×

கூலித் தொழிலாளி இன்று முதலாளி

வாழ வைக்கும் வாழைக்கு ஜேமாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானைகட்டி போரடித்த தஞ்சை வடுகக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆரம்ப காலத்தில் கூலித்தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கியவர், இன்று முதலாளி, காரணம் வாழை . “வாழை நட்டதுனால தாங்க என் வாழ்க்கையே மாறிருச்சி. கடந்த 25 வருஷமா வாழை தான் நடுறேன். அதுவும் ‘பூவன் ரக வாழைப்பழம்’. வடுகக்குடி, மருவூர், சாத்தனூர்னு 50 ஏக்கருக்கு மேல வாழை போட்டிருக்கேன். தமிழகத்தோட நடுநாடு முழுக்க தினமும் 30 ஆயிரம் இலைகளை ஏற்றுமதி செய்கிறேன். திருச்சி காந்தி மார்க்கெட்ல நம்ம வாழை இலைக்குனு தனி மவுசு’’ என்று மகிழ்ச்சியுடன் பேசுகின்றார் மதியழகன். காலை 7 மணிக்கு வாழைத்தோப்பில் வேலையை தொடங்கும் மதியழகன் பணிகள் முடிய மறுநாள் அதிகாலை 1 மணி ஆகி விடுகிறது. இலைகளை சரியான அளவில் நுனிஇலை, சாப்பாட்டுஇலை, டிபன் இலை என்று தனித்தனியாக நறுக்கி, அடுக்கி கட்டி வாகனங்களில் ஏற்றி அவரே அனுப்புகிறார். இவரையும், இவர் செய்யும் வாழை விவசாயத்தையும் நம்பி 30 குடும்பங்கள் இயங்கி வருகின்றது. “வாழை சாகுபடிக்கு தண்ணீர் நிற்கக்கூடாது. அப்படி இருந்தால் அழுகிவிடும். வாழைக்கு வண்டல் கலந்த கரிசல்மண்தான் உகந்தது. பம்புசெட் வைத்து தண்ணீர் பாய்ச்சுகிறேன். உரமேலாண்மையை தோட்டக்கலை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து சரியாக செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1,000 வாழைக்கன்று நட்டுள்ளேன். கன்று ஊன்றிய 40ல் இருந்து 50 நாட்களுக்குள் களை எடுத்து, ஒரு கன்றுக்கு 100 கிராம் டிஏபி, 50 கிராம் யூரியாவை கன்றை சுற்றி இட வேண்டும். இதேபோல் 100 நாட்களுக்குள் களையெடுத்து 100 கிராம் டிஏபி, 50 கிராம் பொட்டாஷ், 50 கிராம் யூரியா என்று கன்றுக்கு வீதம் இட வேண்டும். களைக்கொல்லி அடிக்கக் கூடாது. ஆட்களை வைத்துத்தான் வெட்ட வேண்டும்.150-180வது நாளிலும் இதேபோல உரம் வைத்து களை எடுக்க வேண்டும்.  இதனால் மண்சத்து அதிகரிக்கும். வாழையும் நன்கு பசுமையாக வளரும். 7வது மாதம் கன்று தார் போடும் நிலையில் அமோனியம், குளோரைடு இட வேண்டும். இதனால் சத்துக்கள் மரத்திற்கு நன்கு தங்கு தடையின்றி கிடைக்கும். அறுவடை முடியும் போது ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு என்றால் ரூ.3 லட்சம் வருமானம் கிடைக்கும். வாழைக் குலை தள்ளும்போது மண் அணைவு கொடுப்பதுடன் சவுக்கு கட்டைகள் வைத்து மரத்திற்கு முட்டு கொடுப்பது சிறப்பானது. இதனால் மற்ற மரங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். முக்கியமாக கவனிக்க வேண்டியது உரமேலாண்மையை சரியான முறையில் செய்ய வேண்டும். சாகுபடி நிலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். முறையாக பராமரிப்பு செய்தால் வாழை நம்மை வாழ வைக்கும். வாழைத்தார் வெட்டி முடித்த பிறகு இலைகள் அறுவடை, பின்னர் வாழைத்தண்டு, பூ, நார் என எதுவும் வீண் ஆவதில்லை. அனைத்திலும் வருமானம் பார்க்கலாம். சரியான வியாபாரியிடம் விற்க வேண்டும்.” தொடர்புக்குமதியழகன்: 98655 21504.தொகுப்பு: என்.நாகராஜன்

The post கூலித் தொழிலாளி இன்று முதலாளி appeared first on Dinakaran.

Tags : Vidyabhaghan ,Tanjana Vadukudi ,Jemadugatti ,
× RELATED இந்தியா கூட்டணி நாளையே ஆட்சி அமைக்க...