×

மாமதுரையில் ஆவணி மூலப் பெருவிழா : பிட்டுக்கு மண் சுமந்தலீலை

29.8.2020

தினமொரு திருவிழா காணும் மாநகரம் மதுரை. மங்களம் அருளும் தூங்கா விழிகள் கொண்ட மங்கை, மீனாட்சியம்மன் அருளாட்சி புரிவதுதான். இந்த மதுரையில் தான் சிவபெருமான் 64 திருவிளையாடல்களை நடத்தி முடித்திருக்கிறார். இதில் அதிமுக்கிய  10 திருவிளையாடல்கள் ‘ஆவணி மூலப்பெருவிழா’வில் அரங்கேற்றப்படுகிறது. இத்திருவிளையாடல்களில் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ அதி அற்புதமானது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 15ல் துவங்கிய ஆவணி மூலப் பெருவிழா, செப்டம்பர் 1ல் நிறைவடைகிறது. ஆக.20 வரை சந்திரசேகரர் புறப்பாடு கோயிலுக்குள் சுவாமி சந்நதி 2ம் பிராகாரத்திலும், ஆக.21ம் தேதி முதல், செப்.1 வரையிலும் ஆவணி மூலத்திருவிழாவாகவும் நடத்தப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட். 28ல் - நரியை பரியாக்கிய வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட். 29 சனிக்கிழமை அன்று - பிட்டுக்கு மண் சுமக்கும் வைபவம் நடைபெறுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மீனாட்சி கோயிலின் சித்திரைப் பெருவிழாவைப் போலவே, இந்த ஆவணி மூலத்திருவிழா கொண்டாட்டமும் தடை கண்டுள்ளது. இருப்பினும் கோயிலுக்குள்ளேயே இந்த வைபவங்கள் நடக்கிறது. சித்திரை மாதத்தில் நடக்கும் பெருவிழாவில் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி, மீனாட்சியம்மன் ஆட்சி 4 மாதங்கள் தொடரும் என்பது ஐதீகம். இதனைத்தொடர்ந்து, ஆவணி மாதத்தின் இந்த ஆவணி மூலத் திருவிழாவில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடத்தி, 8 மாதங்களுக்கு சுவாமி ஆட்சி புரியும் ஐதீகமும் இருக்கிறது. ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமான் நடத்தியதில் 10 திருவிளையாடல்களில் 9ம் திருவிழாவாக ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ இருக்கிறது.

ஒவ்வொரு திருவிளையாடல்களும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருக்கிறது. ‘நரி பரியானது’ திருவிளையாடலின் தொடர்ச்சியினால் தான் வைகை ஆற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டோடியது. அது எப்படி? என்பதை பார்ப்போம்.மாணிக்க வாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்துடன் அமைச்சராக பணியாற்றி வந்தார். மன்னன் படைக்குக் குதிரைகள் வாங்கிட பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை அனுப்பினார். திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன், இறைவனை குருவாகப் பெற்ற மணிவாசகர் அங்கே சிவாலய திருப்பணி, சிவனடியார் திருப்பணி என முழுப்பொருளையும் செலவிட்டார். அரசனிடமிருந்து அழைப்பு வரவும், வெறுங்கையாக இருந்த மணிவாசகர் செய்வதறியாது இறைவனைத் தொழுதார். இறைவனும் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று கூறும்படி பணிந்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது.

குதிரைகள் வராதது கண்டு மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான். மாணிக்கவாசகர் இறைவனிடம் முறையிட இறைவன் காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரைப் பாகர்களாக்கி, தானே தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரை வந்தடைந்தார். அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரைப் பாராட்டினான். ஆனால் அன்றிரவே அந்த குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி, அங்கிருந்த குதிரைகளைக் கொன்று விட்டு காடு நோக்கி ஓடின. மாணிக்க வாசகரை தண்டிக்கப் புகுந்த அரசன், அவரைக் கட்டி சுடுமணலில் கிடக்கச் செய்தான், இறைவன் அவரைக் காக்கும் பொருட்டு வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார். இதன் தொடர்ச்சி தான் பிட்டுக்கு மண் சுமந்த படலம்.

‘பிட்டுக்கு மண் சுமந்த’
திருவிளையாடல்:

வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும் என்று அரசர் ஆணையிட்டார். வந்தி எனும் பிட்டு விற்கும் கிழவிக்கு ஒருவரும் இல்லை. இறைவனே கூலி ஆளாக வடிவெடுத்து வந்து தந்த பிட்டுக்காக மண் சுமப்பதாக
வந்தார். ஆனால் தன் பங்கு கரையை அடைக்காமல் பிட்டு உண்டு ஆடிப்பாடி ஆழ்ந்த துயில் கொண்டார். பார்வையிட வந்த மன்னன் தன் கையிலிருந்த பிரம்பால் முதுகில் அடிக்க, அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அந்த அடிபட்டது. அரசன் உண்மை உணர்ந்தான். ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய திருவிளையாடல்களில் ஒன்றாக ‘சுவாமி பட்டாபிஷேகம்’ இருக்கிறது. ஆவணி மூலத்திருவிழாவின் 7ம் நாளில் சுவாமி பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு, அதுவரை அம்மன் ஆட்சி முடிந்து, சுவாமியின் ஆட்சி அரங்கேறுகிறது.

படம்: ஜி.டி.மணிகண்டன்

மதுரை மீனாட்சி கோயிலில் முக்கிய பிரசாத வரிசையில் பிட்டு இடம் பிடித்திருக்கிறது. மீனாட்சியம்மன் கோயில் ஸ்டால்களில் ‘பிட்டு பிரசாதம்’ கிடைக்கிறது. திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் கதையுடன் தொடர்புடையதாக, மதுரை அடையாளமாக, மீனாட்சி கோயிலிலேயே தரமாக பிட்டு தயாரித்து, பிரசாதமாகத் தருகின்றனர். ஆவணியில் நடக்கும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்கெனவே, மதுரையில் புட்டுத்தோப்பு என்ற பகுதியும், இங்கொரு அழகிய தொன்மை மண்டபமும் இருக்கிறது. திருவிழா காலத்தில், இப்பகுதியே கோலாகலமாக இருக்கும்.

செ.அபுதாகிர்

Tags : Avani Moolap Peruvija ,Pittu ,Man Sumanthalilai ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?