×

பிரதோஷ நடன ஓவியம்

கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி (வெள்ளைப்பிள்ளையார்  கபஸ்தீஸ்வரர்) ஆலயத்தில் பிரதோஷ நடனத்தை விளக்கும் தொன்மைக்கால ஓவியம் ஒன்று விதானத்தில் உள்ளது. இதில் விஷ மருந்திய பெருமான் சந்தியாதாண்டவத்தை ஆடுகின்றார். தேவர்களும் கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைக்கின்றனர்.

வாசுகி என்ற பாம்பு பெருமானுக்குப் பிரபா மண்டலம் போல விளங்குகின்றது. பெருமான் நடனமாடும்போது அவர் திருவடியின் கீழ் இருக்கும் முயலகன் அச்சத்தால் ஓடி தனியாக நின்று அவருடைய ஆட்டத்தை கண்டுகளிக்கிறான். அம்பிகையும் தேவர்களும் சிவபெருமானின் ஆட்டத்தை பார்த்து வியந்து நிற்கின்றனர். இத்தகைய ஓவியம் வேறெங்கும் இல்லை என்று கூறுகின்றனர். இந்நாளில் இது மிகவும் சிதைந்து காணப்படுகிறது.

அமிர்த மர்த்தன நாடகம்

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதத்தையும், காமதேனு முதலான அளவற்ற செல்வங்களையும் விளக்கி நாட்டுபுற கலைஞர்களால் மேடையேற்றி நடிக்கப் பெற்ற நாடகமே அமிர்தமர்த்தன நாடகமாகும். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த நாடகத்தில் ஐயப்பன் கதை, மோகினி அவதாரம், ராகு கேது உண்டான கதை போன்ற பல்வேறு கிளைக்கதைகளும் இடம்பெற்றுள்ளன. இது ஏட்டுச்சுவடியாகவே உள்ளது.

அருகு அர்ச்சனை

சிவபெருமானுக்கு உரிய பத்திரங்களில் தூர்வா பத்திரம் எனும் அருகு சிறப்புடையதாகும். விஷ வேகத்தாலான தீயைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்குக் குளிர்ச்சியைத் தருவதும், வெப்ப வேதனைகளைத் தவிர்ப்பதுமாகிய அறுகம்புல்லால் அர்ச்சனை செய்கின்றனர். அறுகம்புல்லாலான ஆசனத்தை அமைத்து அந்த தூர்வாசனத்தின் மீது அமர்ந்து கொண்டு பிரதோஷ காலங்களில் சிவமூர்த்தியைத் தியானம் செய்வது நலமுடையதாகும். இவ்வேளையில் அறுகம்புல்லைக் கட்டி மாலையாகச் சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் அணிவிக்கின்றனர். அறுகம்புல் விஷத்தை நீக்கும் ஆற்றல் படைத்தது.

 - அபிநயா

Tags : Pradosa ,
× RELATED சிவாலயங்களில் பிரதோஷ விழா