×

தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தை அரசுக்கே வழங்கினார் நல்லகண்ணு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: தகைசால் தமிழர் விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அவருக்கு வழங்கப்பட்ட ரூ.10லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி அளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த விருதை பெறும் இரண்டாவது விருதாளர் நல்லகண்ணு. 1925 டிசம்பர் 25ம் நாள் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளி பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். 1943ல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். 1948ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது தலைமறைவானார். 1946ல் நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.இவரின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வசூலித்து நன்கொடையாக கொடுக்கப்பட்ட ரூ.1 கோடியை அதே மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பி கொடுத்துவிட்டார். இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலை இயக்கங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டவர். ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்து தமிழரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லக்கண்ணுக்கு 2022ம் ஆண்டிற்கான ‘‘தகைசால் தமிழர் விருது” அரசு வழங்கி சிறப்பிக்கிறது.சென்னையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் முதலவர் மு.க.ஸ்டாலின், ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். அதை பெற்றுக்கொண்ட ஆர்.நல்லகண்ணு உடனடியாக ரூ.10 லட்சம் காசோலை மற்றும் தனது சொந்த நிதி ரூ.5ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். அதனை அவர் முதல்வரிடம் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் பெருந்தன்மையை பாராட்டி நன்றி தெரிவித்தார்….

The post தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தை அரசுக்கே வழங்கினார் நல்லகண்ணு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி appeared first on Dinakaran.

Tags : Nallakannu ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,R. Nallakannu ,Dinakaran ,
× RELATED மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக...