×

“தாய்க்குப் பின் தாய்..!”

“ஓர் அரபியை விட அரபி அல்லாதவரோ, அரபி அல்லாதவரை விட ஓர் அரபியோ, ஒரு வெள்ளையரைவிட கறுப்பரோ, கறுப்பரை விட வெள்ளையரோ உயர்ந்தவர் அல்லர். அனைவரும் ஆதத்தின் வழித்தோன்றல்களே. ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்.”இறைத்தூதர் நபிகளார்(ஸல்) தம் இறுதிப்பேருரையில் வெளியிட்ட சமத்துவப் பிரகடனம் இது. வெறும் அறிவிப்புடன் நிற்காமல் செய்தும் காட்டியவர் நபிகளார். மக்கா நகரம் வெற்றிக்கொள்ளப்பட்டபோது முதன்முதலாகத் தொழுகைக்கு மக்களை அழைக்கும் உன்னத பதவிக்குக் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் என்பவரை நியமித்து சமத்துவப் புரட்சிக்கு வித்திட்டவர் இறைத்தூதர் அவர்கள்.

இதே போன்று இன்னொரு புரட்சிகர நிகழ்வும் உண்டு. நபி வரலாறு எழுதும் அத்தனை அறிஞர் பெருமக்களும் அந்த நிகழ்வைக் குறிப்பிட மறப்பதில்லை. அதைச் சுருக்கமாகக் காண்போம். நபிகளார்(ஸல்) இறந்துவிட்டார். தாளமுடியாத சோகத்தில் நபித்தோழர்கள் இருந்தனர். கலீஃபா அபூபக்கர், உமரை அழைத்து, “உமரே, உம்மு அய்மனிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். இறைத்தூதர் உம்மு அய்மனைச் சந்தித்து வந்ததைப்போல் நாமும் சந்தித்து வருவோம்” என்று உளம் உருகக் கூறினார்.

இருவரும் உம்மு அய்மன் இல்லத்திற்குச் சென்றனர். அந்தப் பெண்மணியும் அழுதுகொண்டிருந்தார். அபூபக்கரும் உமரும் உம்முஅய்மனை நோக்கி, “ஏன் அழுகிறீர்கள்? நம்மிடையே இருப்பதைவிட அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதருக்குச் சிறந்ததாகும்” என்றனர். “அதை நானும் அறிவேன். ஆயினும் வானிலிருந்து இறைச் செய்தி(வஹி) வருவது நின்றுவிட்டதே. அதை நினைத்துதான் அழுகிறேன்” என்றார் உம்மு அய்மன். உம்மு அய்மனுடன் சேர்ந்து அபூபக்கரும் உமரும் அழுதார்கள்.

(இப்னு மாஜா, நபிமொழி எண்-1625) நபிகளாருக்கு ஆறு வயதாக இருக்கும்போதே தாய் ஆமினா இறந்துவிட்டார். தாய் இறந்தபிறகு நபிகளாரைக் கண்ணுக்குக் கண்ணாக, உயிருக்கு உயிராக வளர்த்தவர் உம்மு அய்மன்தான். இவரைப் பற்றி நபிகளார் குறிப்பிடும்போது “என் தாய்க்குப் பின் தாய்” என்று இதயம் நெகிழ்ந்து கூறுவார்கள்.அந்தத் தாயை நபிகளார் எந்த அளவுக்கு மதித்து அன்பு செலுத்தினாரோ அதே அளவுக்கு நபித்தோழர்களும் மதித்து அன்பு செலுத்தினர்.
இங்கே கவனிக்க வேண்டிய செய்தி- உம்மு அய்மன் குறைஷிகுலப் பெண்ணோ உயர்குடும்பத்தைச் சேர்ந்த சீமாட்டியோ அல்லர்.

அபிசீனிய கறுப்பர் இனப் பெண். ஆம்....அந்த அன்பான கறுப்புத் தாய்தான் அகிலத்திற்கே அருட்கொடையான நபிகளாரைத் தாய்க்குப் பின் தாயாக இருந்து பேணி வளர்த்தவர். இஸ்லாமிய வாழ்வியலின் இந்த சமத்துவம் இன்றும் உலகை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED சுந்தர வேடம்