×

பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி

மதுரை -  மீனாட்சி

தமிழக சக்தி பீடங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அல்லது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளது.  இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன் பிறகு சுந்தரேஸ்வரர் சந்நதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. தேவியின் சக்தி பீடங்களுள் இது மந்த்ரிணீ பீடமாகத் திகழ்கிறது.

மதங்க முனிவரின் மகளானதால் சியாமளை என்ற பெயர் மாதங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது. இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சி அம்மனின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.  

தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத் தேற்றும் ஜகன்மாதாவாக மீனாட்சி திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருட்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது.

இந்த எட்டுகாலங்களில் முறையே மஹா க்ஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, க்ஷோடஸீ ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்
படுகின்றன.

மீனாட்சியம்மன் சித்திரைத்திருவிழாவில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியம்மன், திருமணத்திற்கு முன் அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே நின்று அவரே தனது மணாளன் என அறிந்து மணந்து கொண்டாள். இந்த நிகழ்வு சித்திரைத்திருவிழாவில் நடக்கிறது. திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார
நந்தியையும் வென்றாள்.

பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது.

இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது

சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர். தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர்.

மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாட்சி அன்னையின் சந்நதிஇருக்கிறது. கருவறையில் அன்னை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அன்னையிடம் சொல்கிறான். அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது. சுவாமி சந்நதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.

15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி சந்நதி அமைந்துள்ளது. ஆயிரம்கால் மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றும் அழகாக செதுக்கப்பட்டு, 76 மீட்டர் நீள, அகலமுள்ள கூரையைத் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் இன்னிசை ஒலி எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன. இம்மண்டபம், கோயில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டு பல்வேறு காலத்திய சிற்பங்கள், ஓவியங்கள், பரதக்கலை முத்திரைகள், இசைத்தூண்கள் என பல்வேறு சிறப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயிரங்கால் மண்டபம் கோயிலின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதால், உள்ளே நுழைய நுழைவுக் கட்டணம் மற்றும் புகைப்படக் கருவிகள் கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.    ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நதிபிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு காலத்தில் தங்கத்தாமரைகள் பூத்ததாகவும் இதைக்கொண்டு இந்திரன் சுந்தரேஸ்வரரை பூஜித்ததாகவும் சொல்வர். இதன் அகலம் 165 அடி. நீளம் 240 அடி. பரப்பரளவு ஒரு ஏக்கர். மீனாட்சிஅம்மன் கோயில் கட்டுவதற்கு முன்பே இந்த குளம் அமைந்துவிட்டது.

சுந்தரேஸ்வரருக்கு கருவறை கட்டிய பாண்டியனின் உருவம் இந்த குளத்தின் வடகரையில் உள்ள தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. எனவே இந்த படித்துறை “பாண்டியன் படித்துறை’ எனப்படுகிறது. இந்த குளத்தில் தவளையும் மீனும் இருப்பதுஇல்லை. குளத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்து சுவாமி மற்றும் அம்மன் சந்நதிகளின் தங்க கோபுரங்களை வழிபடலாம்.

ஒரு இல்லறம் நன்கு சிறக்க வேண்டுமானால் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவது அவசியம். அதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையில் சுவாமி ஆட்சி ஆறு மாதங்களும், அம்மன் ஆட்சி ஆறு மாதங்களும் மாறி மாறி நடைபெற்று வந்தது. அக்காலத்தில் சித்திரை திருவிழா கிடையாது. மாசியில் தான் விழா நடந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போதும் மாசி வீதியில் தான் சித்திரை திருவிழா பவனி நடக்கிறது. மந்த்ரிணீ சக்தி பீட நாயகியாம் மங்கலங்கள் அருளும் மீனாட்சியை தரிசித்து வாழ்வில் வளங்கள் பெறுவோம்.

Tags : Goddess ,
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...