ன பண்ணப்போறேன்?...’’ என்று இழுத்தாள். ‘‘அப்படீன்னா காசுக்குப் பதிலா ஏதாவது பொருள் வேணுமா?’’என்று கேட்டார் சீடர் ஒருவர்.ராமானுஜரை இரு கரம் கூப்பி வணங்கிய மோர்க்காரப்பெண், “எனக்குக் காசும் வேணாம்… பொருளும் வேணாம் சாமி. வாழ்ந்தது போதும். வைகுண்டம் போணும். மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. சந்தோஷமா போயிடுவேன்” என்றாள். ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

ஆசார நியமங்களோ, சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள், ‘‘மோட்சம் வேண்டும்’’ என்கிற ஆசை தோன்றியது விந்தைதானே! இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “கவலைப்படாதம்மா… உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். சந்தோஷமா போயிட்டு வா” என்றார் அவர். ஆனால், அந்தப் பெண்மணி விடவில்லை. “உங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமி. ஆனா, அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் போய்ச் சேர்றேன்” என்றாள். ராமானுஜர் சிரித்தார்.

“அம்மா… நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு வழியைக் காட்டுவதற்கு உண்டான தகுதி, எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சிஷ்யர்களுக்கோ இல்லை.
மேலே திருமலையில் இருக்கின்றானே ஒருவன்… ஏழுமலைக்குச் சொந்தக்காரன்… அவன்கிட்டப் போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத் தான் உண்டு” என்றார். “சாமி… மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும் மோட்சம் வேணும்’னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா, அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் தொறந்து பேசக்கூட மாட்டேங்கிறாரே…” என்றாள்.

“அப்படி இல்லம்மா… உன் மனசுல படுறதை  நீ கேக்கணும்னு நினைக்கறதை அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இரு. என்றாவது ஒருநாள் நிச்சயம் உன் குரலுக்கு செவி சாய்ப்பார்” என்றார் ராமானுஜர். மீண்டும் தொடர்ந்தாள். “சாமீ… எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செஞ்சு நீங்கதான் ஒரு ஓலை எழுதித் தரணும். உங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா, பெருமாள் எனக்குப் பதில் சொல்லுவாருன்னு தோணுது” என்றாள். அந்தப் பெண்ணை திருப்தி படுத்தும் விதமாகவும், மறுத்தால் அவள் அவ்விடம் விட்டு அகல மாட்டாள் எனத்தெரிந்தும் ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலையும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார்.

அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தனர். திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து, குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா… இல்லை அந்தப் பெண்மணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி, ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து, சீடர்கள் கவனிக்கலானார்கள். ராமானுஜர், மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு, ஓலையில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ‘ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், திருமலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, ‘‘மோர் விற்கும் இந்த கோசலை என்ற பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய்’’ என எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டு அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் ராமானுஜர்.

ஓலையில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண், ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி, பெருமாள் சந்நதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். மோர்க்காரப் பெண்ணைப் பார்த்து, இது என்ன ஓலை? என்று கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள். ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாள் பாதத்தில் வைக்க முற்பட்டனர். அப்போது தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள்.
ஓலையைப்பார்த்தார், உனக்கு மோட்சம் தந்தேன் என்று மோர்க்காரியைப் பார்த்துப் பெருமாள் திருவாய் மலர்ந்தார்.

அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர். மோர்க்காரியைத் தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுண்டம் புறப்பட்டனர். மோர் விற்கும் பெண் எப்படி ராமானுஜர் மீது நம்பிக்கைக் கொண்டு ஓலை வாங்கிச் சென்றாளோ அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் வேங்கடவன் அருள்புரிந்தான். எனவே வணங்குகிற தெய்வத்தின் மீது தீவிர நம்பிக்கை கொள்ளுங்கள். நிச்சயம் அந்த நம்பிக்கை
பலனளிக்கும்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags : Perumal ,
× RELATED பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு