×

ஆவியின் கனி -8 சாந்தமாக இருங்கள்

உங்கள் சாந்த குணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக
(பிலிப்பியர் 4 :5)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாகிய ஆபிரகாம்லிங்கன் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், அவரது மெலிந்த தேகத்தையும், உயரமுமான தோற்றத்தையும் குறித்து ஒருவர், மிகவும் பரிகசித்து, அவரைப் புண்படுத்தும் விதமாகப் பேசினார். ஆபிரகாம்லிங்கனோ அதற்கு எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.ஆம்! மனிதர்கள் நம்மை துன்புறுத்தும்போதும், வேதனைப்படுத்தும்போதும் அவற்றை அமைதியாக சகித்துக் கொள்வதே சாந்த குணம் ஆகும்.கர்த்தர் சாந்த குணமுள்ளவர்களை உயர்த்துகிறார் (சங்கீதம் 146:6) என்ற திருமறை வசனத்திற்கேற்ப ஆபிரகாம்லிங்கனை கர்த்தர் ஆசீர்வதித்து, அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக உயர்த்தினார்.அதுபோல, யோசேப்பு என்ற இறை மனிதரும் சாந்த குணத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தார் என்று திருமறையில்
காண்கிறோம்.

அவரது சகோதரர்கள் அவர் மீது பொறாமை கொண்டு அவரை அடித்து, ஒரு குழிக்குள் போட்டனர். எகிப்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்த வியாபாரிகளிடம் அவரை ஒரு அடிமையாக விற்பனை செய்தனர். எனினும், தனக்கு தீமை செய்த தனது சகோதரர்கள் மீது அவர் கோபம் கொள்ளாமல், தனது சாந்த குணத்தை வெளிப்படுத்தினார். கடவுளின் அருளாலும், அவரது கடின உழைப்பாலும், பின் நாட்களில் எகிப்து தேசத்தின் அதிபராக உயர்த்தப்பட்டார். அந்நாட்களில் நிலவிய பெரும் பஞ்சத்தின் காரணமாக வாழ்வா தரத்தை இழந்து தவித்து அவரது சகோதரர்கள், எகிப்தின் அதிபராகிய யோசேப்பைத் தேடி வந்தார்கள். தாங்கள் செய்த தீமையை மனதில் நினைத்து, யோசேப்பும் தங்களுக்கு தீமை செய்வாரோ என்று எண்ணி, அவரைப்பணிந்து, நாங்கள் உமக்கு அடிமைகள் என்று கூறினர். எனினும், யோசேப்பு அவர்களிடத்தில் பயப்படாதிருங்கள், நான் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, (ஆதியாகமம் 50:20). அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து பஞ்சகாலத்தில் அன்புடன் அவர்களை பராமரித்து, பாதுகாத்தார்.
ஆம்! சாந்த குணமுள்ளவர்கள், தீமைக்கு தீமை செய்யமாட்டார்கள்.

மாறாக, தீமையைச் சகித்துக் கொண்டு, தீமைக்கு நன்மை செய்வார்கள். இதன் மூலமாக அனைவரது அன்பையும், பலரது நல் மதிப்பையும் பெற்றுக்கொள்வார்கள். ஆகவேதான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் (மத்தேயு 5:5) என்று கூறினார். மேலும், ஆண்டவர் இயேசுதாமே சாந்த குணத்திற்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ஆம்! உலகத்தின் மீட்புக்காக சிலுவையைச் சுமந்து, பல்வேறு துன்பங்களையும், வேதனைகளையும் சகித்த அவர், நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை திறக்கவில்லை (ஏசாயா 53 : 7) என்று திருமறை கூறுவதற்கேற்ப, பிறர் தன்னை வேதனைப்படுத்தின வேளையிலும், தனது சாந்த குணத்தையே வெளிப்படுத்தினார்.நாமும், நமது இல்லத்திலும், பணி செய்யும் இடத்திலும், சாந்த குணத்தை வெளிப் படுத்தி, ஆண்டவர் அருளும் நன்மைகளையும் உயர்வுகளையும் பெறுவோமாக !
- Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம், பேராயர்,
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம்.

Tags :
× RELATED தங்கம் சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.37,784 -க்கும் விற்பனை