×

மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் (குரு பூஜை - 21 - 8 - 2020)

திருவாரூர் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்த சிதம்பரம் பிள்ளைக்கும் மீனாம்பிகைக்கும் குழந்தை இல்லை. இருவரும் திருவண்ணாமலைக்கு சென்று சோணாசலனை நோக்கி ‘‘உம் திருவடியருளால் செல்வங்கள் உற்றோம். நிம்மதியான வாழ்வுதனை வாழ்கிறோம். ஆனால், மழலை பாக்கியம் மட்டும் இன்னும் கிட்டவில்லை. மழலை வரமருளுங்கள்’’ என்று பிரார்த்தித்தனர். கிரி வலத்தை முடித்து அன்னதான சத்திரத்தில் நித்திரையில் ஆழ்ந்தனர். சொப்பனத்தில் ஈசன், ‘‘மகப்பேறில்லாத குறையை நாமே வந்து தீர்ப்போம். நீவிர் உங்கள் ஊரைச் சேருக’’ என்று அருளாணை இட்டார். இருவருமே சட்டென்று விழிப்புற்றனர். ஒரே கனவையே இருவரும் கண்டோமென்று ஆச்சரியத்தில் மூழ்கினர். அதிகாலை விழித்தெழுந்து ஊர் வந்து சேர்ந்தனர். மீனாம்பிகை கருவுற்றாள். அழகான ஆண் குழந்தை பிறந்தது. அருணாசலேஸ்வரரின் அருளால் பிறந்ததால் அருணாசலம் என்று திருநாமம் இட்டனர். அடுத்த இரு வருடங்களுக்குள் இன்னொரு பிள்ளையும் பிறந்தது. அதற்கு நமச்சிவாயம் என்று திருநாமம் சூட்டினர். மூத்த புத்திரனான அருணாசலத்திற்கு அகவை ஐந்தாகியும் பேசாதிருந்தான்.

தவக்குறைவோ என்று தாய் தந்தையர் அஞ்சினர். அருணை எது செய்யினும் அது அவனருளே என்று இருக்கும்போது ஒரு நாள் சிவனடியார் ஒருவர் அவர்கள் இல்லம் வந்தார். சிதம்பரம் பிள்ளையும் மீனாம்பிகையும் சிவநெறிச் செல்வரை வரவேற்றனர். திருப்பாதம் படர்ந்து வணங்கினர். ‘‘ஐயா, எங்களுக்கு ஐந்து வயதில் மகனொருவன் இருக்கிறான். இதுவரை ஒரு வார்த்தையும் பேசாமல் இருக்கிறான். அருணாசலனின் அருளால் பிறந்தவன். தாங்கள் ஆசி கூறி பேச வைக்கவேண்டும்’’ என்று கண்களில் நீர் பெருக உரைத்தார்.‘‘யாம் அக்குழந்தையைப் பார்ப்போம்’’ என்று மட்டும் கூறினார் சிவனடியார். அந்தக் குழந்தை ஆசனமிட்டு நிஷ்டை கூடி அமர்ந்திருந்தது. முனிவர் உற்றுப் பார்த்தார். ‘‘இது உனக்கு மகன் மட்டுமல்ல. மகானும் கூட. நீங்கள் இப்போது பேசுங்கள், அது பேசும்’’ என்றார். சிதம்பரம் பிள்ளை, ‘‘அப்பா, ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்கிறாய்?’’ என்று சொன்ன அந்தக் கணம் அக்குழந்தை கண்கள் திறந்தது. புன்னகைத்தது. ‘‘சும்மா இருக்கிறேன்’’ என்றவுடன் சிதம்பரம் பிள்ளை ஆனந்தத்தில் அதிர்ந்தார். அகம் மலர்ந்தார். உடனே, முனிவர், ‘‘சும்மா இருக்கின்ற நீ யார்?’’ என்றார். அந்தக் குழந்தை சற்றும் தாமதிக்காது ‘‘ நீயே நான், நானே நீ’’ என்று கூறியவுடன், வந்த முனிவர் கை இரண்டையும் மேலே கூப்பி ‘சத்தியம்... சத்தியம்... இது சத்திய வஸ்து. சிவமே இங்கு உன் அகத்தில் இருக்கிறது’ என்று சொல்லி சற்று பின்னகர்ந்து எங்கு சென்றாரென தெரியாமல் மறைந்தார்.

இருவரும் கைகட்டி தாம் பெற்ற குழந்தையை அன்று வேறாக பார்த்து வணங்கினர். நானே நீ... நீயே நான்.. என முனிவரிடம் கூறியதன் பொருளென்ன என்று யோசித்தனர். வந்ததும் அருணாசலம். இங்கிருப்பதும் அருணாசலம். இருவரும் ஒருவரே. இவர் யாரென இவரே அவராக வந்து சொல்லியிருக்கிறார்.ஒருநாள் மகனுக்கு முன் நின்று, கைகூப்பியபடி, ‘‘சுவாமி நான் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்துவிட்டு வருகிறேன்’’ என்றவுடன் ‘‘நாளை இருபது நாழிகைக்குள் உங்களது மாதா தேகத்தை விடப் போகிறார்கள்’’ என்றார் அருணாசலம். ‘‘சுவாமி, என் மாதா எந்த நோயுமின்றி மிக சௌக்கியமாக இருக்கின்றாளே.... இது எப்படி...’’ என்று தயங்கியபடி கேட்டார். ‘‘புரையேறி விக்கல் ஏற்பட்டு தேகத்தை விடுவார்கள்’’என்று பதிலுரைத்தார். மறுநாளையே சிதம்பர பிள்ளை அவர்களின் மாதா துஞ்சினார்கள். சிதம்பரம் பிள்ளை இளைய புத்திரரான நமச்சிவாயத்தை பள்ளியில் கொண்டு சேர்க்க வெண்டியதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். சுவாமிகள் தந்தையாரை நோக்கி, ‘‘எம்மை ஏன் சேர்க்கவில்லை?’’ என்றார். தந்தையார் தயங்காது ‘‘தாங்கள் சர்வத்தையும் அறிந்த சர்வக்ஞர் அதனாலயே சேர்க்கவில்லை. பள்ளியில் சேர்க்க வேண்டுமாயின், உங்களின் அருளாணைப்படி அதையும் செய்கிறேன்’’ என்றார்.

சிதம்பரம் பிள்ளை தம் இரு புத்திரர்களையும் பள்ளியில் சேர்த்தார். சுவாமிகள் பெரும்பாலும் நிஷ்டையிலிருப்பார். ஒருநாள் பாடசாலை ஆசிரியர் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அருணாசலம், ‘‘ஐயா...’’ என்று விளித்தார். ‘‘என்னப்பா.... என்னாயிற்று’’ என்றார். ‘‘உங்கள் பிள்ளை திண்ணையிலிருந்து கீழே விழுந்து விட்டான். கையில் முறிவு கண்டிருக்கிறது. உடனே சென்று வாருங்கள்’’ என்றார். ஆசிரியர் அச்சத்தோடு ஓடினார்.குழந்தையோடு குடும்பத்தார் எதிரே ஓடி வந்தனர். அனைவரும் மருத்துவரிடம் சென்றனர். மறுநாள் ஆசிரியர் வந்தார். சுவாமிகளின் முன்னர் அமர மறுத்தார். கைகட்டியபடி நின்றிருந்தார். ‘‘நீங்கள் உங்கள் இருக்கையில் அமர வேண்டும்’’ என்று சுவாமிகள் கூறினாலும் அவர் கேட்க மறுத்தார். ‘‘முக்காலமும் உணர்ந்த சுவாமிகள் ஏன் பள்ளிக்கு வர வேண்டும். நாங்கள் அல்லவா உங்கள் பாதம் பணிந்து கற்க வேண்டும்’’ என்று ஆசிரியர் வினவினார். அருணாசல சுவாமிகள் மூன்று மாதங்களே பாடசாலைக்குச் சென்றார். அவர் சகோதரர் ஒரு வருடம் சென்று பின்னர் நின்று விட்டார். இருவரும் தந்தையாரின் நித்திய பூஜையின்போது உடனிருந்து உதவினர்.தந்தையிடம் கொண்ட சிறிய பிரச்னையில் நமச்சிவாயம் யாரோடும் பேசாதிருந்தார்.

வீட்டைவிட்டு சொல்லாமலேயே வெளியேறினான். பெற்றோர் பல இடங்களில் தேடி ஓய்ந்தனர். இறுதியாக அருணாசல சுவாமிகளிடம் கேட்டனர். ‘‘நீங்கள் அழைத்தாலும் வாரான். இப்போது காசியில் இருக்கின்றான். மீண்டு வந்து இல்லறத்தில் புகான். கவலையை விடுங்கள்’’ என்று அழுத்தமாகக் கூறினார். ஒருநாள் தந்தையான சிவசிதம்பரம் பிள்ளை, ‘‘சுவாமி என் மனைவியாகிய மீனாம்பிகை பிரேதமாகி அதை நான் பார்க்கலாகாது. சுவாமிகளின் திருக்கரத்தால் எனக்கு ஈமக் கடன்களை முடிக்கவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். தாயாரும், ‘‘நான் தீர்க்க சுமங்கலியாகவே இறக்க வேண்டும்’’ என்று கேட்டார்.

சிலநாட்கள் கழித்து தம்மைச் சுட்டிக்காட்டி, ‘‘நமது கருமம் இன்றிலிருந்து எட்டாவது நாளில் முடிந்து விடும். நீங்கள் சிவநாமத்தை சொல்லிக் கொண்டேயிருங்கள்’’ என்றார். அவர்கள் இருவரும் சுவாமிகள்தான் சமாதியடையப் போகின்றது என்று தீவிரமாக சிவநாமத்தை சொல்லியபடி இருந்தனர். எட்டாம் நாள் உறவினர்கள் அனைவரும் இல்லம் வந்துவிட்டனர். சுவாமிகள் எழுந்து நின்றார். சிவநாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்த தன் பெற்றோரின் அருகே சென்றார். நெற்றியில் திருநீறு இட்டார். சட்டென்று அவர்கள் இருவரும் மூர்ச்சித்தனர். அங்கேயே சிவபதமுற்றனர். மயானத்திற்கு கொண்டு சென்று இருவரையும் ஒரே சிதையில் ஏற்றி தீ மூட்டினார். அங்கிருந்து வெள்ளை வஸ்திரத்தோடு பல்வேறு தலங்களுக்குப் பயணித்தார்.

திருவாரூர் வந்த அவர், தம்மை நாடி வருவோரின் குறைகளை அற்புதங்கள் பல நிகழ்த்தி போக்கினார். அப்பகுதி மக்களால் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். மடப்புரத்தில் ஒருநாள் மகாமண்டபத்தில் வடமுகமாக அமர்ந்திருந்தார். ‘‘முடிந்தது முற்றிலுமுடிந்த’’ என்று சொன்னபடியே நிஷ்டையில் அமர்ந்தார். 1837ம் வருடம், ஆவணி மாதம் உத்திர நட்சத்திரத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் தமது தேகத்தை விடுத்து விதேக கைவல்யம் அடைந்தார். சுவாமிகளுக்கு அபிஷேகமும் அலங்காரமும் செய்து வைத்து சமாதிக் கோயிலுக்குள் சுவாமிகளை எழுந்தருளச் செய்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை திருவாரூருக்கு அருகேயுள்ள மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி பெரும் ஞானக் கருவூலமாக திகழ்கிறது.

கிருஷ்ணா

Tags : Madappuram Datsinamoorthy Swamis ,
× RELATED காமதகனமூர்த்தி