×

ஞான நீறு தருவோனே

மதுரையை ஆண்ட கூன்பாண்டியனது நற்குணங்கள் பற்றியும் அத்தலத் திருப்புகழில் பதிவு செய்துள்ளார் அருணகிரியார்.

‘‘சகல வேத  சாமுத் ரியங்கள்
சமயமாறு லோகத்ரயங்கள்
தருமநீதி சேர் தத்துவங்கள்   - தவயோகம்
தவறி  லாம   லாளப் பிறந்த
தமிழ் செய் மாறர் கூன் வெப்பொடன்று
தவிர ஆல வாயிற் சிறந்த பெருமாளே ’’

[சகல வேதங்களிலும் கூறப்பட்ட முத்தி இலக்கணங்கள், ஆறு சமயங்கள், மூவுலகங்கள், தர்ம நீதிகள் வெளிப்படுத்தும் உண்மைகள், தவ வாழ்க்கை, யோகமார்கள் இவையனைத்தும் சிறந்தோங்கும் படிக்  குற்றமில்லாமல் ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த கூன் பாண்டியரின் சுரம் நீங்க மதுரைத் திரு ஆலவாயிலில் சிறந்து வீற்றிருக்கும் பெருமாளே !]
‘வாழ்க அந்தணர்’ எனும் பதிகத்தில் சம்பந்தர்’ வேந்தனும் ஓங்குக’ என்று வாழ்த்தியதால் கூன் பாண்டியன் தனக்கு முன்னும் பின்னும் இருந்த கூன் நீங்கி ‘நின்ற சீர் நெடுமாற’ நாயனராயினான்.

‘‘வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே’’ - கதிர்காமம்
கூடலான் முது கூனன்றோட வாதுயர் வேதங்
கூறு நாவல மேவுந் தமிழ்வீரா ’’    [பாகை]

[கூன் பாண்டியனுடைய நெடுநாள் கூன் அன்று தொலைந்து முதுகுநிமிரும்படி சமணரோடு செய்த வாதின் போது உயர்ந்த வேதப் பொருள் கொண்ட தமிழ்ப் பாடல்களைப் பாடிய தமிழ் வீரனே !]
‘‘பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு
பஞ்சற வாது கூறு சமண்மூகர்
பண்பறு பீலியோடு வெங்கழுவேற   ஓது
பண்டித ! ஞான நீறு தருவோனே ’’
[ கொங்கணகிரி]
[ பஞ்சவன்  - பாண்டியன் ]       
[ பாண்டியனுக்கு நெடு நாளாயிருந்த பெரிய கூனும், வந்து சேர்ந்த ஜூரமும், பஞ்சாகப் பறந்தோடும்படி வாது பேசி, பேசுவதறியாது ஊமைகளாய்த் திகைத்து நின்ற சமணர்கள் சீரழிந்து, அவர்களுடைய மயிற்பீலியுடனே கழுவில் ஏற முடிவு செயும்படிச் செய்த பண்டிதனே ! ஞானத் திருநீற்றைப் பாண்டியனுக்கு அளித்தவனே !]
 
‘‘சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினையளவு சென்று பட்ட போதினில் தெளிய’’ என்று ஒரு பழநிப்பாடலில் அழகுறப் பாடுகிறார். இதையே கந்தர் அந்தாதி நூலில்’’ தென்னன் அங்கத்திருக்கை (கூனை) அம்போருகக் கை ( பங்கயக்கரம்) நீற்றின் மாற்றி’’ என்று பாடுகிறார்.

மதுரை மாநகரில் நரிகளைப் பரிகளாக்கி, மாணிக்கவாசகர் பொருட்டு குதிரைச்சாமியாக வந்து இறைவன் நடத்திய திருவிளையாடல் பற்றி ஏற்கனவே ஆவுடையார் கோயில் பற்றிய கட்டுரையில் பார்த்தோம். இரவோடிரவாகப் பரிகளனைத்தும் மீண்டும் நரிகளாகிக் காட்டிற்கு ஓடிப் போயின, செய்தியறிந்து வெகுண்ட பாண்டியன், மாணிக்கவாசகரை வைகைக் கரையில் சுடுமணலில் நிற்க வைத்துத் தண்டித்தான்.

இறைவன் பக்தனுக்காகத் தன் திருவிளையாடலைத் துவக்கினான். வைகையாற்றில் கங்கையைப் பெருகச் செய்தான். வெள்ளம் பெருகிய போது கரைகளைப் பலப்படுத்த வீட்டுக்கு ஒரு ஆள் வீதம் வந்து மண் எடுத்துப் போடும்படி ஆணையிட்டான் அரசன், பிட்டு சமைத்து விற்றுக் கொண்டிருந்த வந்திக் கிழவி தன் வீட்டில் அவ்வாறு அனுப்ப யாருமில்லையே என்று வருந்திய போது, இறைவனே ஒரு இளைஞனாக அவள் வீட்டிற்கு வந்து தான் அவள் சார்பாக வேலை செய்வதாகவும், கூலியாகப் பிட்டு கொடுத்தால் போதும் என்றும் கூறினான், வந்தி தந்த உதிர் பிட்டை உண்டுவிட்டு, வைகைக் கரைக்குச் சென்று மண்ணைவாரி அங்குமிங்குமாகப் போட்டு விளையாடிவிட்டு, கொன்றை மரத்தடியில் படுத்து உறங்கினான் இளைஞனாக வந்த இறைவன் !ஒற்றர்கள் மூலம் செய்தியறிந்த அரசன், இளைஞன் முதுகில் பிரம்பால் ஓங்கி அடித்தான். இதை ‘‘கூடற்கே வைகையிற்கரை கட்டிட ஆளொப்பாய் உதிர் பிட்டமுதுக்கடி படுவோன்’’ என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.‘‘வேற்றுருவிற் போந்து மதுராபுரியிலாடி வைகை
யாற்றின் மணற்றாங்கு மழுவாளி என தாதை. . . .

கூடலையாற்றூர் திருப்புகழ்

‘‘வைகையாற்றின் மீது நடமிட்டு மண்ணெடுத்து
மகிழ்மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன்’’

என்று மதுரையிலும் பாடியுள்ளார்.இளைஞன் உருவிலிருந்த இறைவன் முதுகில் அடிபட்ட அதே நேரம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் முதுகிலும் அந்த அடி விழுந்தது ; அரசன் முதுகிலும் பட்டது. இளைஞன் மாயமாகிவிட, அசரீரியாக இறைவன் மாணிக்கவாசகரின் பெருமையை மன்னனுக்கு உணர்த்தினான். மதுரையிலேயே தொடர்ந்து தங்குமாறு மன்னன் எவ்வளவோ மன்றாடியும், மணிவாசகர், இறைவன் குருவாய் வந்து தனக்கு ‘ஞானப்பிரசங்கம்’ செய்த திருப் பெருந்துறைக்கே திரும்பி விட்டார். இறைவன் பிரம்படி பட்ட நிகழ்ச்சியைக் கேட்ட வள்ளலார் நெஞ்சுருகப் பாடுகிறார்;

‘‘வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்ட
நின் பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில்,
புவிநடையாம் துன்பட்ட வீரர் அந்தோ ! வாதவூரர்
தம் தூய நெஞ்சம் என்பட்டதோ ? இன்று கேட்ட
என் நெஞ்சம் இடிபட்டதே ’’

என்பது அப்பாடல்‘பரவு நெடுங்கதிரி’ எனத் துவங்கும் அழகிய மதுரைத் திருப்புகழில் ‘‘ மலைப்பிரதேசங்களில் உலாவி நிறைந்து ஒழுங்கான காட்சியைத் தருகின்ற உனது திருவடிகளை நான் பாடி அதைக் கேட்டு அன்பர்கள் மகிழ வேண்டும்’’ என்று விண்ணப்பிக்கிறார். இங்கு அவர் கேட்ட வரம் கிட்டியதால் ‘‘ சீர்பாத வகுப்பு ’’ எனப்படும் தனி வகுப்பையே அருணகிரியார் பாடியுள்ளார். மதுரைத் திருப்புகழை இங்கு விரும்பிய

‘‘பரவு நெடுங்கதி ருகலில் விரும்பிய
பவனி வரும்படி அதனாலே
பகர  வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினி லெங்கணும்   உலவி நிறைந்தது
வரிசை தரும்  பத  மது பாடி
வளமொடு செந்தமிழ் உரை செய அன்பரு

மகிழ வரங்களும் அருள்வாயே
அரஹர சுந்தர  அறுமுக என்றுனி
அடியர்  பணிந்திட    மகிழ்வோனே
அசல நெடுங்கொடி  அமையுமை தன் சுத
குறமகளி ங்கித மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் பெருமாளே ’’

அனைவராலும் போற்றப்படும் சூரியன் உலா வருவதனால் உலகில் அழகிய வளங்கள் பலவும் இலகி விளங்குகின்றன. அதே போன்று, நிலவொளியும் இருளை விலக்குகிறது. சூரிய- சந்திரர் ஒளி போன்று ஒளி வீசும் முருகனது திருவடிகள் உலகோர்க்கு அனைத்து வளங்களையும் அளித்து அஞ்ஞான இருளை ஒழிக்கின்றன எனும் பொருளுடன் முதல் இரு அடிகள் அமைந்துள்ளன.

சூரியன் - சந்திரனுக்கு ஒப்பாக வளங்கள் அளிப்பனவும் அக இருளை நீக்குவனவும், மலைப் பிரதேசங்கள் அனைத்திலும் உலவி நின்று ஒழுங்கான காட்சி தருவனவும் ஆன உன் திருவடிகளின் பெருமையைச் செழுமை வளத்துடன் கூடிய செந்தமிழ்ப் பாக்களால் நான் புகழுவதற்கும், அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் மகிழவும் வரங்களைத் தந்து அருள்புரிவாயாக.

 இதே கருத்தை,
‘‘ஈராறு தோளும் ஆறு  மாமுக
மோடாரு நீப வாச மாலையும்
ஏரான தோகை, நீலவாசியும் அன்பினாலே
ஏனோரும் ஓதுமாறு   தீதற
நான் ஆசு பாடி ஆடி  நாடொறும்
ஈடேறுமாறு பாடலிலும் தெரிவிக்கிறார்.
எனும் ஒரு பொதுப் பாடலிலும் தெரிவிக்கிறார்.

அரஹர, சுந்தர, அறுமுக என்றெல்லாம் உன்னைத் தியானித்து அடியார் வணங்க, மகிழ்ச்சி கொள்பவனே ! இமய மலையில் தோன்றிய பெருமை வாய்ந்த கொடி போன்ற உலகமாதாவான உமா தேவி ஈன்ற புதல்வனே ! வள்ளிநாச்சியாரின் இனிய காதலனே ! நினைப்பதற்கரிய வலிமை படைத்த தோள்களை உடையவனே ! [ ‘‘பழுதுறாத பாவாணர் எழுதொணாத தோள்வீர’’ - பொதுத் திருப்புகழ்] நாணற் பொய்கையில் உதித்தவனே ! குங்குமப்பூ சேர்க்கப்பட்ட சந்தனக் கலவை பூசியுள்ளதும் ரத்தின மாலைகளை அணிந்துள்ளதுமான திருமார்பினனே ! பொன்னொளி வீசும் மாடங்கள் நிரம்பிய ஊரான வளம் மிக்க மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே ! இளையனார் வேலூர்த் திருப்புகழில் வரும் மதுரை பற்றிய குறிப்பில் பாண்டிமா தேவி மங்கையர்க்கரசியின் பக்திச் சிறப்பையும் பாடியுள்ளார்.
 
‘‘மதுரை நாட்டினிலே வாழ்வாகிய
அருகர் வாக்கினிலே சார்வாகிய
வழுதிமேல் திருநீறு பூசி நிமிர்ந்து கூனும்
மருவு மாற்றெதிர் வீறோ டேறிட
அழகி போற்றிய மாறாலாகிய
மகிமையால் சமண் வேரோடேகெட  வென்ற கோவே ’’

என்பது அப்பாடல் , பொருள் :-
 மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டினில் வாழ்ந்திருந்த, சைவ சமயத்திலிருந்து நீங்கி சமணர் கோப்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்த பாண்டிய மன்னனின் உடம்பில் திருநீற்றைப் பூசி அதனால் பிறவியிலே இருந்த முதுகு கூனும் நிமிர்த்தியவனே !
பெருகி ஓடும் வைகை ஆற்றில் திருப்பாசுரம் எழுதப்பட்ட ஏடு வெள்ளத்தை எதிர்த்து மேலே செல்லவும், அழகு நிறைந்த மங்கையர்க்கரசியின் சிவ பக்தியின் பெருமையால் மாறுபட்டு பகைத்திருந்த அமணர் கூட்டம் வேரோடு அழியவும் செய்து வெற்றி பெற்ற தலைவனே 1’’
என்று பாடியுள்ளார்.

‘‘மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணி செய்து நாடொறும் பரவ
பொங்கழுலுருவன் பூதநாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கையற் கண்ணி தன்னொடுமமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே ’’

என்கிறர் சம்பந்தப் பெருமான்.மதுரை நகரின் எல்லையை மன்னனுக்கு உணர்த்த இறைவன் தன் கங்கணமாயிருந்த பாம்பினை எடுத்து விட, அது வட்ட வடிவமாகித் தன் வாலை வாயால் கவ்வியது. அவ்வட்ட வடிவமே எல்லையாகக் கொள்ளப்பட்டது. இவ்வாறு நாகம் தன் வாயால் கவ்வி எல்லையைக் காட்டியதால் மதுரை, ‘ஆலவாய், எனப்பட்டது.          

மீனாட்சி கோயிலில் மூன்று பிராகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் இரு சுற்றுகள் கோயிலுக்குள் சுந்தரேஸ்வரருக்கும்
மீனாட்சியம்மைக்கும் தனித்தனியாக அமைந்துள்ளன. மூன்றாவது திருச்சுற்று 847 அடி நீளமும் 792 அடி அகலமும் கொண்ட மதிலின்
உட்புறம் அமைந்துள்ளது. இதனை ஆடி வீதி என்பர்.

சித்திரை மாதம் நடக்கும் திருக்கல்யாண விழா மேற்கு ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைந்துள்ள திருப்புகழ் மண்டபத்தின் அருகில் நிகழ்த்தப் பெறுகிறது.ஆவணி மூலத் திருவிழா பிட்டு உற்சவம் எனப்படும் ஐதீக விழாவாகும். எட்டாம் நாள் உற்சவத்தில் குதிரை கயிறு மாற்றுதல் மற்றும் நரி பரியாக மாறியது ஆகிய சம்பவங்கள் ஐதீகமாக நடைபெறும். ஒன்பதாம் நாள் பக்தர்கள் ஏராளமாக பிட்டு செய்து கொண்டு வந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பர்.பிறந்த வீட்டிற்குச் சென்று தாய் தந்தையரைத் தரிசித்த மகிழ்வுடன் உலகிற்கே தாய் - தந்தையாக விளங்கும் அங்கயற்- கண்ணி- ஆலவாய். அழகனை வணங்கி வெளியே வருகிறோம்.

(உலா தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

Tags :
× RELATED திருவேங்கடமுடையானின் தாகத்தை தீர்த்தவர்