×

உயர்வான வாழ்வு அருளும் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி

ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்தில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி. 700 ஆண்டுகளுக்கும் மேலான  பழமையான தலத்தின் மதில் சுவரில் புடைப்புச் சிற்ப அமைப்பில் உள்ள மீன் சின்னங்கள் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தலம்  எழுப்பப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.  600 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தலத்திற்கு அருகில் உள்ள கிராமமான எம்மாம்பூண்டியைச் சேர்ந்த  முத்துக்குமார செட்டியார் என்பவர் முழுமையாக புனரமைத்து திருப்பணிகள் செய்தார் என்கிறது தல புராணம்.

ஊரையொட்டி அற்புத சிறு மலை இருப்பதால் இந்த ஊரின் பெயர் மலையப்பாளையம் என வழங்கலாயிற்று. இந்த மலை மீதுள்ள தலத்திற்குச் செல்ல  தார் சாலை தனியாகவும், 68 படிக்கட்டுகள் உள்ள பாதை தனியாகவும் உள்ளது. படிக்கட்டு வழியாக மலையேற துவங்கும் போது  அடிவாரத்தில்  அழகிய தோரணவாயில் உள்ளது. தோரணவாயிலினுள் நுழையும் முன் கிழக்கு நோக்கி விநாயகப்பெருமான் ராகு,கேதுவுடன் வீற்றிருக்கிறார்.  இடும்பக்குமரன் தனி சந்நதியில் மேற்கு பார்த்தவாறு சக்திகிரி, சிவகிரியை காவடியில் சுமந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர்களை தரிசித்த  பின்னர் மலையேறினால் தனி சந்நதியில் பழமைவாய்ந்த நாகர் திருமேனிகள் உள்ளன. அதனையடுத்து பாறையில் வடிக்கப்பெற்ற ஐந்து தலையுடன்  கூடிய ஆதிசேஷனின் தரிசனம் கிடைக்கின்றது. பின்னர் இன்னும் ஒரு சில படிகள் மேலேறினால் தனிச் சந்நதியில் பக்த ஆஞ்சநேயர் சேவை  சாதிக்கிறார். அஞ்சனை மைந்தனை சேவித்த பின் ஒரு சில படியேறினால் மூலவர் அருள்பாலிக்கும் ஆலயத்தை அடையலாம்.

கிழக்கு நோக்கிய ஆலயத்தின் நுழைவாயிலுக்கு முன் தீபஸ்தம்பம் உள்ளது. ஆலயத்தில் நுழைந்ததும் கல்யாண மண்டபத்தில் முதலில் கல்லால்  ஆன சிறு விளக்குத் தூண் உள்ளது. அதனையடுத்து பலிபீடம், கொடிமரம், மயில் அதன் அருகில் நாகம் உள்ளது. இவற்றைக் கடந்து சென்றதும் மகா  மண்டபத்தின் முகப்பில் துவார பாலகர்கள் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தினுள் சந்நதி விநாயகர் குடிகொண்டுள்ளார். தெற்கு நோக்கியுள்ள  சந்நதியில் உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தைக் கடந்து கருவறையை நோக்கினால் சித்திரை மாதம் 13,14,15 ஆகிய தினங்களில் சூரிய  பகவான் ஆராதிக்கும் அற்புதம் கொண்ட மூலவர் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி இடது கையினை இடுப்பில் வைத்தும், வலது கையில்  தண்டத்துடன், வேலினையும் ஏந்தி திருக்காட்சியளிக்கிறார். வேண்டிடுவோரின் வாழ்வில் வினைகள் தீர்த்து வெற்றிக்கு துணையிருப்பான் இந்த  வேலவன்.

முருகப்பெருமானின் சந்நதியின் வலது பாகத்தில் காசி விஸ்வநாதர் சந்நதியும்,இடது பாகத்தில் காசி விசாலாட்சி சந்நதியும் உள்ளது.  சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் நடுவில் முருகப்பெருமான் இருக்கும் அமைப்பை சோமாஸ்கந்த அமைப்பு என்பர். இங்கு சிவபெருமானுக்கும்,  அம்பாளுக்கும் நடுவில் முருகப்பெருமான் அருள்பாலிப்பதால் இத்தலம் சோமாஸ்கந்த தலமாக விளங்குகிறது. காசி விஸ்வநாதர் சந்நதியின் கோஷ்ட  மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய கடவுளர்கள் காட்சி தருகின்றனர். சிவனுக்கும், அம்பாளுக்கும் இத்தலத்தில்  நந்தியெம்பெருமானே வாகனமாக உள்ளார்.

உள் பிராகாரத்தில் நால்வர் பெருமக்கள், கன்னிமூல கணபதி, அதனையடுத்து அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆறு தனித்தனி சந்நதிகளில் முதல்  சந்நதியில் ஸஹஸ்ரலிங்கம், அடுத்துள்ள சந்நதிகளில் பிருதிவி,அப்பு,தேயு,வாயு,ஆகாயம் என பஞ்சலிங்க தரிசனம் கிடைக்கின்றது. சண்டிகேஸ்வரர்,  தலவிருட்சமான வில்வ மரத்தடியில் வில்வவிநாயகர் மற்றும் சுயம்பு தெய்வங்கள் தரிசனம் கிடைக்கின்றன.சிறிய வடிவிலான தண்டாயுதபாணி,  மகாலட்சுமி,காலபைரவர்,சூரியன்,சந்திரன்,அருணகிரிநாதர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் தனித்தனி சந்நதிகளில் குடிகொண்டுள்ளனர்.

வெளிப்பிராகாரத்தில் ஆலயத்தின் தெற்கு வாசலுக்கு முன்பாக நர்த்தன விநாயகர் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் வடக்குப் பகுதியில் சரவணப்  பொய்கை தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் குளத்தின் முன்பு விநாயகப்பெருமானுக்கு தனி சந்நதி உள்ளது. இந்த தீர்த்தப்பொய்கையில் உடலில் தேமல், கட்டி  போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால்,  விரைவில் தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்!

செவ்வாய்க்கிழமை,கிருத்திகை,வளர்பிறை சஷ்டி,தேய்பிறை அஷ்டமி,பிரதோஷம் போன்ற முக்கிய விரத தினங்களில் அந்தந்த விரத தினங்களுக்குரிய  தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெறுகிறது.  கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவின்போது,சிறப்பு பூஜைகள்,விசேஷ அலங்காரங்கள்,  திருவீதியுலாக்கள் என விமரிசையாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.இந்த நாளில், தீராத நோயால் அவதிப்படுவோர் மற்றும் கடன் தொல்லையால்  சிக்கித் தவிப்பவர்கள், வியாபாரத்தில் அதிகலாபம் கிடைக்கவேண்டும் என வேண்டுவோர் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்வார்கள்.  அதேபோல், உதயகிரி வேலவனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து 108 தீபமேற்றி வழிபட்டால் திருமணத் தடையுள்ளவர்களுக்கு விரைவில்  திருமணத் தடைகள் நீங்கும்.கல்யாண வரம் கைகூடி வரும்.பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சத்துடன்  வாழலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவதைத் தரிசிப்பது விசேஷம் என்பதால்  இந்த நாட்களில் ஈரோடு மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வார்கள்.தைப்பூசத் தேர்த் திருவிழா  திருகொடியேற்றுதலில் ஆரம்பித்து மஞ்சள் நீர் உற்சவம்,மயில் வாகன காட்சி முடிய  14 நாட்கள் விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டு பெருவிழாவாக  கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டம்,நம்பியூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் மலையப்பாளையம் தலம் உள்ளது.அடிக்கடி பேருந்து வசதி  இருக்கின்றது.ஆட்டோ,கால்டாக்சி வசதியும் உள்ளது. காலை 7 - 12.30, மாலை 4 -7.30 வரை கோயில் நடை திறந்திருக்கும்.

தொகுப்பு: சென்னிவீரம்பாளையம் செ.சு.சரவணகுமார்

Tags : Udayagiri Muthuveliyudha Swamy ,
× RELATED ஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்