×

சென்னையின் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்; இன்று நடக்கிறது

சென்னை: சென்னையின் 19 மண்டலங்களில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது, என உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம், ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று (13ம் தேதி) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு – மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சென்னையின் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்; இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Ration Card ,Grievance ,Camp ,Mandals ,Chennai ,Food Supply Department ,Ration Card Grievance Camp ,
× RELATED காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு...