×

நம்பிக்கையே நற்பலன் தரும்

‘‘நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது.(நீதி 23:18) ’’ நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவற்றை அடைவோம் என்று உறுதியோடு இருப்பது ஆகும். ‘‘பிறர் என்ன செல்வார்களோ ஒன்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணில் சிக்கிக்கொள்வார், ஆண்டவரை நம்புகிறவருக்கோ அடைக்கலம் கிடைக்கும்’’(நீதி 29:25) இதைப்போன்று கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலைதான் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையால் தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். உலகம் முழுவதும் கடவுளின் சொல்லால் உருவாக்கப்பட்டது என்றும் காணப்படாதவற்றினின்று காணப்படுகிறவை உண்டாயின என்றும் நம்பிக்கையாலேயே புரிந்துக் கொள்கிறோம்.

நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில் கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதனை அறிந்தும், அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதனையும் நம்ப வேண்டும். நோவா கண்ணுக்கு புலப்படாதவைக் குறித்துக் கடவுளால் எச்சரிக்கப்பட்டபோது, தம் குடும்பத்தைக் காப்பாற்ற கவனத்தோடு ஒரு பேழையை அமைத்தது நம்பிக்கையினால் தான். அதன் வழியாய் அவர் உலகை கண்டித்து இறைவனுக்கு ஏற்புடையவர் என்னும் உரிமைப்பேறு பெற்றதும் நம்பிக்கையால் தான்.

ஆபிரகாம் வயது முதியவராயும், சாரா, கருவுற இயலாதவராயும் இருந்த போதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல்   பெற்றதும் நம்பிக்கையினால் தான். ஏனெனில் வாக்களித்தவர், நம்பிக்கைக்குரியவர் என அவர் நம்பினார். மோசே, தான் அழைக்கப்பட்டபோது, ஆண்டவருக்கு கீழ்படிந்து சென்றதும் நம்பிக்கையினால் தான். இஸ்ரயேல் மக்கள் கட்டாந்தரையைக் கடப்பது போல செங்கடலை கடந்து சென்றதும் நம்பிக்கையினால் தான். ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது, தம் மகன் ஈசாக்கை பலியிடத்துணிந்தது நம்பிக்கையினால் தான்.

இவ்வாறு மக்கள் ஆண்டவர் மீது நம்பிக்கையோடு இருந்தார்கள். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நம்பிக்கையினாலேயே இவர்கள் அனைத்திலும் வென்றார்கள். நேர்மையாகச் செயல்பட்டார்கள். வலுவற்றவராயிருந்தும் வலிமை பெற்ற வாள்முனைக்கு தப்பினார்கள். இவ்வாறு இவர்கள் அனைவரும் தம் நம்பிக்கையினாலே நற்சான்று பெற்றார்கள். இப்பரபரப்பான உலகிலே நமது நம்பிக்கையை சிந்தித்து பார்போம்.

பாரம்பரிய கிறிஸ்தவர்களாய் நாம் இருந்த போதிலும், சில நேரங்களிலே நாம் ஆண்டவரை விட்டு வெகு தூரம் சென்றதுண்டு, காரணம் பல நேரங்களிலே நாம் சந்தித்த ஏமாற்றங்களும், தோல்விகளுமே. எனவே எந்த சூழலிலும் ஆண்டவர் என்னோடு இருக்கிறார். அவர் எனக்காய் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்பதனை உணர்ந்து நம்பிக்கையோடு நம் வாழ்வைத் தொடர்வோம்.

தொகுப்பு: ஜெரால்டின் ஜெனிபர்

Tags : Hope ,
× RELATED மல்லுவுட்டுக்கு சவால் விடும் ஒரு நொடி; ஆரி நம்பிக்கை