×

துன்பங்களின் போது பொறுமை

வாழ்க்கை என்பது புதிர். ஒரு விடுகதை என்று சிலர் கூறுவார்கள்.  வாழ்வில் நேரிடும் இன்னல்களுக்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரிவதில்லை. சிலர் அதை “விதி” என்பார்கள். சிலர்  அதை “பூர்வ ஜென்ம விளைவு” என்பார்கள். சிலர் “இறைவனின் நாட்டம்” என்பார்கள். சிலர் “இயற்கை தரும் படிப்பினை ”என்பார்கள்.இத்தகைய எதிர்பாரா இன்னல்கள், நோய்கள்,  துன்பங்கள் ஆகியவற்றை இஸ்லாமிய வாழ்வியல் எப்படிப் பார்க்கிறது? ‘இறைவன் தரப்பிலிருந்து வரும் சோதனை”என்கிறது.

எதற்கு இந்தச் சோதனை? மனிதன் தன் செயல்களைச் சீர்தூக்கிப்பார்த்து மனம் திருந்தவேண்டும், இறைவனின் பக்கம் தன் இதயத்தைத் திருப்பவேண்டும் என்பதற்காக. இறைவன் தரப்பிலிருந்து வரும் இந்தச் சோதனைகளின் போது மனிதன் நிலைகுலையாமல், பொறுமையோடு இருப்பானேயானால் அது அவனுக்குப் பெரும் நன்மைகளையும் ஆன்மிக வலிமையையும் ஏற்படுத்துகிறது  என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஒருமுறை மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள். அங்கே அத்தனை இதயங்களும் ஆண்டவனையே அழைத்துக்கொண்டிருக்கும்.

“ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு ஏதேனும் நோய் அல்லது துன்பம் ஏற்பட்டு அதில் அவன் பொறுமையாக இருந்தால் அதன் மூலம் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்பது நபிகளாரின் அமுத வாக்கு.“காலில் சிறு முள் குத்தி விட்டாலும் அதற்குரிய நன்மையும் இறை நம்பிக்கையாளனுக்குக் கிடைக்கும்” என்றும் நபிகளார் கூறியுள்ளார். நோயாளிக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்துள்ள நபிமொழிகளை எல்லாம் ஒருவர் படித்தால், “ஆஹா...நான் நோயாளி” என்று மகிழ்ச்சியுடன் கூவுவார். அந்த அளவுக்கு இறை நம்பிக்கையையும்  தன்னம்பிக்கையையும் பொறுமையையும் இஸ்லாமிய வாழ்வியல் மனிதர்களுக்கு அளிக்கிறது.

வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நபிகளாரிடம் வந்தாள். “இறைத்தூதர் அவர்களே, என் வலிப்பு நோயைக் குணப்படுத்தும்படி இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினாள்.“நீ இந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொண்டால் உனக்கு மறுமையில்  மகத்தான நற்கூலி கிடைக்கும். அல்லது உன் விருப்பப்படி பிரார்த்திக்கவும் செய்கிறேன்” என்றார் நபிகளார்.உடனே அந்தப் பெண், “நான் இந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறேன். அதே சமயம் வலிப்பு வந்து நான் மயங்கி விழும்போது என் ஆடைகள் விலகிவிடாமல் இருப்பதற்கு மட்டும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என்றாள்.

நபிகளார் அவ்வாறே இறைவனிடம் இறைஞ்சினார். பின்னாளில் நபித்தோழர்கள் கூறினார்கள்: “அந்தப் பெண்ணுக்கு வலிப்பு வரும்போது கீழே விழுந்துவிடுவார். ஆயினும் எந்த நிலையிலும் அவருடைய ஆடைகள் விலகியதே இல்லை.”“நோய் ஏற்பட்டால் பொறுமையாக இருக்கவேண்டும், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது” என்பது இதற்குப் பொருள் அல்ல. கட்டாயம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். நோயின்  போதோ, இதர துன்பங்களின் போதோ இறைவனிடமே அந்தத் துன்பம் நீங்க பிரார்த்திப்பதுடன் அவன் பக்கமே அதிகம் திரும்பவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?