சென்னை: அஜித்குமாருக்கு அனோஷ்கா மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இதில் அஜித்தின் மகன் ஆத்விக், விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். குறிப்பாக கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் இவர் சென்னையின் எஃப்சி ஜூனியர் அணியில் இடம்பெற்று இருக்கிறார். பள்ளியில் படித்து வரும் ஆத்விக், அங்கு நடைபெற்ற ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொண்டு அதில் முதலிடம் பிடித்திருக்கிறார். அதுவும் ஒன்றல்ல மொத்தம் 3 ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்ட ஆத்விக் மூன்றிலும் முதலிடம் பிடித்து 3 தங்க மெடல்களையும் வாங்கி உள்ளார்.
முதலில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆத்விக், வேகமாக ஓடி வந்து முதலிடம் பிடித்தார். பின்னர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தன்னுடைய அணிக்காக ஓடிய ஆத்விக் அதிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். மகன் ஓடியதை வீடியோ எடுத்த ஷாலினி, அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தந்தையைப் போலவே மகனும் விளையாட்டில் சாதிக்கிறான் என வாழ்த்தி வருகின்றனர். அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.