×

நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் 2 மாவட்ட நிர்வாகத்தில் சிக்கி தவிக்கும் இரு கிராம மக்கள்; பூந்தமல்லி அருகே போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா, செம்பரம்பாக்கம் ஊராட்சியில் செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் செம்பரம்பாக்கம் கிராமம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா வருவாய்த்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் வருகிறது. பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகா வருவாய்த்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் வருகிறது. ஒரே ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் இரண்டு மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் வருவதால் பல்வேறு குழப்பங்களில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர். இதனால் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டவர்கள் பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பா.வின்சென்ட் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் வரவேற்றார். துணைத்தலைவர் கன்னியம்மாள் ருத்ரகுமார், வார்டு உறுப்பினர்கள் மோகன், உண்ணாமலை ராஜேந்திரன், பிரபாகரன், ரேகா மணிகண்டன், பிரவின்குமார், பால்எசேக்கியல், தினேஷ்குமார், லாவண்யா ஸ்ரீதர், ரமணி தனபால், சந்திரிகா சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகர் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர், பாப்பன்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலின்போது திருவள்ளூர் மாவட்ட எல்லையில் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், நிலம் சம்பந்தப்பட்ட வரி வசூல் செய்தல், பட்டா, சிட்டா வழங்குவது உள்ளிட்டவைகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரும்புதூர் தாலுகாவுக்கு செல்லவேண்டும். தேர்தலில் வாக்களிப்பது, கல்வித்துறை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, காவல் நிலையம், சுகாதாரம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா நிர்வாகத்தில் உள்ளது. இது குழப்பத்தையும் அலைச்சலையும் ஏற்படுத்துகிறது. பழஞ்சூர், பாப்பன்சத்திரம் ஆகிய கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்கவேண்டும். இதுசம்பந்தமாக பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ெதாடரப்பட்டு இரண்டு கிராமங்களையும் 6 வாரத்துக்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்கவேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரண்டு மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழக அரசு 1999- ல் வெளியிட்டு உள்ள அரசாணைப்படி, பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்களையும் திருவள்ளூர் மாவட்டம் , பூந்தமல்லி தாலுக்காவில் இணைக்க வேண்டும். எனவே அந்த அரசு ஆணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் தேர்தலை புறக்கணிப்போம். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு வழங்கிய சான்றிதழ் உள்ளிட்டவைகளை அரசிடமே திருப்பி அளிப்போம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். …

The post நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் 2 மாவட்ட நிர்வாகத்தில் சிக்கி தவிக்கும் இரு கிராம மக்கள்; பூந்தமல்லி அருகே போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Thiruvallur ,Thiruvallur District ,Poontamalli Taluk ,Sembarambakkam Panchayat ,Sembarambakkam ,Palanjoor ,Papanchatram ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது