×

பத்து பொருத்தம் பார்த்தும் பிரச்னை வருவது ஏன்?

“எல்லாப் பொருத்தமும் பார்த்துதான் கல்யாணம் பண்ணோம். பத்துக்கு ஒன்பது பொருத்தம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ஆனா கல்யாணம் ஆகி பதினைஞ்சு நாள் கூட வாழல. அதுக்குள்ள ரெண்டு பேருக்கும் சண்டைன்னு பிரிஞ்சிட்டாங்க.” என்ற கருத்துக்களை தற்காலத்தில் பரவலாகக் கேட்க முடிகிறது. இதுபோன்ற பிரச்னைகளால் இளைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையில் குறைவு உண்டாகிறது. பொருத்தம் பார்த்துத்தானே திருமணத்தை நடத்தினோம், ஆனால் பிரிந்துவிட்டார்களே.. அப்படியென்றால் ஜோதிடம் பொய்யா, அல்லது ஜோதிடர் பொய் உரைத்தாரா என்ற சந்தேகம் தோன்றுவதும் இயற்கையே. இதற்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றால் நிச்சயமாக ஜோதிடர் பொய் உரைத்திருக்கமாட்டார், பொய்யைச் சொல்லி கல்யாணத்தை நடத்த வேண்டிய அவசியம் ஜோதிடருக்கு இல்லை, ஜோதிடமும் பொய்ப் பதில்லை என்பதே. எனில் தவறு உண்டானது எங்கே.. சற்று விலாவாரியாகவே அலசுவோம்.

பத்து பொருத்தங்கள்

தவறு என்பது நாம் பொருத்தம் பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. திருமணப் பொருத்தம் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது பத்துப் பொருத்தம் மட்டுமே. தினம், கணம், மாஹேந் திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜூ (அதன் உட்பிரிவாக வேதை), நாடி ஆகியவையே பெரும்பாலும் திருமணத்தின்போது பார்க்கப்படுகின்ற பத்து பொருத்தங்கள் ஆகும். இந்த பொருத்தம் பார்க்கும் முறை என்பது ஆண், பெண் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு கணிக்கும் முறை. அதாவது பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு அதனை வைத்து பொருத்தம் பார்த்துச் சொல்வார்கள். இங்கேதான் தவறு என்பது உண்டாகிறது. இந்த பத்து பொருத்தமும் முழுக்க முழுக்க ஆண்- பெண் இருவரின் ஜென்ம நட்சத்திரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறதே தவிர ஜாதகத்தில் உள்ள கிரஹ நிலையின் அடிப்படையில் அமைவது அல்ல. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஜாதக பலனைப் பார்க்காமல் வெறும் நட்சத்திரத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளும்போது நாம் நினைப்பதற்கு மாறாக நடந்துவிடுகிறது.

அப்படி என்றால் இந்த பத்து பொருத்தம் பார்க்கும் முறை உண்டானது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அந்த நாட்களில் சாமானிய மனிதர்களுக்கு ஜாதகம் எழுதி வைக்கும் முறை நடைமுறையில் இல்லை. நம்மில் பலர் வீடுகளிலும் தாத்தா, பாட்டிக்கு ஜாதகம் எழுதி வைத்திருக்கமாட்டார்கள் என்பதை நாம் இன்றளவும் காண முடியும். அவ்வாறு ஜாதகம் எழுதி வைக்காத காலத்தில் பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு ஜன்ம நட்சத்திரத்தை நிர்ணயித்தோ அல்லது ஜன்ம நட்சத்திரம் தெரிந்திருந்தால் அதனைக் கொண்டோ பொருத்தம் பார்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட முறையே இந்த பத்து பொருத்தம் பார்ப்பது என்பது. அன்றைய கால தேச வர்த்தமானத்திற்கு அது போதுமானதாய் இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலும் எல்லோருமே ஜாதகத்தை கணித்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு ஜனன ஜாதகம் என்பது கையில் இருக்கும்போது திருமணத்திற்கான ஏற்பாட்டினை செய்யும் பட்சத்தில் ஆண்-பெண் இருவரின் ஜாதகங்களை முழுவதுமாக ஆராய்ந்து அவரவர் ஜாதகக் கட்டங்களில் உள்ள கிரஹங்களின் அமைப்பு சரியாக உள்ளதா, அவை இருவருக்கும் பொருந்தி உள்ளதாக என்பதை அவசியம் பார்த்தாக வேண்டும் என்ற உண்மை நமக்கு நன்றாகப் புலப்படுகிறது.

ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டியதன் அவசியம்

இன்றைய கால சூழலில் ஆண், பெண் இருவருமே மெத்தப் படித்தவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், சுயமாக சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற சூழலில் இருவருக்குமே சுயகௌரவம் என்பது ஓங்கி நிற்கிறது. இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்துகொள்ள வேண்டுமே தவிர ஒருவரை மற்றொருவர் அடிமையாக நடத்த இயலாது. பெண் ஆனவள் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்குள் நுழையும்போதே தான் யாருக்கும் அடிமை இல்லை என்பதை முதலிலேயே ஆணித்தரமாக நிரூபித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து அதனை தனது பேச்சில் வெளிப்படுத்துகிறாள். இந்தப் பேச்சு புகுந்த வீட்டில் சலசலப்பை உண்டாக்குகிறது. பிறந்த வீட்டுச் சூழலுக்கும், புகுந்த வீட்டுச் சூழலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அவள் பக்குவமாகப் புரிந்துகொள்வதற்கான கால அவகாசத்தினை வழங்குவதோடு, அவளை அனுசரித்துச் செல்லும் பொறுப்பு புகுந்த வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இருக்க வேண்டும். குறிப்பாக அவளது கணவனுக்கு இருக்க வேண்டும் என்பது அவசியம். இந்த அனுசரித்துச் செல்லும் திறன் ஆண்-பெண் இருவருக்கும் இடையே இருக்கிறதா என்பதைத்தான் இவர்கள் இருவரின் ஜாதகங்களும் சொல்லும். எனவேதான் நட்சத்திரப் பொருத்தத்தை விட ஜாதகப்பொருத்தம் என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஜாதகப் பொருத்தம் பார்க்கும் விதம்

பொருத்தம் என்று வரும்போது ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை 2, 4, 7, 8, 12 ஆகிய பாவகங்கள். அதாவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாம் பாவகம் என்பது குடும்ப ஸ்தானம் மற்றும் தன ஸ்தானம் ஆகும். நான்கு என்பது கற்பு ஸ்தானம் அல்லது தனி மனித ஒழுக்கம், ஏழாம் வீடு என்பது களத்ர ஸ்தானம் அல்லது வாழ்க்கைத்துணை நலம், எட்டாம் பாவகம் என்பது மாங்கல்ய ஸ்தானம் அல்லது ஆயுள் ஸ்தானம், பன்னிரெண்டு என்பது சயன சுக ஸ்தானம் அல்லது தாம்பத்ய சுகம் பற்றிச் சொல்லுகின்ற பாவகங்கள். இந்த ஐந்து பாவகங்களும் ஆண்-பெண் இருவரின் ஜாதகங்களில் பொருந்தியிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீடாகிய களத்ர ஸ்தானத்தில் சூரியன் இருந்தால் ஆணின் ஜாதகத்தில் சூரியனின் வலிமை கூடியிருக்க வேண்டும் அல்லது அந்த ஆண் மகன் சூரியனின் அம்சம் நிறைந்திருப்பவனாக இருக்க வேண்டும்.

சூரியனின் அம்சம் என்றால் சிம்ம ராசியிலோ அல்லது சிம்ம லக்னத்திலோ பிறந்திருக்கலாம். அல்லது அந்த ஆணின் ஜென்ம லக்னத்திலேயே சூரியன் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது சூரியனின் தாக்கத்தினைப் பெற்ற கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருக்க வேண்டும். இதுபோன்று இருந்தால் தான் அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு ஆணின் குண நலம் அமைந்திருக்கும். இதே விதி ஆண் மகனின் ஜாதகத்திற்கும் பொருந்தும். ஆணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருந்தால் சுக்கிரனின் அம்சம் நிறைந்திருக்கும் பெண்ணாக பார்த்து நிச்சயிக்க வேண்டும். அதனை விடுத்து சனியின் தாக்கம் நிறைந்த பெண்ணாக பார்த்து மணம் முடிக்கும்போது இவனது எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போய் பரஸ்பரம் மனஸ்தாபம் என்பது உருவாகிவிடுகிறது. மேற்சொன்ன 2, 4, 7, 8, 12 ஆகிய ஐந்து பாவகங்களும் தம்பதியருக்கு இடையே உள்ள பிணைப்பை உறுதி செய்பவன என்றாலும் இவற்றோடு மற்ற பாவகங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள வேண்டும். குறிப்பாக ஜென்ம லக்னம் என்பது அதிக முக்கியத்துவம் பெறும்.
(அடுத்த இதழில்...)

Tags : matches ,
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி