சென்னை: நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சிங்கிளாக இருக்கிறார் நடிகை சமந்தா. மணமுறிவுக்கு பிறகு பெண்களின் நிலை பற்றி அவர் உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது: விவாகரத்து ஆன பெண்களை பலவிதமாக வசைபாடுவார்கள். அது எந்த அளவுக்குப் போகும் என்றால், செகண்ட் ஹேண்ட், பயன்படுத்தப்பட்டது, வீணான வாழ்க்கை’ என்றெல்லாம் சொல்வார்கள். அதுமட்டுமல்ல, உங்களை ஒரு மூலைக்குத் தள்ளுவார்கள்.
ஒரு பெண் விவாகரத்து பெற்றால், பெண்கள் வட்டத்தில் அவர்களை குற்றவாளி போல பார்ப்பார்கள். மேலும், அவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிட்டார்கள் என்று நினைப்பார்கள். அவர்களை விதவிதமாக அவமானப்படுத்துவார்கள். நீங்கள் ஒருமுறை விவாகரத்து பெற்றவர் என்று தெரிந்தால், உங்களைப் பெண்கள் கூட்டம் பார்ப்பதே மாறிவிடும்.
நம் சமூகத்தில் விவாகரத்து ஆன பெண்கள், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நிறைய வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். காரணம், சமூகம் விவாகரத்து ஆனவர்களைப் பார்ப்பதே விசித்திரமாக இருக்கிறது. நான் சமூகம் என்று சொல்லும்போது, அது பெண்கள் சமூகம். ஏனென்றால், நான் பெண், ஆண் அல்ல, அதனால்தான் நான் எதைப் பேசினாலும் பெண்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். ஏனென்றால், ஆண்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’. இவ்வாறு சமந்தா கூறினார்.